Published : 15 Jan 2020 07:07 AM
Last Updated : 15 Jan 2020 07:07 AM

கூடுதல் பசுமையோடு பொங்கலைக் கொண்டாடுவோம்!

தியாகு

பெரும் பொங்கல் சூரியனுக்கு உரியது என்றால், மாட்டுப் பொங்கல் மாட்டுக்கு உரியது. இந்தச் சிந்தனையே உவகையூட்டுவது. மனிதர் தன்னைத் தாண்டி தன் கொண்டாட்டத்தில் எல்லாத் தரப்புகளையும் இணைத்துக்கொள்வதன் வழி பன்மைத்துவத்தைக் கொண்டாடுவதானது. மாட்டுப் பொங்கலுக்காக மாட்டைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலையிட்டு அழகு செய்து, முடிந்தால் கொம்புகளுக்கு அரசியல் கொடி வண்ணம் பூசி, பொங்கலும் ஏழு வகைக் காய்கறிகளும் ஊட்டி மகிழ்வது உண்டுதானே? அப்படி பெரும் பொங்கலுக்காகச் சூரியனைக் குளிப்பாட்டி அழகு செய்து கொண்டாடினால் எப்படியிருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

தமிழர்களின் தலைப் பண்டிகை பொங்கல். அதுவே உழவர் திருநாள், இளவேனிற்காலத்தின் வருகையைக் குறிக்கும் தைத் திருநாள், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமைக்கும் நிகர்மைக்கும் உரிய பெருநாள். நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் தங்கள் நகரத்தையே கிராமமாக்கிக்கொள்ளுதலும், வெளியிலிருந்து வந்தவர்கள் எப்படியேனும் ஊர் சென்று பொங்கல் கொண்டாடித் திரும்புவதும் நகரமயச் சூழலிலும்கூட, இந்த இனத்தின் பண்பாடு சிதையாமல் இருப்பதன் அடையாளங்களில் ஒன்று.

தமிழ் நிலத்தின் பண்பாட்டுத் தளத்தில் பொங்கல் பண்டிகைக்குக் கூடுதலாக ஒரு அர்த்தம் சேர்த்தார் அறிஞர் அண்ணா. பொங்கல் பண்டிகையையொட்டி 1969 ஜனவரி 14 அன்று தாய்த்திருநாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ எனும் பெயரை மீட்டமைத்ததோடு, கேரளீயருக்கு ஓணம் பண்டிகையைப் போல, தமிழ்நாட்டவருக்கு ‘பொங்கல்’ பண்டிகையை ஒரு பொதுக் கொண்டாட்ட நாளாக்கும் கனவையும் வெளிப்படுத்தினார். தனது தம்பியர்க்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் பொங்கலையே தமிழர் திருநாளாக முன்னிறுத்தியிருந்தார். இதனூடாகவும் தொடர்ந்தும் ‘தமிழ்ப் புத்தாண்டு’ நாளாக தை முதல் நாளைப் பார்க்கும் ஒரு கலாச்சாரமும் தொடங்கியது. இதை ஏற்போரும் உண்டு, மறுப்போரும் உண்டு என்றாலும், பொங்கல் பண்டிகையானது தமிழ் அடையாளத்துடன் பிரிக்க முடியாதது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது.

அறிவியல் பொருத்தப்பாடு

அடிப்படையில் இப்பண்டிகை சூரியப் பொங்கலாகத் தொடங்கி, மாட்டுப் பொங்கலாக விளையாடி, காணும் பொங்கலாக நிறைவுசெய்வதில் ஓர் அறிவியல் பொருத்தப்பாடு உள்ளது. உயிர்களின் மூல ஊற்றாம் கதிரவன் தொடங்கி, உழைப்பின் அடையாளம் மாடு வரை இயற்கையையும் உயிர்களையும் உயர் பண்புகளையும் போற்றுவதே பொங்கலின் மனமும் மணமும் ஆகும். இதில் பொங்கல் பண்டிகையை ஒட்டிவரும் போகிப் பண்டிகைக்கும் ஒரு நெடிய மரபு உண்டு. பழையன களைதலுக்கு அது ஒரு குறியீடும்கூட. எனினும், காலத்துக்கேற்ப பண்டிகைக் கொண்டாட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை இப்போது நமக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. போகிப் பண்டிகையில் பழையனவற்றைப் போக்குவது என்ற பெயரில் கண்டது கடையதற்கும் தீமூட்டிக் காற்றை மாசுபடுத்துவது அறிவார்ந்த செயலாக இனியும் கருத முடியுமா என்ற கேள்வி எழுகிறது!

சூரிய வணக்கம், சூரியனுக்கு நன்றியறிதல் என்பன குறித்தும் நம் பார்வையைப் புதிதாக்க வேண்டும் என்பதைத்தான் ‘சூரியனைக் குளிப்பாட்டுதல்’ என்கிறேன். ‘ஞாயிறு போற்றுதும்’ என்பது இளங்கோவடிகள் பாடும் சிலப்பதிகாரப் பாயிரங்களில் ஒன்று. சூரியனைக் குளிப்பாட்ட முடியுமா? அது நாம் வாழும் புவியிலிருந்து சற்றொப்ப 15 கோடி கிமீ தொலைவில் உள்ளது. அது ஹீலியம் அனற்கோளம். நம்மால் அதனை நெருங்கக்கூட முடியாது. அது பேரண்டத்தின் பாதுகாப்பான ஒரே அணு உலை. மறுபக்கம், சூரியனிலிருந்து இவ்வளவு தொலைவில் இருப்பதால்தான் புவியில் உயிர்கள் தோன்றிப் படிமலர்ந்து வாழ்ந்தும் வருகின்றன. இந்தத் தொலைவுதான் சரியான தொலைவு. புதன், வெள்ளிபோல், இதற்கும் கூடுதலாக இருந்தால், அல்லது செவ்வாய், வியாழன்போல் குறைவாக இருந்தால் உயிர்வாழ்வுக்குப் பொருந்தாமல் போயிருக்கும். மிகையான வெப்பம் இல்லாத, மிகையான குளிரும் இல்லாத மிதமான தட்பவெப்ப நிலைதான் புவிக்கோளத்தில் உயிர்கள் வாழ்வதன் அடிப்படை.

