Published : 02 Jan 2020 08:03 am

Updated : 02 Jan 2020 08:03 am

 

Published : 02 Jan 2020 08:03 AM
Last Updated : 02 Jan 2020 08:03 AM

வாங்ச்சுக்: ஒரு மனிதன்; ஒரு ஊர்; ஒரு உலகம்!

sonam-wangchuk

பாலசுப்ரமணியம் முத்துசாமி

சோனம் வாங்ச்சுக் லடாக்கிய சமூகத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். பொறியியல் பட்டதாரி. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகச் சில மாதங்கள் முன்பு வரை லடாக் இருந்தபோது, லடாக்கியர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளில் ஒன்று, பள்ளியில் பயிற்றுமொழி உருது. வீட்டில் லடாக்கிய மொழி பேசும் மாணவர்கள் உருது மொழியில் பயிற்றுவிக்கப்படும் கல்வியை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 90% மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோற்க இதுவும் ஒரு காரணம்.


நிலையை மேம்படுத்தும் பொருட்டு, களத்தில் இறங்க முடிவெடுத்தார் வாங்ச்சுக். லடாக்கிய மாணவர்கள் கல்வி, கலாச்சார இயக்கம் என்னும் ஒரு முயற்சியைத் தொடங்கினார். அரசின் உதவியோடும், உள்ளூர் பொதுமக்கள் உதவியோடும், அரசுப் பள்ளிகள் முறையாக இயங்குவதை உறுதிப்படுத்தினார். 90% தோல்வி என்னும் நிலையிலிருந்து 75% தேர்ச்சி என்னும் நிலையை லடாக்கிய மாணவர்கள் அடைந்தனர். ஆனால், இன்னும் நிலை மேம்பட என்ன வழி என யோசித்தார்.

வாங்ச்சுக் முயற்சி

தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கென்றே ஒரு பள்ளியைத் தொடங்கினார். லடாக்கியப் பகுதிக்கும் கலாச்சாரத்துக்கும் பொருந்திவரும் வகையில், பாடத்திட்டத்தை, காஷ்மீர் அரசு அனுமதியோடு மாற்றியமைத்தார். பள்ளியை, மாணவர்களே நிர்வகிக்கும் ஜனநாயக முறையைப் புகுத்தினார். பள்ளிக்கான கட்டமைப்பை ஏற்படுத்த நிதி வசதிகள் அதிகம் இல்லை. எனவே, பள்ளிக்கான கட்டிடத்தைப் பெரும்பாலும் உள்ளூரில் கிடைக்கும் மண், மரம் கொண்டே வடிவமைத்தார். சூரிய சக்தியைப் புத்திசாலித்தனமாக மடைமாற்றி, சமையல், வெளிச்சம், குளிர்காலத்தில் அறைகளைச் சூடாக வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தினார்.

ஆனால், நீர் அவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. லடாக்கியர்களின் முக்கியமான நீராதாரம் சிந்து நதி. சமீப காலங்களில், பருவநிலை மாற்றங்கள் காரணமாக, அதன் நீர் வரத்தும், வழிகளும் தாறுமாறாகச் சிதைந்து, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான நீர் கிடைப்பதே கடினமாக இருந்தது. மக்களுக்கே நீர் இல்லாதபோது பள்ளிக்கு எங்கே கிடைக்கும்?

நீர் சேமிப்புக்கான உதாரணம்

குளிர்காலத்தில், நதியில் ஓடும் நீர் மக்களின் தேவைக்கு அதிகமாக இருந்தது. அதில் ஒரு பகுதியைச் சேமித்தால் கோடைகாலத்தில் பயன்படுமே என யோசித்தார். அதன் விளைவாக, அவர் கண்டுபிடித்ததுதான் பனி ஸ்தூபி என்னும் தொழில்நுட்பத் தீர்வு. நதி ஓடிவரும் வழியில் ஒரு உயர்ந்த இடத்திலிருந்து நீரைத் தாழ்வான இடத்துக்கு பிளாஸ்டிக் குழாய்களில் கொண்டுவர முடிவெடுத்தார். பிளாஸ்டிக் குழாய்களில் நீர் கொண்டுவந்தால், வெளியில் இருக்கும் அதீதக் குளிரில் குழாயினுள் நீர் உறைந்து குழாய் வெடித்துவிடும் அபாயம் இருந்தது.

ஆனால், மண்ணில் நான்கு அடிக்குக் கீழே குளிர் செல்வதில்லை. எனவே, குழாய்கள் ஐந்து அடி ஆழத்தில் புதைக்கப்பட்டு நீர் கொண்டுவரப்பட்டது. குழாயின் கீழ்முனையில் நீரை மேல்நோக்கிப் பீய்ச்சியடிக்குமாறு ஒரு ஸ்ப்ரிங்லரை இணைத்தார். கிட்டத்தட்ட 60 அடி உயரத்தில் இருந்துவரும் நீர், கீழ்முனையில் மேல் நோக்கிச் சிறு திவலைகளாகப் பீய்ச்சியடித்தது. கடுங்குளிர் காற்றுவெளியில், பீய்ச்சியடிக்கப்பட்ட நீர்த் திவலைகள் உறைந்து, பனித் திவலைகளாகக் கீழே வீழ்ந்தன. அவை ஒன்றாகி, கூம்பு வடிவப் பனிப்பாறைகளாக மாறின. அதற்குப் பனி ஸ்தூபி எனப் பெயரிட்டார். அவ்வாறு, செயற்கையாக உருவாக்கப்பட்ட பனி ஸ்தூபி, கோடை காலத்தில் மெல்ல மெல்ல உருகி, பள்ளிக்குத் தேவையான நீரை அளித்தது. மேலும் சில பனி ஸ்தூபிகளை உருவாக்கி, கிராமத்தின் தேவைக்கான நீரைச் சேமித்தார்.

