Published : 23 Dec 2019 07:02 am

Updated : 23 Dec 2019 07:02 am

 

Published : 23 Dec 2019 07:02 AM
Last Updated : 23 Dec 2019 07:02 AM

நஞ்சுண்டன்: ஆழமான வாசகர்... நுட்பமான ஆய்வாளர்!

writer-nanjundan

சுகுமாரன்

மிக நெருக்கமானவரும் அல்லர்; முற்றிலும் அந்நியரும் அல்லர் - இந்த இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட ஒன்றாகவே ஜி.நஞ்சுண்டனுடன் நிலவிய நட்பைச் சொல்ல முடியும். இதை நஞ்சுண்டனுடனான எனது நட்பின் தனி அனுபவம் என்று எண்ணியிருந்தேன். தன்னுடன் தொடர்புகொண்டிருந்த எல்லாருடனும் இப்படித்தான் பழகியிருக்கிறார் என்பதை அவரது மறைவை ஒட்டிப் பலரும் எழுதியிருக்கும் ஃபேஸ்புக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. நஞ்சுண்டனின் இலக்கிய ஆளுமையின் இயல்பாக இந்த இணக்கத்தைக் காண விரும்புகிறேன். இந்த இயல்பின் காரணமாகவோ பல இளம் எழுத்தாளர்களுக்குத் தூண்டுதல் அளிப்பவராக இருந்தார். தமிழில் மட்டுமல்ல; கன்னடத்தில் எழுதும் புதிய தலைமுறையினர் சிலரும் அவரது ஈர்ப்பு வட்டத்தில் இருந்தார்கள்.

தொண்ணூறுகளில் வெளிவந்த ‘சிமெண்ட் பெஞ்சுகள்’ கவிதைத் தொகுப்பின் வாயிலாக நஞ்சுண்டன் அறிமுகமானார். அப்போது நான் பணியாற்றிக்கொண்டிருந்த வார இதழில் மதிப்புரைக்காகப் புத்தகத்தை அனுப்பியிருந்தார். அதில் இருந்த ஒரு கவிதையை இதழில் வெளியிட்டிருந்தேன். அதற்கு நன்றி சொல்லத் தொலைபேசியில் அழைத்ததுதான் நட்பின் தொடக்கம். தமிழ்க் கவிதை நூலுக்கு அந்தத் தலைப்பு அவ்வளவு பொருத்தமானதாக இல்லை என்ற கருத்தையும், தொடர்ந்து கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆலோசனையையும் அந்த உரையாடலில் தெரிவித்தேன். “எழுதிவிட்டால் போயிற்று. நீங்களே சொல்லும்போது ஒரு கை பார்த்துவிடுகிறேன்” என்று உற்சாகமாகச் சிரித்தார். அவரால் கவிதைக்குள் தொடர்ந்து செயல்பட இயலவில்லை. ஆனால், கவிதை மொழியாக்கங்களிலும், கவிதையின் நுட்பங்களை விரிவாகப் பேசும் கட்டுரைகள் எழுதுவதிலும் ஈடுபட்டார். நவீன கவிதையியலுக்கு அவருடைய பங்களிப்பு அது.

பண்பாட்டுப் பெயர்ப்பாளர்

ஆழமான வாசகனும், நுட்பமான ஆய்வாளனும் இணைந்த கலவை நஞ்சுண்டன். வாசகனாக ஒரு படைப்பின் உயிரை அவர் உணர்ந்திருந்தார். ஆய்வாளனாக அதன் உருவக் கூறுகளை அறிந்திருந்தார். இரண்டும் ஒன்றாகிச் செயல்படும் இயக்கப் புள்ளியையும் கணித்திருந்தார். இதுவே அவரை மொழிபெயர்ப்பாளராகவும் செம்மையாக்குநராகவும் மாற்றியது என்று எண்ணுகிறேன். ஒரு படைப்பின் உயிரானது துடிப்புடனும், உருவமானது ஆரோக்கியத்துடனும் இருப்பதே சிறப்பு என்ற சிந்தனையில்தான் அவரது மொழியாக்கங்களும் செம்மையாக்கங்களும் அமைந்தன. ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பு அந்த மொழியின் ஆதார இயல்புகளுடன் இருப்பது அவசியம் என்பது அவரது மொழியாக்கம், செம்மையாக்கம் இரண்டுக்கும் மையம்.
அவர் மொழியாக்கம் மேற்கொண்டது பெரும்பாலும் கன்னட மொழிப்படைப்புகளில்தான். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் சிறுகதைகளை ‘பிறப்பு’ என்ற தொகுப்பாகவும், ‘அவஸ்தை’ என்ற நாவலை அதே பெயரிலும் தமிழாக்கம் செய்தார். கன்னடப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய ‘அக்கா’ தொகுப்பையும், கன்னட நவீன தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட ‘மரணம் மற்றும்’ தொகுப்பையும் கொண்டுவந்தார். இந்த மொழியாக்கங்களை வாசிக்கும் எளிய வாசகருக்கும் அவரது கன்னட மொழித் தேர்ச்சியும் தமிழ்ப் புலமையும் புலனாகும். அவை வெறும் மொழிபெயர்ப்பாக இல்லாமல் பண்பாட்டுப் பெயர்ப்பாக இருப்பதும் தென்படும். மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சவாலாக அமையும் சிக்கலை நஞ்சுண்டனின் தமிழாக்கங்கள் எளிதாக வெற்றிகொண்டவை.

