Published : 08 Jan 2020 07:34 AM
Last Updated : 08 Jan 2020 07:34 AM

20 கோடிப் பேர் பங்கேற்கும் வேலைநிறுத்தப் போராட்டம்: அரசு செவிசாய்க்குமா?

என் நண்பரின் மகன் ஒருமுறை சொன்னார், “நான் ஒரு மியூச்சுவல் பண்டு பிராசஸிங் சென்டரில் வேலைசெய்கிறேன்.

மாதம் ரூ.11,000 சம்பளம். 6 மாதங்களாகத்தான் இது. இதற்கு முன்னால் மூன்று ஆண்டுகள் தற்காலிகப் பணியில் இருந்தேன். அப்போது என் சம்பளம் ரூ.6,000.” பிஎஃப், கிராஜுவிடி, இஎஸ்ஐ என்ற பேச்சுக்கெல்லாம் இடமே இல்லை. அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. 29 வயது. திருமணம் பற்றிக் கேட்டால், “இந்தச் சம்பளத்தில் எப்படி முடியும். என் செலவுக்கே இது பத்தாது” என்றார். இதுதான் இன்று பெரும்பாலான பட்டதாரிகளின் நிலையாக உள்ளது.

சென்ற ஆண்டு ஓர் அரசு வங்கியில் 10-ம் வகுப்பு தகுதியுள்ள கடைநிலை ஊழியர் பணிக்கு ஆள் எடுத்தார்கள். பணியமர்த்தப்பட்ட 250 பேரில் 243 பேர் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். ஐந்தாம் வகுப்பு தகுதியுள்ள ரயில்வே காங்மேன் வேலைக்குப் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர் என்பது மற்றொரு அதிர்ச்சியூட்டும் உண்மை.

லட்சக்கணக்கான ஆஷா, அங்கன்வாடி சத்துணவுத் தொழிலாளர்கள் மாதம் ரூ.3,000-க்கு வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்களைத் ‘தொழிலாளர்கள்’ என்று அங்கீகரித்தால் கிடைக்கும் சொற்ப சலுகைகளைக்கூடக் கிடைக்கவிடாமல் செய்வதற்காக அவர்களைத் ‘தொண்டர்கள்’ என்று வரையறுக்கிறது மத்திய அரசு.

கடுமையான சுரண்டல்

நமது நாட்டில் 92% பெண் தொழிலாளர்களும், 82% ஆண் தொழிலாளர்களும் மாதம் ரூ.10,000-க்குக் குறைவாகச் சம்பளம் பெறுகிறார்கள் என்கிறது அஸிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வு. அந்த அளவுக்கு மிகக் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். நிரந்தரப் பணி, ஊதியம், பஞ்சப்படி, விடுப்பு, ஓய்வூதியப் பலன்கள் உள்ள வேலைவாய்ப்பு என்பதே நமது நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 5% பேருக்குக்கூடக் கிடைக்கவில்லை.

எனவேதான், அனைவருக்கும் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21,000 வழங்கப்பட வேண்டும் என்பது, 20 கோடித் தொழிலாளர்கள் இன்று (ஜனவரி 8) பங்கேற்கும் வேலைநிறுத்தத்தின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. இதற்கான அறைகூவலை சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எல்பிஎஃப் உள்ளிட்ட மத்தியத் தொழிற்சங்கங்களும், வங்கி, இன்ஷூரன்ஸ், பிஎஸ்என்எல், மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்களைச் சார்ந்த 70 அகில இந்திய சம்மேளனங்களும் விடுத்துள்ளன.

‘வருடம் 2 கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம்’ என்று சொல்லி மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்கள், இருக்கும் வேலைக்கும் வேட்டு வைக்கிறார்கள். மத்திய அரசில், வங்கிகளில், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களில் 92,000 பேர் ‘விருப்ப ஓய்வு’ என்ற பெயரில் கட்டாய ஓய்வில் வெளியேற்றப்படுகிறார்கள். செல்லா நோட்டு நடவடிக்கையால் தொலைந்துபோன லட்சக்கணக்கான வேலைகள் இன்று வரை மீட்டெடுக்கப்படவில்லை.

நிரந்தரப் பணிகளெல்லாம் தற்காலிகப் பணிகளாகவும், ஒப்பந்தப் பணிகளாகவும் மாற்றப்படுகின்றன. அவர்களுக்கு எந்தச் சலுகையும் கிடையாது. மேலும், மத்திய அரசால் ‘குறிப்பிட்ட கால வேலை’ என்று புதிதாகப் புகுத்தப்பட்டுள்ள ஏற்பாடு, ஒரு வருடம், இரண்டு வருடங்கள் மட்டும் தொழிலாளர்களைப் பணியமர்த்த வழிவகுக்கிறது. இது தொழிலாளர்களை வெளிப்படையாகச் சுரண்டுவதற்கு முதலாளிகளுக்கு அனுமதி வழங்குகிறது.

