Published : 14 Jan 2020 09:37 am

Updated : 14 Jan 2020 14:50 pm

 

Published : 14 Jan 2020 09:37 AM
Last Updated : 14 Jan 2020 02:50 PM

சத்யஜித் ரே சொல்லித்தான் குழந்தைகள் புத்தகங்களை மொழிபெயர்க்கலானேன்!- வீ.பா.கணேசன் பேட்டி

vee-paa-ganesan-interview

இடதுசாரி இயக்கத்தின் மீது இணக்கம் கொண்ட வீ.பா.கணேசன், எழுபதுகளின் இறுதியில் இடதுசாரி புத்தகங்கள், ஆவணங்கள், கட்டுரைகள் எனக் காத்திரமான படைப்புகளை மொழிபெயர்த்தவர். இன்னொருபுறம், சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளையும் அதே அக்கறையோடு மொழிபெயர்த்தார். வங்கத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய அரிதான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர். வடகிழக்கு சார்ந்த இவருடைய கள அறிவு அபாரமானது. இடதுசாரி சித்தாந்தம், இலக்கியம், சினிமா எனப் பல்வேறு விதங்களில் வங்கத்துக்கும் தமிழ்க் கலாச்சாரத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்ட வீ.பா.கணேசனோடு உரையாடியதிலிருந்து...

வங்கம்-தமிழ் இரண்டுக்கும் இடையேயான இலக்கியப் பரிமாற்றம் குறித்துச் சொல்லுங்கள்...

எனது வங்க மொழியறிவு என்பது முதலில் பேச, பின்பு எழுதக் கற்றுக்கொண்டு படிப்படியாக நாளிதழ்கள், புத்தகங்கள் படிப்பதில் சென்று முடிந்தது. இவை அனைத்தையும் சென்னையில் இருந்தபடியே என்னால் செய்ய முடிந்தது. என்றாலும், வங்க மொழியிலேயே கசடற எழுதுவதற்கான துணிவு எனக்கு இன்னும் எழவில்லை. பணி ஓய்வுக்குப் பிறகு இதற்கான முயற்சிகளில் இறங்கத் திட்டமிட்டிருந்தேன். எனக்கு ஆசானாக இருக்க முன்வந்த ‘கொல்கத்தா’ கிருஷ்ணமூர்த்தி 2014 செப்டம்பரில் திடீரென மறைந்துபோன நிலையில் எனக்கு அத்தகைய வாய்ப்பு மீண்டும் கிட்டவில்லை.

தமிழ்-வங்க உறவு என்று சொன்னால் நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1950-களின் தொடக்கத்தில் சாகித்ய அகாடமியின் மூலம் இந்திய மொழிகளுக்கு இடையே பரிமாற்றங்கள் தொடங்கின. அதற்கு சற்று முன்பே தமிழில் ‘கலைமகள்’, ‘மஞ்சரி’ போன்றவை இதில் முன் கை எடுத்திருந்தன. வங்கத்திலிருந்து எண்ணற்ற இலக்கிய நூல்களை தநா குமாரசாமி-தநா சேனாபதி சகோதரர்கள் தொடங்கி சமீபத்தில் மறைந்த புவனா நடராஜன் வரை பலரும் 1950-களிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து வந்துள்ளனர்.

சரத்சந்திரர், பங்கிம் சந்திரர், ரவீந்திரநாத் தாகூர், காஜி நஸ்ருல் இஸ்லாம், மாணிக் பந்தோபாத்யாயா, அதீன் பந்தோபாத்யாயா, மகாஸ்வேதா தேவி என வங்க இலக்கிய நட்சத்திரங்கள் பலரும் இவர்கள் மூலமாகத் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தனர். இவர்களில் தனித்துவம் மிக்கவராக நான் கருதுவது சு.கிருஷ்ணமூர்த்தியைத்தான். சிறந்த பல வங்க எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்த்த அதேநேரத்தில் தமிழிலிருந்து திருக்குறள் முதல் நவீன சிறுகதைகள், நாவல்கள் வரை ஏராளமான தமிழ் எழுத்துகளை வங்க வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய ஒரே தமிழ் எழுத்தாளர் அவர்தான். கல்கத்தாவிலேயே சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து இரு மொழிகளுக்கும் பாலமாக இருந்த அவரது நினைவாக சாந்திநிகேதனில் தமிழ்த் துறையில் ஒரு நூலகம் அமைக்க முயற்சி நடைபெற்றுவருகிறது. இந்தப் பதில் மரியாதைப் பண்பாட்டை இன்றைக்கு மேற்கொள்ளும்படியான தமிழ் எழுத்தாளர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தீவிரமான அரசியல் நூல்களை மொழிபெயர்த்துக்கொண்டிருந்த சூழலில் திடீரென சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளை மொழிபெயர்க்க நேர்ந்தது எப்படி?

