Published : 20 Dec 2019 07:58 AM
Last Updated : 20 Dec 2019 07:58 AM

360: சென்னையில் ‘மகளிர் மட்டும்’ கழிப்பறைகள்

சென்னையில் ‘மகளிர் மட்டும்’ கழிப்பறைகள்

பெண்களின் பாதுகாப்பு தொடர்பான முன்னெடுப்புகளுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிர்பயா நிதியில் தமிழ்நாடு இதுவரை பெற்றிருக்கும் ரூ.190.68 கோடியில், வெறும் ரூ.6 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதாக பழனிசாமி அரசின் மீது விமர்சனம் எழுந்தது. ஊடகங்கள் இதைக் கவனப்படுத்தத் தொடங்கியதும் சில முன்னெடுப்புகளை அறிவித்திருக்கிறது சென்னை பெருநகர மாநகராட்சி. நிர்பயா நிதியிலிருந்து சென்னை மாநகரில் 150 இடங்களில் பெண்களின் பயன்பாட்டுக்கு மட்டுமான கழிப்பறைகள் கட்டுவதற்கான ஏல ஒப்பந்தத்துக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பாக உணரும் பகுதிகளில் இவை கட்டப்படும். ரூ.27 கோடியில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு கட்டங்களாக இவை கட்டிமுடிக்கப்படும். இந்தக் கழிப்பறைகள் நாள் முழுவதும் பயன்படுத்தப்படும் வகையில் இடையறாத தண்ணீர் வசதிகள், துப்புரவுப் பணியாளர்களோடு நிறுவப்படுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். ‘மகளிர் மட்டும்’ நகரப் பேருந்துகள், மகளிருக்கு உதவ ‘அம்மா’ ரோந்து வாகனங்கள், பெண்கள் அதிகம் நடமாடும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், தெருவிளக்குகள், செல்போன் செயலிகள் ஆகியவையும் தயாராகிவருகின்றன.

குழந்தைகளைக் கொல்லும் கோபால்ட் சுரங்கங்கள்

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் சுரங்கங்களிலிருந்து கோபால்ட் தனிமத்தை வெட்டியெடுக்க 15 வயதுக்குட்பட்ட சிறார்களையே பயன்படுத்துகின்றனர். காற்றும் வெளிச்சமும் இல்லாத இந்தச் சுரங்கங்களுக்குள் இயந்திரங்களுக்குப் பதிலாக ஏழைப் பிள்ளைகளே அனுப்பப்படுகின்றனர். ஒரு நாளைக்கு 10-12 மணி நேரம் வேலைபார்த்தாலும் அவர்களுக்கான தினக்கூலி எவ்வளவு தெரியுமா? அதிகபட்சமாகவே இரண்டு டாலர்கள்தான். சுரங்கப் பணியின்போது குழந்தைகளுக்கு உயிரிழப்பு ஏற்படுவதும், கை-கால்களை உடைத்துக்கொள்வதும் அவ்வப்போது நிகழ்ந்தேறும் அவலம். இழப்பீடுகளும் கிடையாது. கோபால்ட் எதற்குப் பயன்படுகிறதென்றால் லித்தியம் பேட்டரிகள் தயாரிப்பதற்காக. லித்தியம் பேட்டரிகளை அதிக அளவில் யார் பயன்படுத்துகிறார்கள் என்றால், ஆப்பிள், கூகுள், டெல், மைக்ரோசாஃப்ட், டெஸ்லா போன்ற பெருநிறுவனங்கள். ஊனமுற்ற 14 சிறார் தொழிலாளர்கள் சார்பாக, வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில், உரிமைகளுக்கான சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடுத்திருக்கிறது. ஒருவேளை பெருநிறுவனங்கள் தான் பயன்படுத்தும் பேட்டரிகளுக்குப் பின்பாக இப்படியான இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதை அறியாதிருந்தாலும், இப்போது தார்மீகரீதியாகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

இனிக்கும் மிளகாய் ஆராய்ச்சி

மிளகாய் காரம் மட்டுமல்ல, வயிற்றுக்கும் கெடுதல் என்பதாகவே நம்முடைய எண்ணம் இருக்கிறது. ஆனால், மிளகாய் சாப்பிடுவோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் குறைவு என்கிறது இதயவியலுக்கான அமெரிக்கக் கல்லூரி அறிஞர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வு. இத்தாலி நாட்டின் மோலிஸ் பகுதியில் வசிக்கும் 23 ஆயிரம் பேரைத் தொடர்ந்து 8 ஆண்டுகள் கவனித்து, அவர்கள் சாப்பிடும் மிளகாயின் அளவு, நேரம், நாட்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த முடிவை வெளியிட்டுள்ளனர். மிளகாய் சாப்பிடுவோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் 40% குறைவு என்கிறது இந்த ஆய்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x