Last Updated : 09 Aug, 2015 11:37 AM

 

Published : 09 Aug 2015 11:37 AM
Last Updated : 09 Aug 2015 11:37 AM

இந்தியச் சமூகத்தில் பழங்குடிகள் புறக்கணிப்பு

| ஆகஸ்ட் 9 - பழங்குடியினர் தினம் |

சாதி அமைப்பு முறையால், இந்தியா எப்போதுமே சமத்துவமற்ற சமுதாயமாகவே இருக்கிறது. இதில் கவலையளிப்பது என்னவென்றால், கடந்த 20 ஆண்டுகளில் இந்த சமமின்மை மேலும் அதிகரித்திருப்பதுதான்.

பாலினம், வர்க்கம், சாதி, பிராந்தியம், மதம், இனம் என்று பல்வேறு விதங்களில் மக்கள் சமமற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் அனைவரிலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பழங்குடி இனத்தவர்கள்தான். வசிப்பிட அடிப்படையிலும் இன அடிப்படையிலும் அதிகம் வஞ்சிக்கப்படுகிறவர்கள் அவர்கள்தான்.

பிராந்திய அளவிலான ஏற்றத் தாழ்வுகளைத் துல்லிய மாக நாம் அறிய வேண்டும் என்றால் மாநில, மாவட்ட அளவில் பார்க்காமல் வட்டார அளவில் பார்க்க வேண்டும் என்று ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ என்ற பத்திரிகையில் பிரசுரமான ஆய்வறிக்கையில் சஞ்சிதா பக்ஷி வலியுறுத்துகிறார். மிகவும் பின்தங்கியிருக்கிற வட்டாரங்களை ஆராய்ந்தால், அங்கு பழங்குடிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பது தெரியும் என்கிறார்.

மறக்கப்பட்ட பழங்குடிகள்

வருவாய், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, அடித்தளக் கட்டமைப்பு, அரசு நிர்வாகம் என்று எந்த அம்சத்தை அடிப்படையாகக்கொண்டு பார்த்தாலும், பழங்குடிகள்தான் மிகவும் பின்தங்கிய நிலையிலிருப்பது தெரியும். நாட்டின் வளர்ச்சிக்காக என்று எடுக்கப்படும் நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்களும் அவர்கள்தான். வளர்ச்சித் திட்டங்களுக்காகத் தங்களுடைய வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 கோடி மக்களில் 40% பேர் பழங்குடிகளே. நிலக்கரி வயல்களில் 90%-ம் இதர கனிம நிலங்களில் 50%-ம், பெரிய அணைகளும் இருப்பது பழங்குடிகளின் வசிப்பிடப் பகுதிகளாக இருப்பதால் இது வியப்பை அளிக்கவில்லை.

அரசுக்குக் கிடைக்கும் வருவாய் அடிப்படையில், நன்கு வளர்ச்சி அடைந்த மாவட்டங்கள் என்று அடையாளம் காணப்படும் பகுதிகள், சமூக, கலாச்சார, பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக இருக்கும் விநோதம் இந்தியாவில்தான் காணப்படுகிறது. 92 மாவட்டங்களில், நன்கு வளர்ச்சி அடைந்தவை என்று பட்டியலிட்டால் வருவனவற்றில் 20%-ம், மிகவும் பின்தங்கியவை என்று பட்டியலிட்டால் வருவனவற்றில் கடைசி 20%-ம் இந்தப் பழங்குடிகள் வட்டங்களாக இருக்கின்றன.

உதாரணத்துக்கு, தாணே, வடோதரா, ராஞ்சி, விசாகப்பட்டினம், ராய்ப்பூர் போன்ற முன்னேறிய மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய வட்டாரங்கள் இருக்கின்றன. சத்தீஸ்கரின் கோர்பா, ராய்கட் மாவட்டங்களிலும் குஜராத்தின் வல்சாட்டிலும், ஜார்க்கண்டில் மேற்கு சிங்பும், கிழக்கு சிங்பும், ஒடிசாவின் கெண்டுஜார், கோராபுட், மயூர்பஞ்ச் ஆகியவை மிகவும் தொழில்வளம் பெற்ற - அதே சமயம் மிகவும் பின்தங்கிய - வட்டாரங்களால் சூழப்பட்ட பகுதிகளாகும். வளர்ச்சியில் இந்தப் பழங்குடி மக்களுக்கு எந்தப் பலனும் தரப்படுவதில்லை என்பதையே இவை உணர்த்துகின்றன.