1978-ல் எனது மொழிபெயர்ப்புப் பணி தொடங்கியது. 1980-ல் வங்கத் திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் எழுதிய ‘சினிமா ஒரு பார்வை’ நூலை எனது நண்பர்கள் மோ.சிவகுமார் (இப்போது எல்.வி.பிரசாத் அகாடமியில் இயக்குநர் துறைத் தலைவர்), அருள்நந்தி சிவராஜ் ஆகியோருடன் இணைந்து மொழிபெயர்த்தேன். புத்தகம் வெளிவந்த பிறகு சினிமா வேலையாக சென்னை வந்திருந்த சத்யஜித் ரேயைச் சந்தித்தபோது இந்த விஷயத்தைக் கூறினேன். அப்போது “எனது ‘அவர் ஃபிலிம்ஸ் தேர் ஃபிலிம்ஸ்’ நூலையும் தமிழில் கொண்டுவரலாமே?” என்றார். அதன் பிறகு, 1983-ல் வங்க அரசுப் பணியில் சேர்ந்த பிறகு கல்கத்தா செல்லும்போது அப்போது அங்கு உருவாகிவந்த ‘நந்தன்’ திரைப்பட வளாகம் செல்வேன். அங்கு வேலைகளை மேற்பார்வையிட வரும்போதும் அதன் பின்னரும் சத்யஜித் ரேவைச் சந்திக்கும்போதெல்லாம் தனது நூலைத் தமிழில் கொண்டுவருவது பற்றி கேட்டுக்கொண்டிருப்பார். அவர் மறையும்வரை நான் அதைச் செய்யவே இல்லை.

அந்த நேரத்தில் வங்க மொழி, பண்பாடு, அரசியல் போன்றவற்றின் மாணவனாக, மொழிபெயர்ப்பில் ஆர்வம் இல்லாதவனாக மாறியிருந்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு 1937-ல் வெளிவந்த எட்கர் ஸ்நோ எழுதிய ‘சீனவானில் சிவப்பு நட்சத்திரம்’ நூல், 2003-ல் ‘அலைகள்’ சிவம் மூலம் தமிழில் வெளிவந்தது. பின்னர் நான் மொழிபெயர்த்த சுகுமால் சென் எழுதிய ‘இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு’ நூலையும் அவர்தான் வெளியிட்டார்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் குன்னாங்குன்னாங்குர் என்ற அமைப்பு கிராமங்களில் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைத் திரையிட்டு, விவாதிக்கச்செய்து, மக்களின் திரைப்பட ரசனையை மேம்படுத்தப் பாடுபட்டுவந்தது. இந்த அமைப்பின் நிறுவனர் செல்வம் குழந்தைகளுக்கான ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக சத்யஜித் ரே, ‘சந்தேஷ்’ இதழில் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து எழுதி பின்பு திரைப்படமாகவும் ஆன ஃபெலுடா கதைத் தொகுப்பில் குறிப்பிட்ட ஒரு கதையைத் தமிழில் கொண்டுவர விரும்பினார். இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் திரைப்பட, ஆவணப்பட இயக்குநர்களான பி.லெனின், அம்ஷன் குமார் போன்றோர் பங்கேற்றுவந்தனர். எனது வங்கத் தொடர்பைக் கொண்டு சந்தீப் ரேயின் அனுமதி பெற முயலுமாறு எனது நண்பர் அம்ஷன் குமார் அவருக்கு ஆலோசனை கூற, செல்வமும் என்னை அணுகினார். அப்படித்தான் தொடங்கியது. முதலில், குழந்தைகளுக்கான கதைகளை மொழிபெயர்க்கும் எண்ணம் இல்லை. ஆனால், கதைகளைப் படிக்கும்போதுதான் கலைக்குப் பக்கத்தில் குழந்தைகள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவ்வளவு பெரிய மேதை ஏன் குழந்தைகளுக்காகக் கதைகள் எழுதினார் என்பதும் புரிந்தது. இன்றைக்கும் எவ்வளவோ அரசியல் சார்ந்து தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கான புத்தகங்களுக்காகவும் அதே தீவிரத்தோடு இயங்க வேண்டும் என்று தோன்றுகிறது.

