Published : 26 Dec 2019 07:22 am

Updated : 26 Dec 2019 07:22 am

 

Published : 26 Dec 2019 07:22 AM
Last Updated : 26 Dec 2019 07:22 AM

ஜார்க்கண்ட் சொல்லும் செய்தி

jharkhand-election-results

ஜார்க்கண்டில் பாஜக அடைந்திருக்கும் தோல்வி இரட்டைப் பின்னடைவு என்று சொல்லலாம். கட்சிக்கு மட்டும் அல்ல; முதல்வர் ரகுவர் தாஸுக்கும் இது பெரும் பின்னடைவு. ஜார்க்கண்டில் ரகுவர் தாஸ் ஒரு முக்கியமான ஆளுமை. “இது எனது தனிப்பட்ட தோல்வி. பாஜகவின் தோல்வி அல்ல” என்று அவர் சொல்வதில் நிறையவே உண்மை உண்டு. நெருக்கடிநிலைக் காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அழைப்பை ஏற்றுப் பொதுக்களத்துக்கு வந்தவர், போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைவாசம் அனுபவித்தவர், 1980 பாஜக தொடங்கப்பட்டபோது அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இணைந்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரகுவர் தாஸ்; இந்தத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான ஜாம்ஷெட்பூரிலேயே பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். அவரை எதிர்த்து வென்றிருக்கும் சரயு ராய், சுயேச்சையாகப் போட்டியிட்ட பாஜகவின் அதிருப்தி வேட்பாளர்.

ரகுவர் தாஸின் தந்தை சவான் ராம், ஜாம்ஜெட்பூரில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஊழியராகப் பணியாற்றியவர். உள்ளூர்க் கல்லூரிலேயே பட்டப் படிப்பையும், சட்டப் படிப்பையும் படித்த ரகுவர் தாஸ், அர்ஜுன் முண்டா முதல்வராக இருந்தபோது அமைச்சராகவும், ஷிபு சோரன் முதல்வராக இருந்தபோது துணை முதல்வராகவும் பதவிகளில் அமர்ந்தவர். 2014-ல் நடந்த ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றதையடுத்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் ஜார்க்கண்டில் பழங்குடியினரல்லாத முதலாவது முதல்வர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தபோது முதல்வராகும் வாய்ப்பைப் பெற்ற ரகுவர் தாஸ், அக்கட்சி அறுதிப் பெரும்பான்மையில் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், இந்த முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறார். அதற்கு முழுக் காரணமும் அகம்பாவம் மிக்க அணுகுமுறைதான் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பாஜகவுக்குள்ளேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. அவருக்கு இரண்டாவது தடவையாக முதல்வர் வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற கட்சிக்குள் நிலவிய அதிருப்தியே தேர்தல் தோல்விக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள்.

பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பைநாத் ராம், சட்டமன்ற உறுப்பினர் புல்சந்த் மண்டல் இருவரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் சேர்ந்துவிட்டனர். மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான தலா தரான்டி அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியனில் சேர்ந்துவிட்டார். இந்தக் கட்சி மாறுதல்களுக்குக் கூறப்படும் ஒரே காரணம், ரகுவர் தாஸின் அகம்பாவம் மட்டுமே.

தேர்தல் முடிவுகள்

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில், பாஜக 79 தொகுதிகளில் போட்டியிட்டது. சில்லி தொகுதியில் போட்டியிட்ட அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சியின் வேட்பாளர் சுதேஷ் மஹ்டோவையும், மற்றொரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளரையும் ஆதரித்தது பாஜக. பிர்சா முண்டாவைத் தனது அரசியல் முன்னோடியாக முன்னிறுத்துபவர் சுதேஷ் மஹ்டோ. பழங்குடியினத்தவரின் இளம் தலைவர்களில் அவரை பாஜக ஆதரித்தாலும் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளையுமே மஹ்டோ ஆதரிக்கவில்லை. பிஹாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளமும், லோக் ஜன சக்தியும் ஜார்க்கண்டில் தனித்தே போட்டியிட்டன. இந்த இரண்டு கட்சிகளும் பெருவாரியான வாக்குகளைப் பெறவில்லை என்றபோதும்கூட பாஜக கூட்டணியின்றித் தனித்து நின்றதும் அதன் பலவீனத்துக்கு ஒரு காரணம்.

போட்டியிட்ட 79 தொகுதிகளில் 28 தொகுதிகளை மட்டுமே பாஜக வென்றிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா 30 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றன. ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சாவின் தலைமையில் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியேற்றுக்கொள்ளவிருக்கிறார். பரைட், டும்கா இரண்ட தொகுதிகளிலும் வென்றிருக்கிறார்.

