

வழக்கம்போலவே நடந்தது-பாரதத்தின் 69-ம் சுதந்திர தின விழா. தெருக்களில் சின்னச் சின்ன மூவண்ணக் கொடிகள் சரமாகத் தொங்கின. பள்ளிக் குழந்தைகள் சமர்த்தாக கொடிபிடித்துப் பள்ளி வளாகத்தில் வந்தே மாதரம் பாடினர். தினசரிப் பத்திரிகைகள் பிரபலங்களிடம் அவர்களது சுதந்திர தின வாழ்த்துகள், கருத்துகள் கேட்டு வெளியிட்டன. செங்கோட்டையில் சம்பிரதாயமாகக் கொடியேற்றப்பட்டது. பிரதமர் 90 நிமிட சொற்பொழிவாற்றினார். நடக்கும் அப்பழுக்கற்ற ஆட்சியில் நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது என்றார்.
எல்லையில் துப்பாக்கிச் சத்தம் கேட்பது காதில் விழாததுபோல ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்ற தொனியில் ஆவேசத்துடன் கையை வீசிப் பேசினார். அரங்கம் தெம்புடன் கைதட்டிற்று. மாலையில் வழக்கம்போல ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனலில் ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ படம் காண்பிக்கப்பட்டது. அதைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் நெகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. கண்கள் குளமாகின. அநாதரவாகிப்போனதான உணர்வு என்னை ஆட்கொண்டது. குலுங்கக் குலுங்க அழவேண்டும்போல் இருந்தது. இது இதுநாள் வரை ஏற்பட்டிராதது.
நிராசையின் வித்து
இந்த ஆண்டு வழக்கமில்லாத ஒரு நிராசை மனத்தில் சுமையாக அழுத்துகிறது. இந்த நிராசையின் வித்து, ஒரு மகாபுருஷரின் மார்பை இரக்கமற்ற குண்டுகள் துளைத்த அன்றே விழுந்திருப்பதாக இன்று தோன்றுகிறது. அந்தப் பாவத்தின் சுமையை நாடு சுமக்கிறது. மூர்க்கத்தின் வித்து. அதற்குக் கட்சிபேதமில்லை. நிறபேதமில்லை. மொழிபேதமில்லை. கண் பிடுங்கப்பட்டதற்குக் கண் ணைப் பிடுங்கினால் குருடாகித்தான் போவோம் என்றார் காந்தி. நல்ல வேளை, அவர் இன்று இல்லை. அவர் நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரைப் பார்க்க நேரிட்டிருந்தால், கண் போனதுமில்லை நாகரிகமற்ற கயவர்களாகிப்போனோம் என்று உணர்ந்து, சமணர்கள் பாணியில் உண்ணா நோன்பிருந்து மரணத்தைத் தழுவியிருப்பார்.
என்றும் காணாத வெறுப்பு
மக்கள் பிரதிநிதிகள் என்று நாம் நம்பும் உறுப் பினர்கள் கொண்ட மேதகு சபையில், இந்தமுறை நாம் கண்ட கசப்பும் வெறுப்பும் குரோதமும் என்றும் கண்டதில்லை. ஒரு கல் எறிபட்டதும் மண்பாண்டம் பொத்து நீர் சீறிக்கொண்டு பாய்வதுபோல நாகரிக, படித்த உறுப்பினர்களின் வாய்மொழிகளில் தெறித்தன. மீன் சந்தையைவிட மோசமாகக் கூச்சலும் குழப்பமுமாக அவை திளைத்தது, ஏதோ ஒரு லாகிரியில் சிக்கியது போல. குழாயடிச் சண்டையில் படிக்காத பெண்கள் தாறுமாறாகப் பேசுவதுபோல ‘நீ என்ன வாழ்ந்தே… உன் வண்டவாளம் எனக்குத் தெரியுமே’ என்று ஆளும்கட்சி தாக்கிற்று பதிலடியாக. தினம் ஒரு பாரதப் போர் நடப்பதுபோல இருந்தது. பாண்டவரும் கவுரவரும் இரண்டறக்கலந்து தர்மத்தைக் கையில் எடுத்துச் சாட்டையாகச் சகட்டுமேனிக்கு விளாசினார்கள் இந்திய ஜனநாயகத்தின் மக்கள் பிரதிநிதிகள். மக்கள் காணாமல் போனார்கள்.