‘பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்’ என்ற ஃபெலுடா கதையை மட்டும் தமிழில் மொழிபெயர்க்க சந்தீப் ரேயிடம் சிறப்பு அனுமதி வாங்கி மொழிபெயர்த்தும் முடித்தேன். ஆனால், 2004 சுனாமித் தாக்குதலில் செல்வம் அனைத்தையும் இழந்து நின்றிருந்தார். அவரால் நூல் வெளியிட முடியாத நிலை. பின்பு, வேறு பதிப்பாளர்களை அணுக முயன்றபோது நடுவில் ஒரு கதையை மட்டும் தமிழில் வெளியிடுவதற்குப் பதிலாக ஃபெலுடா கதைகள் முழுத் தொகுப்புக்கும் அனுமதி பெற்றால் வெளியிடுவதாக ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி சேஷாத்ரி முன்வந்தார். அதன்படியே, ஃபெலுடாவின் 35 கதைகளுக்கும் அனுமதி பெற்று நான் தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்த 19 நூல்களில் 9 மட்டுமே வெளிவந்தன. பின்பு, பேச்சுமூச்சே இல்லை. தமிழ்ப் பதிப்புலகில் புதியதொரு போக்கை அறிமுகப்படுத்திய அந்தப் பதிப்பகத்துக்கே இந்த நிலை. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘புக்ஸ் ஃபார் சில்ட்ரன்’ (பாரதி புத்தகாலயத்தின் ஒரு பிரிவு) 2013-ல் 20 நூல்களை ஒருசேர வெளியிட்டனர். இன்றுவரை தமிழுலகம் கண்ணுற்றதாகவே தெரியவில்லை.

வங்கத்தில் வந்ததைப் போலவே ஃபெலுடா கதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிடலாமா என்று யோசித்துவருகிறேன். பின்பு, ‘சத்யஜித் ரே வாழ்வும் வழியும்’ என்ற தலைப்பில், அவருக்கு நான் செய்யும் பிராயச்சித்தமாக எழுதிய, வாழ்க்கை வரலாற்று நூல் 2017-ல் ‘விகடன்’ பிரசுரமாக வெளியானது. அதுவும்கூட எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே நிலை. சினிமா பற்றிய அவரது கட்டுரைகளின் தொகுப்பான ‘டீப் ஃபோகஸ்’ என்ற நூலும்கூட என்னால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகாமல் உள்ளது. பதிப்பகங்கள் மீதான நம்பிக்கை இழப்பும் இதற்கு ஒரு காரணம்.

உவேசாவையும் அவரைப் போல வங்க மொழியில் பண்டைய இலக்கியங்களைத் தொகுத்த அப்துல் கரீம் சாகித்ய விஷாரத்துடன் ஒப்பிட்டு நீங்கள் ஆய்வுசெய்தீர்கள் அல்லவா? அது என்னவாயிற்று?

