Published : 17 Dec 2019 07:57 am

Updated : 17 Dec 2019 07:57 am

 

Published : 17 Dec 2019 07:57 AM
Last Updated : 17 Dec 2019 07:57 AM

360: காபி ஆரோக்கிய பானமா?

is-coffee-a-healthy-drink

காபி ஆரோக்கிய பானமா?

ஒரு நாள் காபி நல்லது என்றும் இன்னொரு நாள் காபி கெடுதல் என்றும் ஏதாவது ஆராய்ச்சி முடிவுகள் வந்துகொண்டிருக்கும். இப்போது காபி ஆரோக்கிய பானம்தான் என்று முடிவாகச் சொல்லிவிட்டார்கள். அன்றாடம் அதிகபட்சம் 4 முதல் 5 கப்புகள் வரை மட்டுமே காபி குடிக்கலாம். குடித்தால் மூளை சுறுசுறுப்பாகும், துடிப்பாக விளையாடலாம், உடல் திரவங்கள் சமநிலையில் இருக்கும். ‘டைப்-டு' நீரிழிவு நோயாளிகள், ஈரல் பாதிப்புள்ளவர்கள், புற்றுநோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர், நரம்பணுச் சிதைவுக்கு உள்ளானோரும் காபி குடிக்கலாம். ஆனால், மருத்துவரின் ஆலோசனைப்படி குடிப்பது நல்லது. வளர்சிதை மாற்றக் கோளாறால் உலகில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘காபி தொடர்பான அறிவியல் தகவல் கழகம்’ காபி பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டு, அன்றாடம் 1 முதல் 4 கப் வரை காபி குடித்தால் வளர்சிதைமாற்றத்தில் கோளாறு ஏற்படுவது குறைகிறது என்று தெரிவிக்கிறது. அதே நேரத்தில், காபியை அடிக்கடியும் அளவுக்கு அதிகமாகவும் குடிப்பதும் ஆபத்துதான் என்று அந்த ஆராய்ச்சி எச்சரிக்கிறது.

‘டிக்-டாக்' - டோன்ட் டாக்!

திடீர் பணமும் திடீர் புகழும் சிலரை போதையில் ஆழ்த்தும். இறுதியில் வாழ்க்கையையே கெடுத்துவிடும். சமூக ஊடகங்களில் புதிய வரவான டிக்-டாக் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சில நொடிகள் டிக்-டாக்கில் வந்து பிரபலமான பலர் இருக்கிறார்கள். டிக்-டாக்கை இளைய தலைமுறை கொண்டாடினாலும் அதனால் குடும்பங்கள் சிதைகின்றன என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதைவிட முக்கியம் ‘டிக்-டாக்' செயலி மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் உறிஞ்சி விற்கப்படுகின்றன. இந்தியாவில் 20 கோடிக்கும் மேற்பட்டோர் ‘டிக்-டாக்' பயனாளிகள். இவர்களுடைய உதவியுடன் இந்தியாவை உளவு பார்க்க முடியும் - பார்க்கின்றனர். டிக்-டாக் மூலம் சீன நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறது. டிக்-டாக்கால் ஆபத்து என்று கூறிக்கொண்டே, அதில் பிரபலமான ஒரு பெண்ணை திடீர் வேட்பாளராக ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலின்போது களமிறக்கியது பாஜக. அவர் வெற்றி பெறவில்லை.

‘டிக்-டாக்கில் பதிவேற்றம் செய்வதற்கு முன்னால் நிதானியுங்கள், நீங்கள் பேசுவதை அல்லது உதட்டசைப்பதை எல்லோரும் வரவேற்பார்களா என்று சிந்தியுங்கள்' என்று அந்நிறுவனம் இப்போது வகுப்பெடுக்கிறதாம். இதுதான் பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிவிடுவதோ?

வாழ்வாதாரத்தில் கை வைக்கலாமா?

கூவம், அடையாறு, பக்கிங்காம் என்று அனைத்தையும் தூய்மைப்படுத்தி, ஆழப்படுத்தி மழை நீர் வடிகாலை மேம்படுத்தவும் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக கூவம் நதிக்கரையோரம் வசித்த குடிசைவாழ் மக்கள் வேறிடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். அடுத்த இலக்கு சென்னை மெரினா கடற்கரையையொட்டி சில்லறைக்கு மீன் விற்போர் மீது விழுந்திருக்கிறது. அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடற்கரையோரம் ‘லூப் ரோடு' என்றழைக்கப்படும் தனிச் சாலையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மீன் விற்கின்றனர். அன்றாடம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரைகூட வருமானம் கிடைக்கும். மீன்பாடும் இந்த வருவாயும் நிரந்தரம் அல்ல. இங்கு மீன் விற்பதை பரம்பரையாகச் செய்கின்றனரே தவிர அரசின் அனுமதியோ, அங்கீகாரமோ, அனுமதிப் பத்திரமோ கிடையாது. இவர்களாலும் தங்களுடைய தரப்பை உயர் நீதிமன்றத்தில் எடுத்துச்சொல்ல முடியவில்லை. சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக என்று சொல்லிவிட்டு எங்களின் வாழ்வாதாரத்தில் கைவைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அந்த மக்கள் புலம்புகிறார்கள்.


காபிடிக்-டாக்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author