

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மீது பதவிவிலகக் கோரும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்குக் காத்திருக்கிறது. அரசியல் வாழ்வில் இது ஒரு களங்கம் என்று அவர் கலங்குவதாகத் தெரியவில்லை. 2019-யும் வழக்கம்போலவே கோல்ஃப் மைதானக் கொண்டாட்டங்களுடனே கடந்திருக்கிறார். 2019-ல் மட்டும் 86 நாட்கள் சராசரியாக ஐந்தில் ஒரு நாள் அவர் கோல்ஃப் விளையாட்டுக்காகச் செலவழித்திருக்கிறார்.
அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு, அவர் கோல்ஃப் விளையாட்டுக்காக ஒதுக்கிய நாட்கள் இதுவரை 333. அவற்றில் 252 நாட்களைத் தனக்குச் சொந்தமான அல்லது தனது பெயரில் அமைந்த கோல்ஃப் மைதானங்களில் செலவிட்டிருக்கிறார். முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, கோல்ஃப் விளையாடுவதற்காக அதிக நேரம் செலவிடுகிறார் என்று ஒருகாலத்தில் தீவிரமாக விமர்சித்தவர் ட்ரம்ப். ஆனால், இப்போது வெளிநாட்டுப் பயணங்கள் இல்லை என்றால் உடனே தனது கோல்ஃப் மைதானங்களில் ஏதாவது ஒன்றுக்குக் கிளம்பிவிடுகிறார்.
கணிதப் பாடத்துக்காகத் தனித் திட்டம்
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கணிதப் பாடங்களைச் சொல்லிக்கொடுப்பதில் உதவுவதற்காகத் தனியார் அமைப்புகளை அமர்த்திக்கொள்ளும் திட்டத்துக்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. மற்ற பாடங்களில் 95% மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள்கூட கணிதம், அறிவியல் பாடங்களில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டதால் இந்த ஏற்பாடு. இந்த அமைப்புகள் பள்ளித் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாக, மாணவர்களுக்காக சிறப்புக் கணித வகுப்புகளை நடத்தும். நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் என்று 100 மணி நேரத்தில் தேர்வு நோக்கில் முக்கியப் பாடங்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.
பள்ளி ஆசிரியரும் சிறப்பு ஆசிரியரும் தங்களுக்குள் விவாதித்து, தற்போதைய கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டாலும், தேவைப்பட்டால் அனைத்து வகுப்புகளுக்கும் கணிதப் பாடங்களைக் கற்பிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது என்று அறிவித்திருக்கிறது டெல்லி அரசு. சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குத் தேர்வுக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார் அர்விந்த் கேஜ்ரிவால்.
இந்தியாவைக் குறிவைக்கும் அமேஸான்
ஹைதராபாதில் 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் வகையில் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் 13 தளங்களில் பிரம்மாண்டமான அலுவலகத்தைக் கட்டி முடித்திருக்கிறது அமேஸான் நிறுவனம். அமெரிக்காவுக்கு வெளியே அந்நிறுவனத்தின் முதல் சொந்தக் கட்டிடம் இது. உலகளவில், அந்நிறுவனத்தின் மிகப் பெரிய கட்டிடமும் இதுதான். டேபிள் டென்னிஸ் விளையாடவும் உடற்பயிற்சிகள் செய்யவும் தனியறைகளுடன் கூடிய அமேஸானின் வழக்கமான அலுவலக உள்கட்டமைப்புகள் இருந்தாலும், கட்டிடத்தின் வடிவமைப்பு ஹைதராபாதில் உள்ள இந்திய நிறுவனங்களைப் போலவே அமைந்திருக்கிறது.
தொழில்நுட்ப நகரமாக வளர்ந்துவரும் ஹைதரபாதின் பயணத்தில் அமேஸானின் புதிய அலுவலகம் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுமார் 1.2 கோடி பலசரக்குக் கடைகள்தான் சில்லறை விற்பனையில் 90% வகிக்கின்றன. 2022-க்குள் இந்தியாவில் திறன்பேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 82.9 கோடியாக உயரும். எனவே, இணையம்வழி சில்லறை வர்த்தகமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.