

இளைஞர்களின் நாடாகிறது இந்தியா...
உலகில் மூவரில் ஒருவர் 1996-க்குப் பிறகு பிறந்தவர் என்கிறது மக்கள்தொகை ஆய்வுகள். 1996-க்குப் பிறகு பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் இஸட்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். 2019-ல் இஸட் தலைமுறையினரின் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 32%. ஐநா 2014-ல் வெளியிட்ட அறிக்கை, உலகின் மிகப் பெரிய இளைஞர் மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியாவைக் குறிப்பிட்டிருந்தது. அப்போது, இந்தியாவில் 10 முதல் 25 வரையிலான வயதினரின் எண்ணிக்கை 35.6 கோடியாக இருந்தது. 2020-ல் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 15 முதல் 64 வரையிலான வேலைபார்க்கும் வயதினரின் எண்ணிக்கை 64% ஆக இருக்கும். 1980 தொடங்கி 1995 வரையில் பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் ஒய்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் காலம் செல்பேசிகளின் முன்னோடி என்றால், இஸட்களின் காலமோ செல்பேசியோடு சேர்ந்துவாழும் காலகட்டம். எனினும், முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் இஸட்கள் பல விஷயங்களில் சுட்டியாக இருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சிக் காலகட்டத்தில் பிறந்ததால் 80-களில் பிறந்தவர்கள் தங்களது அனுபவங்களையே முதன்மையாக நினைத்தார்கள். ஆனால், 96-க்குப் பிறகு பிறந்தவர்கள் பொருளாதார நெருக்கடிநிலைகளோடு வளர்ந்தவர்கள் என்பதால் சேமிப்பதில் அவர்களுக்கு ஈடுபாடு அதிகமாக இருக்கிறது.
நான்கு மணி நேரத்தில் காசர்கோடு - திருவனந்தபுரம்
கேரளத்தின் வட மாவட்டமான காசர்கோட்டிலிருந்து தலைநகர் திருவனந்தபுரத்தை இணைக்கும் அரைவேக விரைவு ரயில் சேவைப் பணிகள் 2024-க்குள் முடிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது கேரள அரசு. 11 மாவட்டங்களின் வழியே 532 கிமீ தொலைவுக்குச் செல்லும் இந்த ரயில் சேவை 200 கிமீ வேகம் கொண்டது. காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் செல்வதற்குத் தற்போது சுமார் 12 மணி நேரம் ஆகும் நிலையில், இந்தப் புதிய ரயில் சேவையானது பயண நேரத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்போகிறது. பயணத்தின் இடையே கோழிக்கோடு, திருச்சூர், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட 10 முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும். தற்போது உள்ள ரயில் நிலையங்களிலிருந்து சற்று தொலைவில் இந்த ரயிலுக்காகவே புதிய ரயில் நிலையங்களும் கட்டப்பட இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு 67,740 வரையில் இந்த ரயிலில் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடகை டாக்ஸி... வர மறுத்தால் அபராதம்!
வாடகை டாக்ஸிக்காக செல்பேசிச் செயலிகளின் வாயிலாகப் பதிவுசெய்து காத்திருக்கையில் ஓட்டுநர்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பின்பு மறுத்துவிடும் நிகழ்வுகள் அதிகரித்துவருகின்றன. ஹைதராபாத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் அதிகரித்துவருவதை ஒட்டிக் களத்தில் இறங்கியிருக்கிறது மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை. அழைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு மறுத்துவிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறது. ‘எந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்துக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ உங்களது அழைப்பை ஏற்றுக்கொண்ட ஓட்டுநர் வருவதற்கு மறுத்துவிடுகிறாரா? அவர் மீது பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். வாகனத்தின் எண், தேதி, எந்தப் பகுதி, பயணப் பதிவு விவரங்களின் இணையப் பக்கம் ஆகிய தகவல்களை அளிக்க வேண்டும்’ என்று ட்விட்டரிலும் அறிவித்திருக்கிறது போக்குவரத்துக் காவல் துறை. புகாரை வாட்ஸ்அப்பில் தெரிவித்தால் போதுமானது. மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 178-ன் படி, வாடகை வாகனம் ஒன்று ஒப்புக்கொண்ட பிறகு வர மறுத்தால், ரூ.500 அபராதம் விதிக்க முடியும். வாடகை டாக்ஸிகள் மீது மட்டுமல்ல; கூடுதல் கட்டணம் கேட்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துவருகிறது ஹைதராபாத் போக்குவரத்துக் காவல் துறை.