செம்மையாக்கமே முதன்மைக் கனவு

நஞ்சுண்டனின் முதன்மையான கவனமும் கனவும் ஒரு படைப்பின் செம்மையாக்கம் எனலாம். ஒரு படைப்பில் மொழி பிழையின்றிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அவர் எச்சரிக்கை கொண்டிருந்தார். ‘பதினைந்து குதிரைகள் ஓடியது’ என்ற வாசகத்தை அவரால் ஏற்கவே முடியாது. ‘அவன் டில்லியில் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்’ என்ற சித்தரிப்பை அவரால் சகித்துக்கொள்ள இயலாது. ‘பெருமாள் கோவிலிலிருந்து குருக்கள் வெளியே வந்தார்’ என்ற குறிப்பு அவருக்கு மண்டையிடியைக் கொடுத்துவிடும்.

இதுபோன்ற செம்மையாக்கக் குணம் ஒருகட்டத்தில் அவரிடம் ஆவேசமாகவே மாறியது. எழுத்தாளர்களிடையில் அவர் மதிக்கப்படவும் விமர்சிக்கப்படவும் இதுவே காரணமும் ஆனது. அவர் தொடர்ந்து கவிதைகள் எழுதாமற்போனதற்கும் இந்தச் செம்மை மனநிலையே காரணம் என்று கருதுகிறேன். அவரது இந்த மனநிலை முற்றிலும் தன்னலமில்லாதது என்று உறுதியாகச் சொல்லலாம். செம்மையாக்கம் தொடர்பாக மூன்றோ நான்கோ முகாம்களை நடத்தியிருக்கிறார். அவை அவரது சொந்தப் பணத்தில் நடத்தப்பட்டவை. அவற்றின் வாயிலாகத் தமிழைத் தமிழாக எழுத கணிசமான இளைஞர்கள் ஊக்கம் பெற்றார்கள். அவர் விரும்பியதும் அதைத்தான். அந்த அளவில் நவீனத் தமிழ் இலக்கிய உலகம் அவருக்குக் கடமைப்பட்டது; அவரது மறைவு முக்கியமான இழப்பு.

தமிழில் எழுத்து, பதிப்பு, இதழியல் ஆகிய துறைகளில் இன்று ஒரு செம்மையாக்குநரின் – காபி எடிட்டரின் - தேவை இன்றியமையாதது. மிக முக்கிய மான படைப்புகள்கூட இன்னும் செம்மையாக்கப் பட்டிருக்கலாமோ என்ற ஏக்கத்தை வாசிப்பவரிடம் ஏற்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில் நஞ்சுண்டனின் பணி முக்கியமானது; அவரது இடையீடு அவசியமானது. படைப்புக்கும் வாசகருக்கும் இடையிலான உறவில், அந்த உறவை வலுப்படுத்தும் மூன்றாவது பார்வை செம்மையாக்குநருடையது. அது படைப்பை மேலும் காத்திரமானதாக்குகிறது.

