Published : 13 Jan 2020 10:07 AM
Last Updated : 13 Jan 2020 10:07 AM

சக்தியை வணங்குவதே எண்ணம்- விக்ரமாதித்யன் பேட்டி

தமிழ் நவீனக் கவிதையில் அதிக வாசகர்கள் மனப்பாடமாகச் சொல்லக்கூடிய வரிகளை எழுதிய மக்கள் கவிஞர் என்ற வரையறைக்கு அருகில் வரக்கூடியவர் விக்ரமாதித்யன். குறுந்தொகை தொடங்கி தமிழ் மரபிலக்கியத்தில் தேர்ந்த அறிவும் அதன் செழுமையான தாக்கத்தையும் பெற்ற அரிதான தமிழ்க் கவிஞர்களில் ஒருவர். சிறுகதை, விமர்சனம், நடிப்பு என்று பல தளங்களில் இயங்கிவரும் அவருடன் உரையாடியதிலிருந்து...

கவிதையின் இன்றியமையாத அம்சம், தேவை என்னவென்று சொல்லுங்கள்?

கவிதைதான் மொழியின் கொடுமுடி. அதில்தான் உச்சபட்சமும் சாத்தியம். ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்று தொடங்கும் குறுந்தொகைக் கவிதை அத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் புதிதாக உள்ளது. ‘சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கிவள்/ உயிர்தவச் சிறிதே காமமோ நனிபெரிதே’ என்று ஈரடிகளில் பெண்ணொருத்தியின் நிலையைக் காண்பிக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, கவிதை தோன்றுவது; தோன்றுவது என்பதனாலேயே உயர்வானது.

கவிதையின் ருசி உங்களை எப்போது தீண்டியது?

அன்றைய காலகட்டத்தில் திருநெல்வேலி டவுனில் வசதியுள்ள வீடுகள் எல்லாவற்றிலும் ரேடியோ இருக்கும். சத்தமாக வைத்திருப்பார்கள். சிலோன் வானொலியில் கம்பதாசனின் வரிகளான ‘கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே’, ‘கல்யாண ஊர்வலம் வரும்/ உல்லாசமே தரும்/ மலர்ந்து நான் ஆடிடுவேன்’ போன்றவைதான் முதலில் ஈர்த்தன. கம்பதாசன் என்ற பெயர் பின்னால்தான் தெரியும். மருதகாசியின் பாடல் வரிகளும் அப்போது என்னை ஆட்கொண்டன. உடுமலை நாராயண கவி, கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ஆகியோரின் பாடல்கள் என் கவிதையின் ஞாபகங்களாக உள்ளன. தேவதாஸ் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன். ‘விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே/ வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடு எங்கள் திராவிடப் பொன்னாடு / கலை வாழும் தென்னாடு’ என்பது போன்ற கண்ணதாசனின் வரிகளின் வழியாகவே கவிதையின் ருசியை அறிந்துகொண்டேன்.

மிகச் சிறிய வயதிலேயே வாசிப்புக்குள் வந்துவிட்டீர்கள் இல்லையா?

