Published : 19 Dec 2019 07:33 AM
Last Updated : 19 Dec 2019 07:33 AM

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம்!

பா.சந்திரசேகரன்

இன்றைய மாறிவரும் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப சூழ்நிலைக்கேற்பத் தமிழ் மொழியின் உத்வேகமும் மாறிவருகிறது. ஒரு மொழியின் வளர்ச்சி என்பது ஒரு இனத்தின் வளர்ச்சி என்பார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சி ஒரு ஒட்டுமொத்த இனத்தையே கட்டிப்போடுவதாக இருக்கிறது. ஒருசில மொழிக்கே இப்படிப்பட்ட உள்ளார்ந்த பண்பு இருக்கும் என்பது அறிஞர்களின் கூற்று. அப்படிப்பட்ட தமிழ் மொழியை வளர்க்க உழைத்த ஏராளமான அறிஞர்களுள் முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விஸ்வநாதமும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், ஏற்றுமதி வணிகர், தமிழறிஞர், அரசியலர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம், ‘சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த மாமனிதர்’ என்று போற்றப்படுபவரும்கூட.

தமிழ் இலக்கியங்களை வெறும் பாடப்புத்தகமாக மட்டும் பார்க்காமல், அவை எப்படியெல்லாம் தினசரி வாழ்க்கைக்குப் பாடமாகவும் பாலமாகவும் இருக்கிறது என்பதைச் சொல்வதற்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் கி.ஆ.பெ.விஸ்வநாதம். அவருடைய படைப்புகள் எல்லாமே பாமரருக்கும் புரியும்படி எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், திருக்குறள் விளக்கங்கள், சங்க இலக்கியங்களின் இன்றைய தேவைகள் போன்றவையெல்லாம் காலத்துக்கேற்ற உதாரணங்களுடன் பள்ளி மாணவரும் புரிந்துகொள்ளும்படி படைக்கப்பட்டுள்ளன ஆனால், அவருடைய படைப்புகள் தமிழறிஞர்களைத் தவிர பொதுமக்களுக்கு இன்னும் போய்ச்சேரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

தமிழ் மொழிக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம், தமிழ் படிப்பதற்காகப் பள்ளி சென்றதில்லை. சிறு வயதில் முத்துசாமி கோனாரிடம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். பிறகு, வேங்கடசாமி நாட்டார், வேதாசலம், கலியாணசுந்தரனார், சோமசுந்தர பாரதியார் போன்ற புகழ்பெற்ற தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கியங்கள் கற்றுப் புலமை பெற்றார். வாலையானந்த சுவாமிகளிடம் சைவத்தைக் கற்றறிந்தார். இந்த ஆளுமைகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் வகையில் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டார் விஸ்வநாதம்.

இதுவரை 149 தமிழறிஞர்களின் புத்தகங்களைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. மேலும் ஏழு தமிழறிஞர்களின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று அறிவித்துள்ளது. விஸ்வநாதம் எழுதிய நூல்கள் மொத்தம் 36. அதில் 23 நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2007-08-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு தமிழக அரசு சார்பில் 2000-ம் ஆண்டு முதல் ‘கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.

விஸ்வநாதத்தின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள்: வள்ளுவர் (1945), வானொலியிலே (1947), ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950), அறிவுக்கு உணவு (1953), தமிழ் மருந்துகள் (1953), வள்ளுவரும் குறளும் (1953), எண்ணக் குவியல் (1954), தமிழ்ச்செல்வம் (1955), திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956), திருக்குறள் கட்டுரைகள் (1958), நான்மணிகள் (1960), ஆறு செல்வங்கள் (1964), தமிழின் சிறப்பு (1969), நல்வாழ்வுக்கு வழி (1972), திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974), நபிகள் நாயகம் (1974), மணமக்களுக்கு (1978), வள்ளலாரும் அருட்பாவும் (1980), எனது நண்பர்கள் (1984), அறிவுக்கதைகள் (1984), திருக்குறளில் செயல்திறன் (1984), மாணவர்களுக்கு (1988), எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994).

தனிமனித ஒழுக்கம், நற்பண்புகளைப் பேணுதல், இல்லறத்தைச் செம்மையாக்குதல், தமிழ் மொழியுணர்வை ஊட்டுதல், சமூக ஒற்றுமையுணர்வின் மகத்துவம், தமிழைக் கற்க இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதல் போன்ற பணியைத்தான் கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் புத்தகங்கள் செய்கின்றன. அறிஞர்களிடம் மட்டுமே புழங்கிக்கொண்டிருக்கும் அவரது ஆக்கங்களை வெகுஜனங்களிடம் கொண்டுசேர்க்க முற்படுவதுதான் அவரது 25-வது நினைவு நாளில் நாம் எடுக்க வேண்டிய முன்னெடுப்பு.

- பா.சந்திரசேகரன், பொருளாதார நிபுணர்.

தொடர்புக்கு: bc.sekaran04@gmail.com

டிசம்பர் 19: கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் 25-ம் நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x