தனியார்மயத்தைக் கைவிட வேண்டும்

லாபம் கொழிக்கும் பிபிசிஎல் நிறுவனத்தைத் தனியாருக்குக் கைமாற்ற பகிரங்க முயற்சி நடைபெறுகிறது. வங்கிகளை, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை, ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கத் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது மத்திய அரசு. நாட்டின் பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளையே தனியார் கைகளில் கொடுக்கத் துணிந்துவிட்டது மோடி அரசு. ஒருபுறம், ‘பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் முதலாளிகளுக்கு விற்று, ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டி நிதிப் பற்றாக்குறையைக் குறைப்போம்’ என்று சொல்லும் மத்திய அரசு, மறுபுறம் தனியார் நிறுவனங்களின் கார்ப்பரேட் வரியைக் குறைத்து அவற்றுக்கு ரூ.1,45,000 கோடி சலுகை வழங்குகிறது.

சர்வதேசத் தொழிலாளர் ஸ்தாபனத்தைக்கூட மதிக்கத் தயாராக இல்லை நமது அரசுகள். அதன் தீர்மானம் 87 என்பது ‘சங்கம் சேரும் உரிமை’. இது 1948-ல் ஏற்கப்பட்டு, 1950 ஜூலை முதல் அமலுக்கு வந்தது. அதன் மற்றொரு தீர்மானம் 98 என்பது ‘கூட்டு பேர உரிமை’. இது 1949-ல் ஏற்கப்பட்டு, 1951 ஜூலை முதல் அமலுக்கு வந்தது. இவ்விரண்டு தீர்மானங்களையும் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், நமது நாட்டில் இத்தீர்மானங்களை ஏற்கத் தயாராக இல்லை. கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து பொது வேலைநிறுத்தங்களிலும் இது முக்கியக் கோரிக்கையாய் இடம்பெற்றுள்ளது.

ஆனாலும், தீர்வுகாணப்படவில்லை. இதற்கு நேரெதிராகத் தற்போது நடைமுறையில் ஓரளவுக்கேனும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களையும் நான்கு தொகுப்புகளாக மாற்றி அவற்றை நீர்த்துப்போகச் செய்கிறது தற்போதைய மத்திய அரசு. இதைக் கைவிட வலியுறுத்துவதும், சர்வதேசத் தொழிலாளர் ஸ்தாபனத் தீர்மானங்கள் 87 மற்றும் 98 ஆகியவற்றை மத்திய அரசு ஏற்க வலியுறுத்துவதும் முக்கியமான நோக்கங்கள்.

விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டிருக்கிறது. ‘நமது நாட்டில் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ள 60%-த்தினரிடம், அதாவது, 78 கோடி மக்களிடம் நாட்டில் உள்ள மொத்த சொத்தில் 4.7% மட்டுமே உள்ளது. மறுபுறம் பொருளாதாரத்தில் உயர் நிலையில் உள்ள 1% மக்களிடம், அதாவது 1.3 கோடி பெரும் பணக்காரர்களிடம் நாட்டில் உள்ள மொத்த சொத்தில் 51.5% குவிந்துகிடக்கிறது’ என்று கிரெடிட் சூய்ஸி அறிக்கை கூறுகிறது. இந்த அளவுக்கு மக்களிடையே கடும் ஏற்றத்தாழ்வு உள்ளது.

தீர்வுகள் என்ன?

இதற்கெல்லாம் தீர்வுகாண ‘மத்திய அரசு உணவு, கல்வி, ஆரோக்கியம், வேலை, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான உரிமையை அனைவருக்கும் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்துக் குடும்பங்களுக்கும் வேண்டிய அரிசி அல்லது கோதுமை, மற்ற அத்தியாவசியப் பொருட்கள், 12-ம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி, அனைத்துக் கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம், இலவச மருத்துவ வசதி, அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு, வேலையில்லாத காலத்துக்குத் தொகுப்பூதியம், மூத்த குடிமக்களுக்கு பென்ஷன் வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் இவை அனைத்துக்கும் ஆகும் கூடுதல் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% மட்டுமே. உதாரணமாக, இந்த ஆண்டு அதற்காகும் கூடுதல் செலவு ரூ.19 லட்சம் கோடி. அதில் 70% சுமார் ரூ.13.3 லட்சம் கோடியைத் திரட்டினாலே போதுமானது. மீதம் 30% பல்வேறு வரிகளாக அரசிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடும். இதைத் திரட்ட 1% பெரும் பணக்காரர்களிடம் சொத்து வரி, பரம்பரை வரி போட்டாலே போதுமானது.

இவ்வாறு செய்வதன் மூலம், மக்களிடம் வாங்கும் சக்தி, அதன் மூலமாக சந்தையில் தேவை, அதன் காரணமாக உற்பத்தி, அதன் விளைவாக வேலைவாய்ப்பு என்று சங்கிலித் தொடராக அதிகரிக்கும். பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீட்டெடுக்கப்படும்’ என்கிறார் பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக்.

இவற்றையெல்லாம் வலியுறுத்தித்தான் வேலைநிறுத்தம் நடக்கிறது. அரசு செவிசாய்க்க வேண்டும்.

- சி.பி.கிருஷ்ணன், தேசிய இணைச் செயலாளர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்.
தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.comq

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x