ஏற்றத்தாழ்வுகள் அநீதியை ஏற்படுத்துகின்றன என்பதுடன் வளர்ச்சியையும் நாசப்படுத்தும் தன்மை கொண்டவை. ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தால் ஏழைகளால் கல்விக்கு அதிகம் செலவிட முடியாது. ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதும் தொடர் வளர்ச்சியும்தான் பொருளாதார முன்னேற்றம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

அனைவருக்குமான வளர்ச்சி

‘அனைவருக்குமான வளர்ச்சி’, ‘விலக்கப்பட்ட வர்களுக்கு அதிகாரம்’ என்பது வளர்ச்சிக்கான கூறுக ளாகும். முதலாவதாக வளர்ச்சியின் திசை மாற வேண்டும். வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி என்ற இப்போதைய நிலை தொடரக் கூடாது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை மட்டுமே குறியாக வைத்து வளர்ச்சிக்குப் பாடுபடக் கூடாது. குறு, சிறு, நடுத்தரத் தொழில்பிரிவுகள் வேகமாக வளர்ந்தால் அதனால் வேலைவாய்ப்பும் வருவாய் ஈட்டும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

சேவைத் துறையிலும், மூலப் பொருட்களை அகழ்ந்தெடுக்கும் துறையிலும் கிடைக்கும் வளர்ச்சியைவிட, அதில் அதிகமாக இருக்கும். வளர்ச்சியோ வேலைவாய்ப்போ தொடர்ச்சியாக இருக்க வேண்டும். பழங்குடிகளுக்குத் தரும் உதவியானது பூச்சிமருந்துகளற்ற சாகுபடி முறை போன்றதாக இருக்க வேண்டும். அதனால் உற்பத்திச் செலவும் குறையும், சுற்றுச்சூழல் வளமும் பேணப்படும். வனங்களில் மரம் தவிர்த்து எத்தனையோ வளங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாகவும் வனங்களுக்குப் பாதிப்பில்லாமலும் எடுத்துப் பயன்படுத்தினால் அதன் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு வரும். இதைச் செய்யும்போது வனவாசிகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். வனத் துறையும் பழங்குடிகளும் வனத்தை மையமாகக்கொண்டவர்களாக இருந்தாலும் நேரெதிர் துருவங்களாக இருக்கின்றனர்.

பங்கேற்பு நிர்வாகம்

பழங்குடிகளின் பிரதேசங்கள் அரசு நிர்வாகத்தின் தோல்விகளால்தான் பின்தங்கியிருக்கின்றன. வளர்ச் சியால் கிடைக்கும் வாய்ப்புகளைக்கூடப் பழங்குடிகள் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம் கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் பின்தங்கியிருப்பதுதான். உலக அளவில் இந்தியாதான் தன்னுடைய வருவாயில் மிகக் குறைந்த அளவை கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காகச் செலவிடுகிறது. இத்துறைகளில் அவசரச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மக்களுக்குத் தேவைப்படும் தொழில்திறமைகளைக் கற்றுத்தந்தாக வேண்டும். வறுமை ஒழிப்புக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றை மேற்கொள்வதற்கான மனிதவளம் அவர்களிடம் இல்லை.

இப்போது மாறிக்கொண்டிருக்கும் பொருளாதாரச் சூழலின் முக்கிய அம்சமே அதன் வளர்ந்துவரும் சந்தை தான். இந்திய விவசாயிகளில் 80%-க்கும் மேற்பட்டோர் சிறு மற்றும் குறு விவசாயிகள்தான். அவர்களால் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரத்தில் பங்கேற்க முடியவில்லை. அவர்களே நேரடியாக வாங்கி விற்கும் ஒரு சந்தை ஏற்படுத்தப்பட்டுவிட்டால் நிலைமை மாறிவிடும்.

விலக்கப்பட்ட பகுதிகளுக்கும் வளர்ச்சியின் வட்டத்துக்குள் வராத மக்களுக்கும் தேவைப்படுவது நல்ல நிர்வாகம்தான். அது பங்கேற்பு நிர்வாகமாகவும் அமைய வேண்டும். இதற்கு கிராம சபை போன்ற பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். சமூகத்தின் கடைசிப் பிரிவு மக்களையும் முடிவெடுத்தலில் நாம் ஈடுபடுத்த வேண்டும். பொதுக் காரியத்துக்காக நிலம் எடுக்கும்போது அவர்களுடைய சம்மதத்தையும் கேட்டுப்பெற வேண்டும்.

முதலாளித்துவ அமைப்பில் வருவாய் ஏற்றத் தாழ்வோ, சமூக ஏற்றத் தாழ்வோ தானாக மறைந்துவிடாது. சரியான கொள்கைகளும் திட்டமிடலும் இல்லாவிட்டால் ‘குஸ்நெட் வளைவு’ நடைமுறையில் சாத்தியமாகாமல் போகலாம். 20-ம் நூற்றாண்டின் மையப் பகுதியில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உத்தியை அரசே செயல்படுத்தியது ‘முதலாளித்துவத்தின் பொற்காலம்’ என்று போற்றப்படுகிறது. அப்போது மக்களின் ஏற்றத் தாழ்வுகள் குறைந்து வளம் பெருகியது. 1980-களின் இறுதியில் சுதந்திரச் சந்தை நடைமுறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய பிறகு, அங்கும் ஏற்றத் தாழ்வுகள் பெருகின.

இந்திய ஆட்சியாளர்கள், சீர்திருத்தத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து செயல்படுத்தினால் நன்மை ஏற்படும். பெரும் தொழில் நிறுவனங்களுக்குச் சார்பாக மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தால் நன்மை ஏதும் இராது. இல்லாவிட்டால், ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்திப் பேராபத்துக்கு வழிவகுக்கும். இது இந்திய ஜனநாயகத்துக்கே ஆபத்தாக முடியும்.

`தி இந்து' (ஆங்கிலம்)

தமிழில் சுருக்கமாக:சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x