Published : 13 Jan 2020 10:04 AM
Last Updated : 13 Jan 2020 10:04 AM

360: இன்சுலின் விலை எப்போது குறையும்?

போரிஸ் ஜான்சனின் முதல் அஸ்திரம்

அசுரப் பெரும்பான்மையோடு பிரிட்டன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் போரிஸ் ஜான்சன், மக்கள் ஆதரவை விஸ்தஸ்ரிக்க வீடுகளின் விலை உயர்வுப் பிரச்சினையைக் கையிலெடுத்திருக்கிறார். இதற்கு முந்தைய மரபுத்துவக் கட்சி பிரதமர்கள், இந்தப் பிரச்சினையைக் கையாள முடியாமல் தவிர்த்துவந்தனர். வீடுகள் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் அடமானம்-மானியம் அடிப்படையில் வீடு வாங்கும் திட்டத்தை டேவிட் கேமரூன் அறிமுகப்படுத்தினார். ஆனால், எதிர்பார்த்த பலனை அத்திட்டம் தரவில்லை. வீடுகளின் விலை அதிகரிப்பை ‘பற்றியெரியும் அநீதி’ என்று தெரஸா மே விமர்சித்தார் என்றாலும் அதற்கு எதிராக அவர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தனிநபர்களும் நிறுவனங்களும் அரசிடமிருந்து அனுமதி பெறாமலேயே கூடுதலாக இரண்டு தளங்களைக் கட்டிக்கொள்ள அனுமதிக்கும் சட்டத்தை ஜான்ஸன் விரைவில் இயற்றுவார் என்று பேசப்படுகிறது. ஏற்கெனவே உள்ள வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகளையும் தளர்த்துவதற்கு அவர் ஆலோசித்துவருவதாகத் தெரிகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் வீடுகளின் விலை மதிப்பு ஏழு மடங்கு அதிகரித்திருக்கிறது. இத்தகு சூழலில் ஜான்சன் வலுவான அஸ்திரத்தைத்தான் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பொருளாதார விமர்சகர்கள்.

இன்சுலின் விலை எப்போது குறையும்?

நீரிழிவின் யுகத்தில் இன்சுலின் விலை குறைக்கப்பட வேண்டியது அவசியம் என்ற குரல்கள் அமெரிக்காவில் தீவிரம் அடைந்திருக்கின்றன. அமெரிக்காவில் ஏறக்குறைய 10% பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 12% பேர் உடற்பருமன் காரணமாக நீரிழிவின் ஆரம்ப நிலையில் இருக்கிறார்கள். 2017 கணக்குப்படி அமெரிக்காவில் மருத்துவச் செலவுகளுக்காக மட்டும் 23,400 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கின்றன. சரியாக சிகிச்சை அளிக்கப்படாத நீரிழிவானது சிறுநீரகம், இதயப் பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்வதையும் கணக்கில் கொண்டால், சிகிச்சைக்காகச் செலவிடப்படும் நான்கு டாலர்களில் ஒரு டாலர் நீரிழிவுக்காகவே செலவிடப்படுகிறது. நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டு ஒன்றுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.5 லட்சம் செலவழிக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், இன்சுலின் விலை அதிகமாக இருப்பது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலையைக் காட்டிலும் எட்டு மடங்கு விலை அதிகரித்திருக்கிறது. விலை அதிகமாக இருப்பதன் காரணமாகவே அமெரிக்காவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 13% பேர் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நீரிழிவு மருந்துகள் விலை குறைக்கப்பட வேண்டும் என்று குடிமைச் சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x