Published : 03 Jan 2020 08:03 AM
Last Updated : 03 Jan 2020 08:03 AM

பொருளாதாரம் தழைத்தோங்க இந்தியா என்ன செய்ய வேண்டும்?

சி.ரங்கராஜன்

நிம்மதிப் பெருமூச்சுடன்தான் 2019-க்கு விடைகொடுத்ததாகச் சொல்ல முடியும். இந்த ஆண்டில் எல்லா விஷயங்களுமே தவறாக முடியும் வகையில்தான் இருந்தன. வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்தது. 2017-18 நான்காம் காலாண்டில் 8.1% ஆக இருந்த வளர்ச்சி விகிதம், 2019-20 இரண்டாம் காலாண்டில் 4.5% ஆகக் குறைந்தது. 2020 ஆண்டாவது சிறப்பாக இருக்குமா? அதைச் சிறப்பானதாக ஆக்கிட நாம் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும்?

இந்தப் பொருளாதார மந்தநிலை, அமைப்பு காரணமான மந்தநிலையா அல்லது காலச் சுழற்சியில் வந்துபோவதா என்று நிபுணர்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு முக்கியமானதா? ஆமாம். சுழற்சி முறையிலான சரிவாக இருந்தால், விரைவில் அது மேலெழுந்துவிடும். ஒருவேளை அமைப்பின் காரணமான மந்தமாக இருந்தால், அதன் இறுக்கங்கள் நீக்கப்படும் வரையில் அது மேலெழுவதற்குக் காலம் எடுத்துக்கொள்ளும்.

பொதுவாக, தேவையின் குறைவால் ஏற்படும் மந்தமானது சுழற்சி முறையிலானதாகவே இருக்கும். அத்தகைய சுழலுக்கு, தற்போதைய மந்தநிலை உட்பட ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.

மந்தநிலை எப்படியானது?

வாகனங்கள், நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், வீட்டு வணிகத் துறை போன்ற முக்கியமான துறைகள், தேவை குறைந்திருப்பதைக் காட்டுகின்றன. இது மற்ற சில துறைகளிலும் உற்பத்திக் கொள்ளளவை முழுதாகப் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கியது. அமைப்பு சார்ந்த மந்தநிலையைப் பொறுத்தவரையில், சீர்திருத்தச் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுவருகின்றன. வேளாண் சந்தை, நிலம் மற்றும் தொழிலாளர் சந்தைகள் போன்ற சில பிரிவுகள் சீர்திருத்தத்துக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றன.

நிதியமைப்பில் உடனடியாகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய துறை என்றால் அது வங்கித் துறை. அதிலும் குறிப்பாக, பொதுத் துறை வங்கிகள்தான். கொள்கைகளை வகுப்பவர்கள் வாராக்கடன் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினாலும்கூட, அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகத்துக்கு இடையேயான உறவையும் வங்கி மேலாண்மையில் அவர்களுக்குள்ள பங்கையும் வரையறுப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

வங்கித் துறைக்கு முதன்மைக் கவனம்

இதை நாம் அமைப்பு சார்ந்த சிக்கல் என்று அழைக்கிறோமோ இல்லையோ, தற்போதைய சூழலில் அது முதலீட்டு விகிதத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 2011-12-களில் 34.3% ஆக இருந்த விகிதம், 2019-20-ன் இரண்டாவது காலாண்டில் 27.8% ஆகக் குறைந்துவிட்டது. இதனால், நீண்ட காலத்துக்குத் தேவையான வளர்ச்சி விகிதத்தில் 1.6% புள்ளிகள் குறைந்து பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதோடு, முதலீட்டுக்கும் உற்பத்திக்கும் இடையிலான வளர்ச்சி விகிதத்திலும் 4 புள்ளிகள் குறைத்திருக்கிறது.

தேவையைப் பற்றி நாம் பேசும்போது, தேசிய வருமானக் கணக்கின் நான்கைந்து வகையான செலவினங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது: தனியார் இறுதி நுகர்வுச் செலவினங்கள், அரசு இறுதி நுகர்வுச் செலவினங்கள், அரசு மற்றும் தனியாரின் நிகர நிலையான மூலதன உருவாக்கம் மற்றும் ஏற்றுமதிகள்.இதில் அரசு நுகர்வுச் செலவினம், அரசு முதலீடு, ஏற்றுமதி ஆகிய மூன்று தன்னிச்சையான கூறுகளை, தேவையை அதிகரிக்கச் செய்யும் கருவிகளாகக் கையாளலாம். தனியார் முதலீட்டை ஓரளவுக்கு மட்டும்தான் தன்னிச்சையாகக் கொள்ள முடியும்.

