Published : 18 Dec 2019 07:18 AM
Last Updated : 18 Dec 2019 07:18 AM

360: அதிகரித்துவருகிறது ஆன்லைன் மீன் வியாபாரம்

கொஞ்சம் சீஸ்... நல்ல தூக்கம்!

ஏறக்குறைய 65% பேர் வாரத்தில் சராசரியாக நான்கு நாட்கள் அசதியோடுதான் படுக்கையிலிருந்து எழுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது சமீபத்தில் தூக்கத்தைப் பற்றி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று. ஐந்து பேர்களில் ஒருவருக்கு, ஒவ்வொரு காலைப் பொழுதுமே அப்படித்தான் தொடங்குகிறதாம். பகலில் உண்ணும் உணவுகளுக்கும் அன்றைய இரவின் தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு உணவில் சீஸ், சால்மன் மீன், முட்டை சேர்த்துக்கொள்வது நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறதாம். முக்கியமாக, சீஸ் கட்டிகளில் உள்ள செரோடோனின், தூக்கத்துக்குக் காரணமான மெலடோனின் ஹார்மோனை அதிகளவில் தூண்டிவிடுகிறது. பால், செர்ரி, அவோகடா பழங்கள், ஓட்ஸ், சோயா ஆகியவையும் மெலடோனினைத் தூண்டிவிடுகின்றன. உணவுப் பழக்கத்தால் தூக்கப் பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்க முடியும் என்று பரிந்துரைக்கும் இந்த ஆய்வு, தூங்குவதற்கு முன்பு மது அருந்துவதைத் தவிர்க்கவும் சொல்கிறது.

இருபது லட்சம் ஓட்டுநர்களின் எதிர்காலம் என்னவாகும்?

இந்தியாவின் மிகப் பெரிய வாடகை டாக்ஸி வலைப்பின்னலான ‘ஓலா’வை நடத்திவரும் ஏஎன்ஐ டெக்னாலாஜிஸ், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2018-19ம் நிதியாண்டில் ஏறக்குறைய 60% வருமானச் சரிவைச் சந்தித்துள்ளது. ரூ.1,160 கோடி என்று இந்தச் சரிவு கணக்கிடப்படுகிறது. விளம்பரங்கள், வளர்ச்சி நடவடிக்கைகள், ஓட்டுநர்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்கத் தொகைகளே இந்த நட்டத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்தச் செலவு ரூ.3,315 கோடி. இதில் ரூ.1,700 கோடியானது ஓட்டுநர்கள் தொடர்பான செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டன. அதற்கு முந்தைய நிதியாண்டில் ஓட்டுநர்களுக்காகச் செலவழிக்கப்பட்ட தொகை ரூ.2,400 கோடி. ‘ஓலா’வின் நிதியிழப்பு, நடப்பு ஆண்டில் ஓட்டுநர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் செலவுகளை மேலும் குறைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதியம், காப்பீடு, கூடுதல் பணி நேரங்களுக்கான கூடுதல் படிகள் எதுவும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படாத நிலையில், அவர்களுக்குத் தற்போது கிடைத்துவரும் ஊக்கத்தொகைகளாவது தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிகரித்துவருகிறது ஆன்லைன் மீன் வியாபாரம்

சென்னையில் இணையம் வழியாக இறைச்சி, மீன்களை வாங்குவது கடந்த இரண்டாண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 23 வயதிலிருந்து 34 வயது வரையிலான இளைய தலைமுறையினர், அதிலும் குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களிடம் இணையம் வழியாக இறைச்சி வாங்கும் வழக்கம் இருக்கிறது. தற்போது, 37-48 வயதுள்ளவர்களும் இணையத்தை நோக்கி ஈர்க்கப்பட்டுவருகின்றனர். சென்னையில் இணையம் வழியாக மீன் மற்றும் இறைச்சி விற்பனையில் 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அமைப்பு சார்ந்து இயங்கிவருகின்றன. அண்ணா நகர், பழைய மகாபலிபுரம் சாலை, போரூர், நுங்கம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில்தான் இணைய விற்பனை அதிகம். சரியான விலை, தரம், தள்ளுபடிச் சலுகைகள், வீட்டுக்கே கொண்டுவந்து தருவது உள்ளிட்ட பல வசதிகள் இருப்பதால் இணையம் வழியாக இறைச்சி, மீன் வாங்கும் வழக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையில் முதலிடத்தில் இருப்பது கோழி. அதற்கடுத்து ஆட்டிறைச்சியும் கடல் உணவுகளும் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x