என்றென்றும் உயிர் கொடுக்கும் சூரியன் சில கேடான கதிர்வீச்சுகளையும் புவி நோக்கி ஏவுகிறது. சூரியனின் கேடான கதிர்வீச்சிலிருந்து நம்மைக் காப்பது வளிமண்டலம். அது இயற்கை அன்னை தன் புவிக் குழந்தைக்குப் போர்த்தியுள்ள காற்றுப் போர்வை.

மிகை வெப்பம்

மாந்தரால் சூரியனுக்கு எவ்விதக் கேடும் செய்ய இயலாது. ஆனால், வளிமண்டலத்தைக் கெடுக்க முடியும். நல்ல சூரியனைக் கெட்ட சூரியனாக்க முடியும், முடியும் என்ன? ஏற்கெனவே அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. புவிகாக்கும் மிதவெப்பத்தைப் புவியழிக்கும் மிகை வெப்பமாக்க மாற்றும் வேலை. விளைவு: புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம்.

புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம் என்ற செய்திகளை அறிவியலர் நீண்ட காலமாகச் சொல்லிவந்தபோதிலும் இவற்றை இன்று உலகின் கவலைக்குரிய பேசுபொருளாக்கியிருக்கிறார் ஸ்வீடன் நாட்டின் 17 வயதுச் சிறுமியான கிரேட்டா துன்பர்க். “நம் வீட்டில் தீப்பிடித்துள்ளது!” என்கிறார் அவர். நம் வீடு என்பது அவர் வாழும் நாட்டையோ நாம் வாழும் நாட்டையோ மட்டும் குறிப்பதன்று. இந்தப் புவிக்கோளம் முழுவதுமே நம் வீடுதான்! பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் அழிவையும் இனி ஏற்படப்போகும் பேரழிவையும் மனித குலம் சந்தித்துவரும் ஆகப்பெரும் நெருக்கடி என்று கிரேட்டா சொல்வதை மறுப்பார் இல்லை. நம்பிக்கை கொள்ளும் நிலையிலோ நம்பிக்கையூட்டும் நிலையிலோ நாம் இல்லை. அச்சப்படுங்கள்! மற்றவர்களையும் அச்சப்படச் செய்யுங்கள். இது அறியாமையால் எழும் அச்சமில்லை. அறிவியலும் அறிவியலாளர்களும் சொல்வதை நம்புவதால் ஏற்படும் அச்சம். அஞ்சுவது அஞ்சாமை பேதமை. ஆனால், அச்சப்பட்டால் மட்டும் போதுமா? அழிவின் முற்றுகையிலிருந்து மீண்டுவரச் செயல்புரிதல் வேண்டும்.

நமக்கும் பங்கிருக்கிறது

புவிவெப்பமாவதில் நாம் எப்படிப் பங்கு வகிக்கிறோம்? நாம் பயன்படுத்தும் ஊர்திகள் வெளிப்படுத்தும் புகை, வளர்ச்சியின் பெயரால் வரும் அழிவுத் திட்டங்கள், அவற்றுக்கான மின்விசை இயற்றும் அனல்மின் நிலையங்கள் யாவும் சேர்ந்து வளிமண்டலத்தைக் கருநஞ்சாக்கிப் புவியை மென்மேலும் சூடாக்கிவருகின்றன. இந்தியத் தலைநகரம் டெல்லிக்கு அடுத்தாற்போல் தமிழகத் தலைநகரம் சென்னை காற்று மாசுற்ற நகரமாகிக்கொண்டிருக்கிறது.

புவிவெப்பமாவதால் ஆர்ட்டிக், அண்டார்ட்டிக் பனிப் பாறைகள் உருகிக் கடல் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்துவருகிறது. கடந்த 25 ஆண்டு காலத்தில் மட்டும் கடல்மட்டம் 13 அங்குலம் உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, சில குட்டித் தீவுகளைக் கடல் விழுங்கத் தொடங்கிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் பல தீவு நகரங்களும் கடற்கரை நகரங்களும் மூழ்கிப்போகும் ஆபத்துள்ளது. துருவப் பனிப் பாறைகள் அறவே உருகிவிட்டால், கடல்மட்டம் 216 அடி உயரும். இதனால் ஜப்பான் 18 விழுக்காடும் சீனம் 14 விழுக்காடும் கடலில் மூழ்கிப்போகும் ஆபத்துள்ளது. இந்தியா? 64 விழுக்காடு மூழ்கிப்போகும் என்பது எச்சரிக்கை. தமிழ்நாடு என்னாகும்? சென்னை என்னாகும்? எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

சூரியன் அளித்த அருங்கொடையான இப்புவிக்கோளத்துக்கும் அதன் உயிர் வாழ்வுக்கும் வந்துள்ள ஆபத்தை உணர்தல் வேண்டும். அதனைக் களைதல் வேண்டும். தமிழர்த் திருநாளுக்குக் கூடுதல் பசுமை சேர்க்க யோசிப்போம்!

- தியாகு, பொதுச்செயலாளர்,

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தொடர்புக்கு: thozharthiagu.chennai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x