கி.பி. முதல் ஆயிரமாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் புழங்கிவந்த பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலிருந்து கிளைத்த ஒரு வட்டார மொழிதான் வங்க மொழி. பின்னர் கி.பி. 10-12-ம் நூற்றாண்டில்தான் அது தனியொரு மொழியாக உருப்பெறுகிறது. கி.பி.12 முதல் 16-ம் நூற்றாண்டு வரை அதில் வங்க மொழியில் எழுதப்பட்ட (இந்து (குறிப்பாக, வைணவம்) - முஸ்லிம்) பக்தி இலக்கியங்கள் அடங்கிய 2,000-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டெடுத்து அவற்றை 600-க்கும் மேற்பட்ட சிற்றிதழ்களின் மூலம் ஆவணப்படுத்திய பெருமைக்கு உரியவர் அப்துல் கரீம் சாகித்ய விஷாரத். இவர் கிட்டத்தட்ட உ.வே.சா.வின் சம காலத்தவரும்கூட.

இன்றைய வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்த அவரது பணி தனித்துவமானது. வங்கம், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பாரசீகம், உருது ஆகிய மொழிகளை அறிந்தவர்.

தமிழகத்தின் உ.வே.சா.வை ஒப்பிடும்போது கீழ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர் அன்றைய பட்டப்படிப்புக்கு முந்தைய நிலையான எஃப்.ஏ. வரை படித்தவர். பின்னர், பள்ளி ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பள்ளிக்கல்வி ஆய்வாளராக என நடுநிலைப் பதவிகளை மட்டுமே வகித்தவர். பெரும்பாலும் பிராமணர்களிடம் மட்டுமே இருந்த ஓலைச்சுவடிகளை இரந்து பெற்று அவற்றை நகலெடுத்து அந்த இலக்கியங்களுக்குப் புத்துயிரூட்டியவர்.

நான் படித்த நூலில் இருந்த இரண்டே வரி தகவலை வைத்துக்கொண்டு பல ஆண்டுகள் நூல்பிடித்துப் போய், அன்றைய திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் உதவியுடன் டாக்கா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியருடன் தொடர்புகொண்டு, இறுதியில் டாக்கா நகரில் உள்ள வங்க அகாடமியை எட்டினேன். அப்துல் கரீம் மீது இருந்த எனது ஆர்வம் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது உதவியுடன் சாகித்ய விஷாரத் பற்றிய பல விஷயங்களை என்னால் சேகரிக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து டாக்கா வங்க அகாடமியின் வைரவிழா நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்வு அப்துல் கரீம் நினைவு அரங்கில்தான் நடைபெற்றது. ‘தமிழ்-வங்க இலக்கிய வரலாற்று முன்னோடிகள்: உ.வே.சாமிநாதையர் – அப்துல் கரீம் சாகித்ய விஷாரத்: ஓர் ஒப்பாய்வு’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை முன்வைத்தேன். அதன் மூலம் உ.வே.சா.வின் தமிழ்ப் பணியை வங்கதேச மக்களிடம் முன்வைத்தேன்.

பின்னர், சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் அப்துல் கரீம் தனிப்பட்ட முறையில் சேகரித்து வைத்திருந்த நூல்கள் அடங்கிய அரியவகை ஆவண நூலகத்தைப் பார்வையிட்டு அவரது சொந்த கிராமத்துக்குச் சென்று அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கண்டுவிட்டு அவரது உறவினர்களைச் சந்தித்துப் பேசிவந்தேன். அப்துல் கரீம் சாகித்ய விஷாரத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தனியாக எழுதிவருகிறேன். உ.வே.சா. – சாகித்ய விஷாரத் குறித்த ஒப்பீட்டு ஆய்வுக்கு இங்கு போதிய ஊக்கம் கிடைக்காத நிலையில், சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவரைத் தற்போது ஊக்குவித்துவருகிறேன். 2012-ல் தொடங்கிய எனது கனவு அவர் மூலமாக நிறைவேறும் என்று நம்புகிறேன்.