திருநெல்வேலியில் தொண்டைமான் முடுக்குத் தெருவில் இருந்த நாட்களில், பக்கத்து காம்பவுன்டில் உள்ள ரத்னா டாக்கீஸ் ஆபரேட்டர் அண்ணாச்சி வீட்டில் ‘குமுதம்’ வாங்குவார்கள். நறுமண சென்ட் மணக்க வரும். குனேகா சென்ட்டுக்கு விளம்பரம் அது. ஓவியர் வர்ணம் வரைந்த அட்டைப்படம் இருக்கும். அண்ணாச்சிக்குத் திருமணமான புதிது. மதினி எனது அக்காவிடமும் என்னிடமும் பிரியமாக இருப்பார்கள். அவர்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்து படிப்போம். இப்படித்தான் வாசிப்பு ஆரம்பித்தது. குடும்பம் கல்லிடைக்குறிச்சிக்குக் குடிபெயர்ந்த பிறகு, அங்கே மெயின் ரோட்டில் சிலோனிலிருந்து திரும்பிவந்த ஒருவர் பெரியதொரு மளிகைக் கடையை ஆரம்பித்திருந்தார். அந்தக் கடைக்குப் போனபோதுதான் ‘ஆனந்த விகட’னில் ‘இலங்கையின் மகாவம்சம்’ தொடராக வெளிவந்ததைப் படித்தேன். பேரூராட்சி அலுவலகத்தின் முன்முற்றத்தில் ‘தினத்தந்தி’யைப் படிக்கப் போட்டிருப்பார்கள். குடும்பம் சென்னைக்கு வந்த பிறகு சிரஞ்சீவி, மேதாவி, சந்திரமோகன் ஆகியோரின் துப்பறியும் நாவல்களைப் படிப்பது என்று வளர்ந்தது. நடுவே பள்ளிக்கல்வி துண்டிக்கப்பட காயலான் கடையில் வேலைபார்த்து வந்தேன். அங்கே வரும் பழைய பேப்பர்களில் ஒன்றில்தான் ந.பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாராயணன்’ கவிதை படித்தேன். அக்காலகட்டத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எழுச்சி பெற்று வந்துகொண்டிருந்தது. தெருவுக்கு நான்கு திமுக படிப்பகங்கள் இருக்கும். படிப்பகமென்றால் சும்மா தெருவோரத்தில் தெருச்சுவரில் கயிறுகோத்தோ, சன்னமான கம்பியிலோ பத்திரிகைகளைத் தொங்க விட்டிருப்பதும்கூட படிப்பகம்தான். இதுபோன்ற ஒரு மன்றத்தில் காவியக் கழகம் வெளியிட்ட கண்ணதாசன் கவிதைகள் நூல் படிக்கக் கிட்டியது. அதிலிருந்துதான் கண்ணதாசன் ரசிகன் ஆனேன். அண்ணா தனது தம்பியருக்கு எழுதிய கடிதங்களின் உரைநடைப் பாதிப்பு எனது கட்டுரைத் தமிழில் பாதித்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். ம.பொ.சியின் சிலப்பதிகாரப் பேச்சும் எனது தமிழைப் பாதித்துள்ளது.

உங்களது பத்திரிகையாளர் அனுபவம் உங்கள் படைப்பு, பார்வையை வடிவமைத்தது எப்படி?

பத்திரிகையாளனாக இருந்ததில்தான் தமிழக அரசியல் பற்றிய சரியான புரிதலே ஏற்பட்டது. தமிழ்த் திரையுலகம் பற்றி நல்லதொரு அனுபவங்கள் ஏற்பட்டன. ‘தராசு’, ‘நக்கீரன்’ பத்திரிகை வெவ்வேறு அரசியல்வாதிகளை நெருக்கமாகச் சந்திக்கும் வாய்ப்பைத் தந்தன. விடுதலைப் போராட்டம், தொழிற்சங்க வரலாறு பற்றியெல்லாம் தெரிந்துகொண்டேன். வெகுஜன சினிமாவிலும் அரசியலிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். வெகுஜனக் கலை, வெகுஜன அரசியல் சார்ந்த பொறுப்புகள், அவர்களது பணிகள் பற்றிய எனது ஏளனமான பார்வை விலகியது. பத்திரிகைப் பணியின் மூலமாகக் கிடைத்த கொடை அது. மைய நீரோட்டத்தை மதிப்பதற்கு பத்திரிகைப் பணிதான் கற்றுக்கொடுத்தது.

சின்ன வயதில் பார்த்த சென்னை, இப்போதைய சென்னை… என்ன வித்தியாசம்?

நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த சென்னை இயல்பும் எளிமையும் கொண்ட அழகிய நகரம். மாம்பலத்திலிருந்து மைலாப்பூருக்கு நடந்தே போகலாம். பேருந்தில் உட்கார இடம் கிடைக்கும். கிணறும் மாமரமும் கொண்ட வீடுகள் நிறைய உண்டு. சைதாப்பேட்டைக்கு அந்தப் பக்கம் போக வேண்டிய தேவையே இருந்ததில்லை. இன்றைய அசோக் நகர் பகுதி எல்லாம் காடு மாதிரி இருந்தது. அநேகமாக எல்லா சாலைகளிலும் பெரிய பெரிய மரங்கள் நிற்கும். இன்றைய சென்னை விரிவாக்கம் பெற்றுவிட்டது. நெரிசல் மிகுந்துவிட்டது. தலைநகரம் இவ்வளவு பெரிதாக மாறுகிறது என்றால், அந்த மாநிலம் சீராக இல்லை என்றே பொருள். ஏன் எல்லா மக்களும் பட்டணம் வரும் நிலை? அன்றைய சென்னையைப் பார்த்த எனக்கு இன்றைய சென்னையின் வளர்ச்சி மாற்றமெல்லாம் சங்கடப்படுத்துவதாகவே உள்ளது.