செம்மைப் பிடிவாதம்

இந்தத் தன்னலமற்ற பணியில் ஈடுபடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய பிடிவாதம் நஞ்சுண்டனுக்கு இருந்தது. சற்று அதிகமாகவே இருந்தது. தமிழைத் தவிரப் பிற மொழிகளில் வெளியாகும் புனைவுகளும் கவிதைகளும் பிற ஆக்கங்களும் செம்மையாக்கப்பட்டே வெளியாகின்றன. ஆக்கியவர்களின் அணுக்கமான நண்பர்களோ தொழில்முறை செம்மையாக்கு நர்களோ அதைச் செய்கின்றனர். அதை எழுதியவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழில் அந்த நிலைமை அநேகமாக இல்லை. ‘நான் எழுதியதை இன்னொருவர் திருத்துவதாவது?’ என்ற இலக்கியத் தன்முனைப்பு செம்மையாக்கத்துக்குத் தடையாகிறது. நஞ்சுண்டனின் செம்மைப் பிடிவாதம் அந்த மனநிலையைக் கணக்கில்கொள்ளவில்லை என்றே சொல்லலாம்.

“நான் செய்வது அவர்களின் நன்மைக்குத்தானே, அது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை?” என்று ஒருமுறை குறைப்பட்டுக்கொண்டார். “நான் ஒரு எடிட்டராக இருந்து இப்படிக் குறைப்பட்டுக்கொண்டால் நியாயம். நீங்கள் ஆதங்கப்படுவது சரியில்லை?” என்றேன். பதற்றத்துடன், “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்றார். “நஞ்சுண்டன் என்ற பேருக்குப் பொருத்தமாக இல்லை. எல்லாக் கசப்பையும் விழுங்கிவிடும் கண்டமல்லவா உங் களிடம் இருப்பது” என்றதும் அவர் சிரித்த சிரிப்பு அலாதியானது.

பேச்செல்லாம் இலக்கியம்

இலக்கியம் தவிர வேறு எதைப் பற்றியும் அவரிடம் பேசியதாக நினைவில்லை. “வீட்டிலே நல்லாருக்காங்களா?” போன்ற சம்பிரதாயமான விசாரிப்புக்கு அப்பால் தனி வாழ்க்கை பற்றிய உரையாடல்கள் நிகழ்ந்ததில்லை. அவருடனான கடைசி இரு தொலைபேசி உரையாடல்கள் மனதில் எதிரொலிக்கின்றன. கடந்த செப்டம்பர் இறுதியில் தொலைபேசியில் அழைத்தார், “இப்போதே துண்டைப் போட்டு வைக்கிறேன். அடுத்த ‘காலச்சுவடு’ இதழில் மூன்று பக்கங்களை எனக்காக ஒதுக்கிவிடுங்கள். காந்தியைப் பற்றி கன்னடத்தில் வெளியாகியிருக்கும் சிறந்த கவிதைகளின் தொகுப்பு ஒன்றைக் கொடுக்கிறேன்” என்றார். அவரது அண்மைக் கால வாக்குறுதிகள் உத்தரவாதமற்றவை என்று அனுபவத்தில் தெரிந்துகொண்டிருந்தேன். எனினும், காத்திருந்தேன். எதிர்பார்த்ததுபோலவே கன்னட காந்தி வரவில்லை.

டிசம்பர் முதல் வாரத்தில் நானே அவரை அழைத்தேன். பலமுறை முயன்ற பின்பு அழைப்புக்குச் செவிசாய்த்தார். “உங்கள் மொழியாக்கத்தில் ‘உயிர்மை’ இதழில் வந்திருக்கும் போளுவார் மகம்மது குஞ்ஞியின் கன்னடக் கதை இத்தத்தை வாசித்தேன். நல்ல கதை. சேதாரமில்லாத மொழிபெயர்ப்பு. காந்தி கவிதைகளைத் தராமல் ஏமாற்றியதற்குப் பதிலாக இதை எனக்குக் கொடுத்திருக்கலாம்” என்றேன். குழறாலான பதில் வந்தது. “கவலையே படாதீங்க, இப்ப கொஞ்சம் பணிச்சுமை குறைந்திருக்கிறது. ஜனவரி முதல் ஒவ்வொரு இதழுக்கும் எழுதுகிறேன்” என்று சிரித்தார். “இதை நான் எந்தத் தண்ணீரில் எழுதி வைக்க வேண்டும் நஞ்சுண்டன்? காவிரித் தண்ணீரிலா, கரமனையாற்றுத் தண்ணீரிலா?” என்றேன். அப்போது அவரிடமிருந்து வெளிப்பட்ட சிரிப்பில் கேட்டது நீரின் கடைசித் தளும்பல் என்பது இப்போதுதான் புரிகிறது.

- சுகுமாரன், கவிஞர்,

‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியர்.

தொடர்புக்கு: nsukumaran@gmail.com

நஞ்சுண்டன்Writer nanjundanசிமெண்ட் பெஞ்சுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author