Published : 26 Dec 2019 07:20 AM
Last Updated : 26 Dec 2019 07:20 AM

360: காற்றிலிருந்து தண்ணீர்

காற்றிலிருந்து தண்ணீர்

தண்ணீர்த் தட்டுப்பாடு மிகுந்த இந்தக் காலத்தில் தண்ணீரை எந்தெந்த ஆதாரங்களில் இருந்தெல்லாம் உற்பத்திசெய்ய முடியும் என்ற முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் காற்றிலிருந்து தண்ணீரை எடுப்பதும். நாட்டிலேயே முதன்முறையாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ‘காற்றிலிருந்து தண்ணீர் உற்பத்திசெய்யும் கருவி’ நிறுவப்பட்டிருக்கிறது. இதில் உற்பத்திசெய்யப்படும் தண்ணீரானது பாட்டிலுடன் ஒரு லிட்டர் ரூ.8-க்கு வழங்கப்படுகிறது, பாட்டிலைக் கொண்டுவந்தால் ஒரு லிட்டர் ரூ.5. மழை பெய்கிறதோ இல்லையோ காற்றில் ஈரப்பதம் எப்போதும் இருக்கும். அந்த ஈரப்பதத்திலிருந்துதான் இந்தக் கருவி தண்ணீரை உற்பத்திசெய்கிறது. முதலில் காற்றை உள்வாங்கிக்கொள்ளும் இந்தக் கருவி அதிலுள்ள மாசுப் பொருட்களை அகற்றி சுத்தப்படுத்துகிறது. பிறகு, காற்றிலுள்ள ஈரப்பதத்தைத் தனியாகப் பிரிக்கிறது. தேவையான கனிமச் சத்துகளைச் சேர்த்ததும் குடிப்பதற்கேற்ற தண்ணீர் தயாராகிறது. இந்தக் கருவி ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் வரை தண்ணீரை உற்பத்திசெய்கிறது. கூடிய விரைவில் இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவலர்களுக்கே கண்காணிப்பு

எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஊடுருவியிருக்கின்றன. கண்காணிப்புச் சமூகமாக நாம் மாறிவிட்டோம் என்பது ஒரு பக்கம் வருத்தமளிக்கும் விஷயம் என்றாலும், சில நேரங்களில் இந்த கேமராக்களுக்குத் தேவையும் ஏற்பட்டிருக்கிறது. கேரளத்தில் காவல் துறையில் சேர்பவர்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு நடந்த தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளின் எதிரொலியே இந்த நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் தேர்வு முடிந்து தரப்பட்டியல் வெளியாகி அது காலாவதியாகும் தேதிவரை வன்வட்டில் (Hard disk) சேகரித்து வைக்கப்படுமென்று தெரிகிறது. தேர்வுத்தாள் தயாரிப்பது, தேர்வு நடத்துவது, தேர்வுத் தாள்களைத் திருத்துவது எல்லாம் காவலர்களால் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்தத் தேர்வுகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்குக் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படவிருக்கின்றன.

கொல்கத்தாவின் டிரெட்டா பஜார்

கொல்கத்தாவின் டிரெட்டா பஜாருக்குச் சென்றால் அங்குள்ள உணவகங்களில் சீன உணவுகளான வேகவைத்த பன்கள், சூடான டம்ப்ளிங்குகள், வான்ட்டன்கள், மோமோக்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம். மற்ற இடங்களுக்கும் இந்த இடத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சீனர்களாலேயே நடத்தப்படும் உணவகங்கள் இவை என்பதுதான். டிரெட்டா பஜார் இருக்கும் இடம் இந்தியாவிலுள்ள சீனநகர் (Chinatown) ஆகும். சீனாவிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சீனர்கள் வசிக்கும் பகுதிகளுக்குத்தான் சீனநகர் என்று பெயர். அப்படிப்பட்ட சீனநகர்களுள் ஒன்றுதான் டிரெட்டா பஜார். சீனநகராக இருந்தாலும் டிரெட்டா என்ற பெயர் ஒரு இத்தாலியருக்கு உரியது. இத்தாலியிலிருந்து அரசியல் காரணங்களுக்காக 18-ம் நூற்றாண்டில் தப்பி ஓடிவந்த எட்வர்டு டிரெட்டாவுக்குச் சொந்தமான பஜார் என்பதால் அதற்கு டிரெட்டா பஜார் என்ற பெயர் வந்தது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகம் நடந்ததன் விளைவாக அங்கிருந்து வந்த சீனர்கள் தங்கிய இடம்தான் இது. இங்கே தோல் தொழிற்சாலைகளில் பெரும்பாலான சீனர்கள் வேலை பார்த்தனர். இந்தியா சுதந்திரம் அடையும் வரை இங்கே அபினி உள்ளிட்ட போதைப்பொருட்கள் தடையின்றி விற்பனை ஆயின. தங்கள் பூர்வநிலத்திலிருந்து பல்லாண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து வந்திருந்தாலும் இங்குள்ள சீனப் பூர்வகுடிகள் தங்களின் திருவிழாக்களைக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். இந்தியா எப்படிப்பட்ட கலாச்சாரங்களின் சங்கமம் என்பதை உணர்த்தும் இடங்களும் இதுபோன்ற சீனநகர்களும் ஒன்றே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x