மக்களவைத் தேர்தலில் பெருவெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு அதற்கடுத்த சில மாதங்களில் நடந்த மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தல்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. சிறிய மாநிலமாக இருந்தாலும் ஜார்க்கண்ட் மாநிலமும் அதே மனநிலையைத்தான் எதிரொலித்திருக்கிறது. குறிப்பாக, அயோத்தி தீர்ப்புக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கும் அடுத்து நடந்திருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலைப் போலவே ஜார்க்கண்டிலும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததைத் தேசியச் சாதனையாகப் பிரச்சாரம் செய்தாலும் அது மக்கள் மனதில் அவ்வளவாக எடுபடவில்லை. மக்கள் தங்களுடைய உள்ளூர்ப் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்திருக்கிறார்கள்.

தோல்வி கண்ட பாஜக உத்தி

மாநிலங்களில் அதிக வாக்கு வங்கியைக் கொண்ட பிரதான சமூகங்களைத் தவிர்த்துவிட்டு, பிற சமூகங்களிலிருந்து முதல்வர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உத்தியை பாஜக கையாண்டுவருகிறது. பிரதான சமூகத்துக்கு எதிரான மொத்த ஆதரவையும் ஒன்றுசேர்க்கும் இந்த உத்தி டெல்லியிலுள்ள தலைவர்களை நம்பி மாநிலத் தலைவர்கள் வண்டியோட்டும் நிலையை உருவாக்கும் நோக்கையும் உள்ளடக்கியது. மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினரைத் தவிர்த்துவிட்டு பிராமணரான தேவேந்திர பட்நாவிஸை பாஜக முதல்வராக்கியது. ஹரியாணாவில் ஜாட் சமூகத்தினருக்குப் பதிலாக எம்.எல்.கட்டார் முதல்வரானார். அதுபோலவே, ஜார்க்கண்டைப் பொறுத்தவரை, பழங்குடியினர்தான் அம்மாநிலத்தின் முக்கியமான வாக்கு வங்கி. ஜார்க்கண்டின் மொத்த மக்கள்தொகையில் 27% பழங்குடியினர். ஆனால், அங்கு பழங்குடியினத்தவர் அல்லாத ரகுபர் தாஸ் முதல்வராக்கப்பட்டார். இப்போது இந்த உத்தியே பாஜக காலை வாருவதாக மாறுகிறது. ஜார்க்கண்டைப் பொறுத்த அளவில் அரசியலில் பழங்குடியினர் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற பேச்சு இம்முறை தேர்தலில் பெரிய தாக்கத்தை உண்டாக்குவதாக அமைந்தது.

ரகுவர் தாஸ் ஆட்சியில் கொண்டுவர முயன்ற சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம், சந்தால் பர்கானாக்கள் குத்தகைச் சட்டம் ஆகியவை பழங்குடியினர் தங்களது நிலங்களைப் பழங்குடியினர் அல்லாதவருக்கு விற்பதற்குத் தடை விதிப்பவை. இந்த இரண்டு சட்டங்களை நிறைவேற்ற முடியாவிட்டாலும், பழங்குடியினரின் நிலங்களைப் பறிக்கும் முயற்சிகளாகவே இந்தச் சட்டங்கள் கருதப்பட்டன. இந்த ஆட்சி பழங்குடியினருக்கு எதிரானது என்ற உணர்வு தீவிரம் பெற்றிருந்தது.

எதிர்க்கட்சிகளுக்கு உத்வேகம்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு 2018-லேயே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது பாஜக. இப்போது மகாராஷ்டிரத்தில் கூட்டணியில் அங்கம் வகித்த சிவசேனாவின் உறவு முறிந்திருக்கிறது. ஹரியாணாவில் தனிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணியின் தயவில் ஆட்சியைத் தொடர வேண்டியிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கும் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கும் தொடர்பே இல்லை என்ற முடிவைத்தான் நடந்து முடிந்துள்ள தேர்தல்கள் உணர்த்துகின்றன. காங்கிரஸைப் பொறுத்த அளவில் அது எவ்வளவுக்கு எவ்வளவு கூட்டணிக் கட்சிகளோடு விட்டுக்கொடுத்து போகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு பாஜகவின் வெற்றியை அதனால் தடுக்க முடியும் என்பதும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முக்கியம் என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய அளவில் பாஜக முன்வைக்கும் பிரச்சாரங்கள் மக்களவைத் தேர்தலில் மாற்றங்களை உருவாக்கலாம். மாநிலங்களின் பிரச்சினைகளே மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. அயோத்தியோ காஷ்மீரோ பெரும் தாக்கத்தை உருவாக்குவதில்லை; ராஞ்சியின் பிரச்சினைகளே ஜார்க்கண்டின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது.மாநிலங்களில் அதிக வாக்கு வங்கியைக் கொண்ட பிரதான சமூகங்களைத் தவிர்த்துவிட்டு, பிற சமூகங்களிலிருந்து முதல்வர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உத்தியை பாஜக கையாண்டுவருகிறது. பிரதான சமூகத்துக்கு எதிரான மொத்த ஆதரவையும் ஒன்றுசேர்க்கும் இந்த உத்தி செல்லுபடியாகவில்லை!

Jharkhand election resultsஜார்க்கண்ட் சொல்லும் செய்திஇரட்டைப் பின்னடைவுபாஜக தோல்விதேர்தல் முடிவுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author