முக்கியமான தேவை என்னவென்றால், அரசு செலவினத்தின் மொத்த உயர்வும் மூலதனச் செலவினத்துக்குள்ளாகத் திருப்பிவிடப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.

பணவியல் – நிதியியல் கொள்கைகள்

பணவியல் கொள்கையைப் பொறுத்தவரையில், பிப்ரவரி 2019 தொடங்கி தற்போது வரையிலும் வட்டி விகிதம் 195 புள்ளிகள் குறைக்கப்பட்டு, தனது பங்கை ஆற்றிவிட்டது. ஆனால், வாராக் கடன்கள் அதிகரித்துவரும் விஷயத்தில் வங்கிகள் முழுமையாக விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. பணப்புழக்கத்தை விரிவுபடுத்த, ரிசர்வ் வங்கி தன்னால் இயன்ற அளவில் ஆதரவு அளித்துள்ளது. ஆனால், அதற்கான வரம்புகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பணவியல் கொள்கை என்பது பொதுவாகப் பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதைக் காட்டிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில்தான் மிகுந்த திறனுடன் செயலாற்ற முடியும்.தற்போது வங்கிகள் இருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி வெறுமனே பணவியல் கொள்கையை வகுப்பதைக் காட்டிலும் மோசமான கடன்களை விரைந்து முடித்து வைத்து, வங்கிகள் ஆரோக்கியமான சூழலை நோக்கி முன்னகர்வதற்கு உதவுவதுதான் மிகவும் முக்கியமான பணி.

பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப வகுக்கப்படும் நிதிக் கொள்கையும்கூட பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்கிறது. வருவாய் நிலையைப் பார்க்கிறபோது, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்றவாறு மத்திய அரசு தனது மூலதனச் செலவினங்களை அதிகரிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இந்நிலையில், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை மீற வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தற்போதைய சூழல் உருவாக்கியுள்ளதா என்ற விவாதத்துக்குரிய ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.

வழக்கத்துக்கு மாறாக, இவ்வாறு நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்வது, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உடனடியாக அதிகரிக்கச்செய்யும். நிதிப் பற்றாக்குறைக்கான கட்டுப்பாடுகளை மிதமான வகையில் மீறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும், அடுத்துவரும் காலத்தில் அது பல்வேறு பிரச்சினைகளுக்கு நம்மை ஆளாக்கிவிடும் என்ற எச்சரிக்கை அவசியம்.

அரசு, பொதுத் துறை நிறுவனங்களின் மூலதன செலவினங்களைக் கவனமாக அதிகரிப்பது, மந்தநிலையைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும். தேவையின் காரணமாக, தனியார் முதலீடுகள் அதிகரிக்கவும் அது வழிவகுக்கும்.

ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் முக்கியம்

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியது மிக அவசியமானது. வெவ்வேறு அடுக்குகளின் கீழ் வருகிற விற்பனைப் பண்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அவசியம். ஒருவேளை ஜிஎஸ்டியில் மாற்றங்களைக் கொண்டுவந்தால், பெரும்பாலான விற்பனைப் பண்டங்களைக் குறைவான வரி அடுக்குகளில் சேர்க்க வேண்டியிருக்கும்.

தற்போதைய பொருளாதார மந்தநிலை, நிதியமைப்பின் பலவீனமான நிலையால் மேலும் சிக்கலானதாக மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் கடன்களைக் கூடுதலாக விரிவுபடுத்தியதோடு மந்தநிலையும் சேர்ந்து, வங்கியமைப்பில் வாராக் கடன்களை அதிகரிக்கச்செய்துவிட்டது. வாராக் கடன் சிக்கல்களை விரைந்து முடிப்பதற்கும் பொதுத் துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

2019-ஐக் காட்டிலும் 2020 சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணம் என்றாலும், அப்படியே இருக்கும் என்று முழுமையாக ஆறுதல் சொல்ல முடியாது. அரசு செலவினங்களை அதிகரிப்பது, குறிப்பாக மூலதனச் செலவினங்களை அதிகரிப்பது என்பதே உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை. பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர ஆரம்பித்துவிட்டால் தனியார் முதலீடுகளும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். வங்கி, வங்கியல்லாத அனைத்து நிதியமைப்புகளையும் மறுசீரமைப்பது ஒன்றே பொருளாதாரத்தை ஆரோக்கியமான நிலைக்கு இட்டுச்செல்லும். உடனடி வளர்ச்சிக்குத் தேவையான மிக அத்தியாவசியமான முன்நிபந்தனை இதுவே!

- சி.ரங்கராஜன், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்.

© தி இந்து, தமிழில்: புவிஅரசு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x