சினிமாவில் நடிக்கும் அனுபவம் குறித்து?

பெரும் ஆளுமையான இயக்குநர் பாலாவிடம் எனக்குக் கூடுதலாகப் பிடித்த விஷயம், நடிப்பை நன்றாகச் சொல்லிக்கொடுப்பார். வசந்த பாலன், திருக்குமரன், வெங்கட் பிரபு, சுரேஷ், பாக்கியராஜ் கண்ணன் எல்லாருமே விஷயம் உள்ளவர்கள்; வித்தை தெரிந்தவர்கள். திரைப்படத் துறையில் நடிகக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முதல் தயாரிப்பில் பணியாற்றுபவர்கள் வரை எல்லோரிடமும் காணப்படும் தொழில் பக்தி மிகுந்த மதிப்புக்குரியதாக உள்ளது.

இலக்கியம் தவிர ஜோதிடம், தல புராணங்களிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டல்லவா?

தல புராணங்களிலுள்ள புனைவுகள் பெரும் புலவர்களால் கட்டப்பட்டவை. அதனாலேயே அவை மாயம் கொண்டவையும்கூட. மாயம் கலை இலக்கியத்தில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அதற்கு வசீகரமே உண்டாகிறது.

கோயில்கள் இந்த வயதில் எப்படி ஈர்க்கின்றன?

பக்தி என்ற நோக்கத்துக்காகத்தான் கோயில் கோயிலாக அலைகிறேன். சிவன் வழிபாடு என்பதுதான் சிந்தையே. சக்தியை வணங்குவதே எண்ணம். மனம் சாந்திகொள்ளவும், சாதாரண மனிதன்தான் நான் என்று நினைவுபடுத்திக்கொள்ளவும் என்றே அமைகிறது. போகிற வழியில் நிலவெளி அழகைப் பார்த்துக்கொண்டிருப்பேன். ஜனங்களின் பேச்சுத் தமிழைக் கவனிப்பேன். தாராசுரம் போனால் வேறு ஒருவனாகிவிடுவேன். ஹொய்சாள சிற்பக் கலையின் நுணுக்கங்களை மலைப்புத் தட்டப் பார்த்துக்கொண்டிருப்பேன். திருப்புன்கூர் நந்தியின் திமிர்ந்த தோற்றம் கண்டு, ஸ்தபதி எவ்வளவு பெரிய வித்தைக்காரன் என்று நினைத்துக்கொள்வேன். வெள்ளியம்பலத்தில் நடராஜப் பெருமான் கால்மாற்றி ஆடியதை ஊன்றிக் கவனிப்பேன். திருவாலங்காட்டில் நடராஜர் சிலாரூபத்துக்குக் கீழ் உள்ள காரைக்காலம்மையார் வடிவு மனசை என்னவோ செய்யும்.

பயணங்கள் வழியாக வெவ்வேறு இடங்கள், மக்களைப் பார்ப்பதில் ஈடுபாடு உள்ளவர் நீங்கள். மாற்றங்களைச் சொல்லுங்கள்…

காவிரிப் படுகை உலர்ந்து கிடப்பது என்னை மிகவும் பாதிக்கிறது. வேளாண்மை நசிந்திருப்பது வேதனை தருகிறது. வாழ்க்கையை இத்தனை வேகமாகச் செலுத்த வேண்டுமா என்று யோசிக்க வைக்கிறார்கள் ஜனங்கள். டாஸ்மாக் பெருக்கம் தமிழினத்தின் அழிவுக்குப் பிரதான காரணமாய் அமையும் என்று பயமாக இருக்கிறது. மொழி, இன உணர்வு குன்றிவருவது வேதனையளிக்கிறது. அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை அநேகமாக எல்லோருக்கும் வந்திருக்கிறது. திருமணம் ஒரே நாளில் முடிந்துவிடுகிறது. தமிழர் உணவுப் பழக்கத்தில் உப்பு, காரம் குறைந்திருக்கிறது. எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியான சாப்பாடு. தஞ்சை, நெல்லை மாவட்டங்களின் தனி ருசி போயே போய்விட்டது. எதிர்காலத்தில் இலக்கியம் தழைக்குமா, கவிதை வாழுமா என்றெல்லாம் யோசனை வருகிறது.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x