Last Updated : 24 Aug, 2015 08:38 AM

 

Published : 24 Aug 2015 08:38 AM
Last Updated : 24 Aug 2015 08:38 AM

சிரியாவுக்குக் கடைசி வாய்ப்பு

சிரியாவில் நடக்கும் போர் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் முகம்மத் ஜாவத் ஜரீப், சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் முவல்லம், ரஷ்யத் துணை வெளியுறவு அமைச்சர் மிகைய்ல் போக்டனோவ் ஆகியோர் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் சந்தித்துப் பேசினர். சிரியாவில் நடக்கும் சகோதர யுத்தத்தை நிறுத்த நான்கு அம்சங்களைக் கொண்ட சமரச யோசனையைத் தெரிவித்திருக்கிறது ஈரான். 1. அனைத்துத் தரப்பும் உடனடியாகப் போரை நிறுத்த வேண் டும், 2. தேசிய ஐக்கிய அரசு ஒன்றை ஏற்படுத்த வேண்டும், 3. அனைத்துப் பிரிவு சிறுபான்மைச் சமூகங்களுக்கும் பிரதி நிதித்துவமும் உரிமைகளும் வழங்கும் விதத்தில் சிரியா அரசி யல் சட்டத்தைத் திருத்த வேண்டும், 4. சர்வதேச மேற்பார்வை யில் நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்.

இந்த யோசனைகள் எதுவுமே புதிதில்லை. அனைத்துத் தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று 2011 முதலே அறைகூவல் விடுக்கப்பட்டு வருகிறது. இதர யோசனைகள் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திலும் இந்தப் பிராந்தியத்தில் நடைபெற்ற வெவ்வேறு ஆலோசனைக் கூட்டங்களிலும் கடந்த நான்கு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டவைதான். இதில் புதுமை என்னவென்றால், இந்த யோசனை ஈரானிடமிருந்து - அதுவும் ரஷ்யா, சிரியா ஆதரவில் - வருகிறது என்பதுதான். தேசிய ஐக்கிய அரசு என்றால், இப்போதுள்ள அதிபர் பஷார் அல் - அஸ்ஸாத் அரசியலிலிருந்து விலகத் தேவையில்லை.

மேற்கத்திய நாடுகள் இந்த சமாதான முயற்சியை இருகரம் நீட்டி வரவேற்க வேண்டும். இது முழுமையான அமைதியை ஏற்படுத்திவிடாது என்றாலும், பேச்சுக்கான கதவைத் திறந்து வைக்கிறது. சிரியா தொடர்பாக மேற்கத்திய நாடுகள் எடுத்த இதர முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ‘இஸ்லாமிய அரசு’(ஐ.எஸ்.) என்ற அமைப்பையும் அஸ்ஸாத் அரசையும் ஒரே சமயத்தில் எதிர்க்க ஏற்படுத்தப்பட்ட மிதவாத கலகப் படையாலும் எதையும் சாதிக்க முடியவில்லை. மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட ‘டிவிஷன்-30’ என்ற அப்படையை அல்-கொய்தாவுடன் இணைப்பு பெற்ற ஜபாத் அல்-நுஸ்ரா வெகு எளிதாகத் தோற்கடித்தது. அதன் வீரர்களைக் கொன்றதுடன் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பறித்துச் சென்றது.

சிரியா அரசைத் தனிமைப்படுத்திவிட மேற்கத்திய ராஜதந்திரிகள் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. ஐ.எஸ். அமைப்பின் வீரியத்தைக் கண்டு அஞ்சி சவூதி அரேபிய அரசுகூட, சிரியா அரசுடன் பேசியிருக்கிறது.

அராஜகப் பிரதேசம்

சிரியாவின் வடக்கில் இப்போது பெருங்குழப்பம் நிலவுகிறது. ‘சிரியா குர்து போராளிகள்’ படை (ஒய்.பி.ஜி.) நிலைகளின் மீது துருக்கியப் போர் விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. துருக்கியில் உள்ள ‘குர்து போராளிகள்’ படை (பி.கே.கே.) அமைப்பு ஒய்.பி.ஜி-க்கு ஆதரவு தெரிவிப்பதால் துருக்கி கோபமடைந்திருக்கிறது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளைவிட அதிகம் இறந்தவர்கள் அப்பாவி சிவிலியன்கள்தான். இதைச் சுட்டிக்காட்டியே ஐ.எஸ். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. துருக்கி போர் விமானங்கள் தங்கள் மீது குண்டுவீசுவதால், அஸ்ஸாத் அரசிடம் உதவி கேட்டு குர்துகள் அணுகியிருக்கின்றனர். இந்த நிலையில்தான், தேசிய ஐக்கிய அரசு அமைக்கலாம் என்ற ஈரானிய யோசனையை குர்துகள் மனமார வரவேற்றுள்ளனர். துருக்கியின் தாக்குதலுக்கு எதிராகத் தங்களை வலுப்படுத்திக்கொள்ள இப்போர் நிறுத்தம் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும். துருக்கியும் ராணுவரீதியாக அடைய முயன்ற பலனை இதுவரை அடையவில்லை.