பருவநிலை மாற்றச் சவால்

ஆனாலும், பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலையின் பனிப்பாளங்கள் குறைந்துகொண்டேவந்தன. அதனால், நதிகளில் சீரற்ற நீரோட்டம், கோடைக் காலங்களில் பனிப்பாளங்கள் உடைந்து எழும் திடீர் வெள்ளம் எனச் சுற்றுச்சூழல் சிதைவதைக் கவலையோடு அவதானித்தார். அந்தக் காலகட்டத்தில், சிக்கிம் மாநிலத்தில் இமயமலையில் உள்ள லோனாக் என்னும் பனிப்பாள ஏரி, அதிகமாகப் பனிப்பாளங்கள் உருகியதால் நிரம்பி, உடைந்து சிதறும் நிலையை அடைந்தது. சிக்கிம் மாநில அரசு, அந்த அபாயத்தைச் சமாளிக்க வாங்ச்சுக் மற்றும் சில நிபுணர்களை, தேசியப் பேரிடர் மேலாண்மைக் கழகத்துடன் இணைத்து ஒரு குழுவை அமைத்தது. அவர்கள் கால் நடையாக இமயமலையில் ஏறி லோனாக் ஏரியை அடைந்தார்கள். ஏரியிலிருந்து பிளாஸ்டிக் குழாய்கள் வழியே, அந்த நீரைப் பாதுகாப்பாக வெளியேற்றி, வெள்ள அபாயத்தைத் தவிர்த்தார்கள். ஆனால், அது வெறும் தற்காலிகத் தீர்வு அன்றி, பிரச்சினைக்கான முழுமையான தீர்வு அல்ல என உணர்ந்தார் வாங்ச்சுக்.

இமயமலையில் உள்ள பனிப்பாளங்கள், அதிலிருந்து உருவாகும் நதிகளுக்கான உயிர்நாடி. ஆனால், அவை அதீத வேகத்தில் உருகினால் வெள்ளம் ஏற்பட்டு இமயமலை இடுக்குகளில் உருவாகியுள்ள ஏரிகள் உடைந்துவிடும். அதனால், இமயமலையிலிருந்து உருவாகும் நதிகளுக்குச் சீரான வகையில் நீர் கிடைக்கும் இயற்கையான கட்டமைப்பு உடைந்து, ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலையாக இருந்த சூழல் சிதைந்துபோகும். அந்த அபாயத்தைத் தவிர்க்க ஒரு புதுவழியை யோசித்தார் வாங்ச்சுக்.

இதற்கான தீர்வாக, மலைவாழ் பகுதிக்கான உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் என்னும் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். லடாக்கிய மலை மேம்பாட்டுக் கழகம், இந்த முயற்சிக்கென 200 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளது. அதன் முதன்மையான நோக்கம், உள்ளூர் மக்களுக்கான கல்வி, வாழ்வாதாரம் போன்றவற்றோடு பல நூறு பனி ஸ்தூபிகளை உருவாக்கி, அவற்றை இணைத்து இமயமலையில் பெரும் பனி ஸ்தூபிகளைச் செயற்கையாக உருவாக்குவது. கோடையில் அந்தப் பனி ஸ்தூபிகள் உருகி, மக்களுக்கும் நதிகளுக்கும் தேவையான நீர் கிடைக்கும். ஆனால், முழுவதுமாக உருகிவிடாது. அடுத்த குளிர்காலத்தில் அந்த ஸ்தூபிகள் மீண்டும் உயரும். இப்படிப் பல நூறு ஸ்தூபிகள் உருவாக்கப்பட்டு, அவை இணைக்கப்பட்டுப் பெரும் பனிப்பாளமாக மாறும். பருவநிலை மாறுதல்களால் உலகம் இழந்துவரும் பனிப்பாளங்களை மீட்டெடுக்கும் முதற்படியாக அது இருக்கும் என்கிறார்.

உள்ளூர் புத்தாக்கங்கள்

லடாக் பாலைவனத்தில் அடிப்படை அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு மக்களுக்காக வாங்ச்சுக் இதுவரை நிர்மாணித்துள்ள நீராதாரக் கட்டமைப்புகளையும் தீர்வுகளையும் பார்க்கும்போது, பனிப்பாள மீட்டெடுப்பு என்னும் பெருங்கனவு மெய்ப்படும் சாத்தியங்கள் உள்ளன எனத் தோன்றுகிறது.

தன் பள்ளியின், தங்கள் சமூகத்தின் பிரச்சினைக்காக வாங்ச்சுக் யோசித்த ஒரு முழுமையான தீர்வு, உலகத்தின் பிரச்சினைக்கும் தீர்வாகக்கூடும் என்னும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. உலகம் இன்று எதிர்கொள்ளும் சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வு, சூழல் சமநிலை பேணும் சிறு அலகுகளை உள்ளூர் அளவில் உருவாக்குவதில் உள்ளது என்பதே அதன் அடிப்படை. ஒரு புதிய அணுகுமுறை!

- பாலசுப்ரமணியம் முத்துசாமி, ‘இன்றைய காந்திகள்’ நூலாசிரியர்.

தொடர்புக்கு: arunbala9866@gmail.com


Sonam Wangchukவாங்ச்சுக்சோனம் வாங்ச்சுக்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author