வங்கத்தில் சினிமாவுக்கும் இலக்கியத்துக்குமான தொடர்பு மிகவும் இணக்கமானது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியாவில் சினிமா முதலில் மௌனமாகவும் பின்பு பேசவும் தொடங்கியபோது புராண, இதிகாசக் கதைகளே அதை ஆக்கிரமித்திருந்தன. சரத் சந்திரரின் தேவதாஸ் என்ற சமூகக் கதைதான் இந்தப் போக்கை முற்றிலுமாக மாற்றி அமைத்தது எனலாம். வங்க இலக்கியவாதிகளின் முடிவேயில்லாத எழுத்துப் பசிக்குத் தீனிபோட நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், பூஜா சிறப்பு மலர்கள் எனப் பல்வேறு களங்கள் இருந்தன. அன்றைய வங்கத் திரைப்பட இயக்குநர்களும் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

மௌனப்படக் காலத்திலிருந்தே கல்கத்தாவுக்குச் சென்று தமிழ், தெலுங்கு படமெடுத்து வந்தவர்களுக்க்கு வங்க சமூகக் கதைகள் மிகவும் வசதியாக இருந்தன. 1950-60-களில் தமிழகத்தில் திரைப்பட ஸ்டூடியோக்கள் நிலைபெற ஆரம்பித்த பிறகுதான் இந்தப் போக்கு நின்றது. எனினும், வங்க எழுத்துகளை தமிழ்-தெலுங்கு மொழிகளில் திரைப்படம் எடுக்க வேண்டும் எனத் தனது கடைசி நாட்கள் வரை முயன்றுவந்தவர் அஷ்டாவதானி ஆன அம்மா பானுமதி ராமகிருஷ்ணாவைத்தான் சொல்வேன். 1990-களில் அவரது வேண்டுகோளுக்காகவே பல வங்க எழுத்தாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

தன்னளவில் படைப்பாளிகளாக இருந்த சத்யஜித் ரே, ரித்விக் கட்டாக் போன்றோர் மற்றவர்களின் எழுத்துகளையும் எடுத்துக்கொண்டு சினிமா தொடக்கூடிய வரம்புகளைத் தொடர்ந்து விரிவாக்கிக்கொண்டே இருந்தனர். அதன் வீச்சைத்தான் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நம்மால் காண முடிந்தது.

வடகிழக்கு, வங்கம் சார்ந்த கள அறிவு கொண்டவர் நீங்கள். திரிபுரா எப்படி வங்காளிகளின் ஆதிக்கத்துக்கு எதிராக இருக்கிறது? இப்போது பாஜகவின் அரசியலும் அங்கேதான் இருக்கிறது. அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

கிழக்கிந்திய கம்பெனி வங்கத்திலிருந்துதான் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது. அதிகாரத்தின் அருகில் இருந்த உயர்வகுப்பு வங்காளிகள்தான் அப்போது பெரிதும் ஆங்கில அறிவு பெற்றவர்களாக இருந்தனர். அன்றைய அசாம் (இன்று அது அசாம், அருணாச்சல பிரதேசம், மேகலாயா, நாகாலாந்து, மிசோரம் என ஐந்து மாநிலங்களாகப் பிரிந்துள்ளது) கம்பெனியின் பிடியில் வந்தபோது வங்காளிகளே ஆட்சி நிர்வாகத்தின் சக்கரங்களாகப் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டனர். கிட்டத்தட்ட 200 ஆண்டுகால வரலாற்றில் வடகிழக்குப் பகுதியின் முன்னேற்றத்தில் வங்காளிகளின் பங்கு கணிசமானது. எனினும், தங்களின் படிப்படியான முன்னேற்றத்துக்கு வங்காளிகள் தடைக்கல்லாக இருக்கிறார்கள் என்ற உணர்வும் அப்பகுதி பூர்வகுடி மக்களிடையே வலுப்பட்டுவந்ததன் விளைவே இன்றைய கலவரங்கள். காங்கிரஸ் இதை எப்படி தனக்கான அரசியலாகப் பயன்படுத்திவந்ததோ அதையேதான் பாஜகவும் இப்போது செய்துவருகிறது. எனினும், அந்தப் பூர்வகுடி இன மக்களின் உண்மையான தேவைகள், உள் முரண்பாடுகள், அவர்களின் முன்னேற்றம் பற்றி அவர்கள் சிந்திக்கவோ செயல்படவோ விடாத வகையில்தான் வடகிழக்குப் பகுதியின் அரசியல் தொடர்ந்து இருந்துவருகிறது. அசாம் உடன்படிக்கையின்படி 1971 மார்ச் மாதத்துக்குப் பிறகு இங்கு வந்து குடியேறிய எந்தவொரு அந்நியருக்கும் இன, மத வேறுபாடின்றி இங்கு இடமில்லை என்ற கோஷத்துடன் அவர்கள் இன்று கிளர்ந்து எழுந்துள்ளனர். அசாமில் தொடங்கிய இந்த முழக்கம் இப்போது வடகிழக்கின் கடைக்கோடியான திரிபுரா வரை எதிரொலிக்கிறது. மக்களைப் பிரித்து லாபம் பார்த்த பாஜக இன்று வடகிழக்குப் பகுதி முழுவதிலும் ஒன்றுதிரண்ட மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