வடஇராக்கிலும் சிரியாவிலும், தான் காலூன்றிய இடங்களை ஐ.எஸ். இப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் வான் தாக்குதல்களும் இராக்கிய ராணுவத்தின் தரைப்படைத் தாக்குதல்களும் பலன் தரவில்லை. மேற்கு சிரியாவின் முதுகெலும்பு போன்ற பிரதேசத்தில் அல்-கொய்தா ஆதரவுபெற்ற ஜபாத் அல்-நுஸ்ரா, ஆரார் அல்-ஷாம், ஜுந்த் அல்-அக்சா ஆகிய தீவிரவாதப் படைகள் ஊடுருவி நிற்கின்றன. இத்லிப் என்ற ஊரில் இந்தப் படைகளுக்கு இடையில் சண்டைகள் நிகழ்ந்தபோதிலும், இவை ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலில் ‘டிவிஷன்-30’ நிலைகுலைந்தது. அல்-நுஸ்ராவிடம் தோற்ற ‘டிவிஷன்-30’, ஜபாத் அல்-நுஸ்ராவுடன் இனி போரிட மாட்டேன் என்று எழுதிக்கொடுத்தது!

எப்படிக் கூட்டினாலும் பூஜ்யம்தான்

சிரியாவின் நிலைமை படு மோசமாகிவிட்டது என்பதை அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் ஜூலை 26-ல் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். உள்நாட்டுப் போரினால் நாடு பல கூறாகப் பிரிந்து நிற்கிறது. போட்டி அமைப்பைப் போரிட்டு வெளியேற்றும் ஆற்றல் சிரியாவில் சண்டையிடும் எந்த அமைப்பிடமும் இல்லை. பயனற்ற வகையில், அதே சமயம் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் சண்டைகள் நடக்கின்றன. சிரிய மக்கள் அகதிகளாக சிரியாவுக்குள்ளும் வெளியேயும் அல்லல்படுகின்றனர். இப்போதைக்கு அவர்களால் வீடு திரும்ப முடியாது என்பது நிச்சயம்.

சிரியா அரசாலேயே ராணுவத்துக்கு ஆட்களைத் திரட்ட முடியவில்லை. லெபனான், இராக் நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகளையும் ஈரானிய சிறப்புப் படைப் பிரிவையும் நம்புவது சிரியாவுக்கு நல்லதல்ல. அஸ்ஸாத் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் போரினால் களைப்படைந்துவிட்டனர். ஐ.எஸ். அமைப்பாலும் மேற்கொண்டு ஆட்களைத் திரட்ட முடியவில்லை. சிரியாவை அணுகுவது முன்பைவிடக் கடுமையானதாகிவிட்டது. உள்நாட்டுச் சண்டையில் ஈடுபட்டுள்ள எந்தக் குழுவாலும் மற்றவர்களை அடக்கவும் முடியவில்லை, சண்டையை நிறுத்தவும் முடியவில்லை. அவரவருக்குரிய எல்லைக்குள் இருப்பதால் அதிக சேதமில்லாமல் தாக்குப் பிடிக்கின்றனர். பீரங்கிச் சத்தம் அன்றாட நடைமுறையாகிவிட்டது.

சிரியா, யேமனில் நடைபெறும் உள்நாட்டுச் சண்டை, மற்றும் ஐ.எஸ். அமைப்பு தனது செல்வாக்கை விரிவுபடுத்திவருவது குறித்து இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் கலந்து விவாதிக்க வேண்டும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜரீப், அரபு நாடுகளின் முக்கியப் பத்திரிகைகளில் கட்டுரை எழுதினார். பிறகு, சிரியா அதிபருடன் பேச டமாஸ்கஸ் சென்றார். அதே சமயம் துருக்கியும் ஈரானும் இத்லிப் மாவட்டத்தில் உள்ள இரண்டு நகரங்களில் 48 மணி நேரப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தித் தந்தன. அங்கே சமாதானம் நிலவ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய உள் மனதிலும் இருப்பதையே இது காட்டுகிறது. சிரியாவில் சண்டை செய்கிறவர்களும் அவர்களைத் தூண்டிவிடுகிறவர்களும் சமரசத்தை விரும்புகின்றனர். ஈரான் எடுத்துள்ள இந்த சமரச முயற்சியை எல்லா நாடுகளும் ஆதரித்து சிரியாவில் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x