வடகிழக்கு தொடர்பாக புத்தகம் எழுதுகிறீர்கள் அல்லவா?

‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் நண்பர் அரவிந்தன் கொடுத்த ஊக்கத்தில் வடகிழக்குப் பகுதியின் ஒவ்வொரு மாநிலத்தையும் அறிமுகப்படுத்தும் வகையில் பத்து கட்டுரைகள் எழுதியிருந்தேன். ஒரு மாநில இனத்தவரின் வரலாறு, பண்பாடு, உணவு, உடை, இசை, மற்ற இனத்தவரோடு அவர்களுக்குள்ள நட்பு, பகை போன்ற பல விஷயங்களையும் முழுமையாக 500 வார்த்தைகளுக்குள் தந்துவிட முடியாது. எனவே, வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய அறிமுகமாக தனியாகவே ஒரு நூல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் வெளிவரும் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டு இடதுசாரித் தலைவர்களுடன் பழகியிருக்கிறீர்கள். வங்கத் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இருவரிடமும் நீங்கள் அவதானித்த ஒற்றுமை, வேற்றுமைகள் என்னென்ன?

கம்யூனிச இயக்கம் இந்த இரண்டு பகுதிகளிலுமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் முகிழ்க்கத் தொடங்கியது. எனினும், வங்கத்தில் நாற்பதுகளிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற இயக்கங்கள் இடதுசாரி கருத்துகளை அந்த மண்ணில் ஆழமாக வேரூன்றின. அதே நாற்பதுகளில் தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவ – சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் தீவிரமாக நடத்தியபோதும் ஐம்பதுகளில் எழுச்சிபெற்ற திராவிட இயக்கத்தின் வீச்சை மீறி அவர்களால் தமிழ் மண்ணில் வேர்கொள்ள இயலவில்லை என்றே கருதுகிறேன். தலைவர்களைப் பொறுத்தவரையில், இரண்டு மாநிலங்களிலுமே சூழ்நிலைக்கேற்ப திறமையாகச் செயல்பட்டவர்களாகவே இருந்தனர். எனினும், குடும்பம் குடும்பமாக இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் வங்கம், கேரளா, ஆந்திரா, திரிபுரா ஆகிய மாநிலங்களில்தான் கணிசமாக இருந்தனர். இங்கே வி.பி.சிந்தன், உ.ரா.வரதராசன் போன்ற பன்முகத் தன்மை கொண்ட தலைவர்களின் அடியொற்றியே எமது தலைமுறை இயக்கத்துக்கு வந்தது. வங்கத்தில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பிரமோத் தாஸ்குப்தா, ஜோதிபாசு, பினய் சவுதுரி, சாந்தி கட்டாக், சித்தப்ரத மஜும்தார் போன்றவர்களின் ஆளுமையும் தன்னலமற்ற செயல்பாடுகளுமே அங்கு இயக்கத்தை வலுவாக வளர்த்தெடுத்தன எனலாம். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்ட தலைவராக இங்கு வி.பி.சிந்தன் இருந்தார் எனில் அங்கு சுபாஷ் சக்ரவர்த்தி இருந்தார். அங்கு காங்கிரஸுக்கு எதிரான ஒரே இயக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது எனில் இங்கே திராவிட இயக்கம் அந்த இடத்தை எட்டிப்பிடித்திருந்தது. கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சி இங்கு ஏதோவொரு வகையில் தடைபட்டுப்போனது.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in


சத்யஜித் ரேவீ.பா.கணேசன் பேட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author