மனிதனே அளவுகோல்
சமூகத்தில் தனி மனிதனின் நிலை என்ன என்கிற விசாரத்தை சுமார் கி.மு. 450-க்குப் பிறகு கிரேக்க நாட்டின் கலாச்சாரத் தலைநகரமாக இருந்த ஏதென்ஸில் ஸோஃபிஸ்ட்ஸ் என்று அறியப்பட்ட அன்றைய கிரேக்கச் சிந்தனையாளர்கள் துவங்கியதிலிருந்து, ஜனநாயகம் என்கிற கோட்பாடு பரிமாணம் பெற்றது. மனிதனே எல்லாவற்றுக்கும் அளவுகோல் என்றார்கள் ஸோஃபிஸ்ட்ஸ். அதாவது, ஒரு விஷயம் நல்லதா கெடுதலா, சரியா தவறா என்பதை மனிதனின் தேவை யுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்க வேண்டும் என்றார்கள். அந்த வகையில் சமூக விமர்சனப் பார்வைக்கு வழி வகுத்த சிந்தனையாளர்கள் அவர்கள்.
கடந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும் போது மக்களின் தேவைக்கும் அவற்றுக்கும் சற்றும் சம்பந்தமில்லாதது புரிந்தது. நாம் எந்த அளவுகோலை வைத்து இவர்களைத் தேர்ந்தெடுத்தோம் என்று திகிலேற்பட்டது. ஸோஃபிஸ்ட்டுகள் இன்னொன்றையும் சொன்னார்கள்: ‘ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு மக்களுக்கு அதில் ஈடுபடப் போதிய கல்வி அறிவு இருக்க வேண்டியது அவசியம்’ என்றார்கள்.
இல்லாவிட்டால், ஜனநாயகம் ‘மாப் ரூல்’(mob rule) ஆகிப்போகும் அபாயம் கொண்டது என்றார்கள். தர்க்கரீதியான இருதரப்பு வாதங்களும் கண்ணியமாக நடைபெறும்போதுதான் நாடாளுமன்றம் நன்றாகச் செயல்படும். தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகளைப் பார்த்தால், பலர் இளைஞர்கள். படித்தவர்கள். வெளி உலகில் நாகரிக மனிதர்கள். கவுரவமாக, கம்பீரமாக வளைய வருபவர்கள். பல வாக்குறுதிகளைக்கொடுத்து நம்மை வளைத்தவர்கள். ஏன் மாறிப்போனார்கள்? ஜூலியஸ் சீசரில் மார்க் ஆண்டனி பேசியதும் கொலை வெறிகொண்ட மக்கள் கூட்டம்போல ஏன் ஆனார்கள்?
மரபணுவில் நாடகத் தன்மை
ஜனநாயகம் என்பது சிக்கலானது. பல உள்முடிச்சு கள் கொண்டது. அதன் மையத்தில் இருப்பது நாடாளு மன்றம். இந்திய நாடாளுமன்றம் இன்று ஜனநாயகத்தின் குரலாகத் தெரியவில்லை. அதைக் கேலிக்கூத்தாக்கும் பிம்பமாக இருக்கிறது. இரண்டு கோஷ்டிகளின் இடையே இருக்கும் பழிதீர்க்கும் பரஸ்பர யுத்தமாக இருக்கிறது. மக்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
சென்ற காங்கிரஸ் ஆட்சியின்போது எதிர் அணியில் இருந்த பாஜக நாடாளுமன்றத்தில் எந்த மசோதாவையும் வரவிடாமல் கூச்சலிட்டு முடக்கிற்று. உங்களால் மட்டும்தான் அது சாத்தியமா என்று இப்போது பாஜக ஆட்சியில் காங்கிரஸ் முஷ்டியைத் தேவைக்கும் அதிகமாக உயர்த்திக் கூச்சலிட்டு முடக்குகிறது. பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக கொசுவை அமுக்குவது போலத் திருப்பி அடிக்கிறது.
மக்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. நாம் நாடகப் பிரியர்கள். நாடகத்தன்மை நமது மரபணுக்களில் இருப்பது. நமது நாடாளுமன்றம் நாடகமாக மாறிவிட்டது. சட்டம் இயற்றுபவர்கள் நடிகர்களாகிப்போனார்கள். இந்திய நாடு என்பது வெறும் ஐதீகமாகத் தோன்றுகிறது. உருப்படியான திட்டங்களோ, அமல்படுத்தும் வியூகமோ, சட்டத்தின் ஆட்சியோ, பொறுப்பை உணர்ந்து ஏற்கக்கூடிய அரசோ மக்களோ தென்படவில்லை. நில ஆதிக்க பழமைவாதத் தாக்கத்திலிருந்து நாம் விடுபடவில்லை. மாற்றம் வருமா? ஸோஃபிஸ்ட்ஸ் சொன்னார்கள்: ‘மக்கள் சமூகம் நாகரிக நகர்வாழ் சமூகமாக மாறினால்தான் ஜனநாயகம் செயல்படும்’.
தனி நபரைவிடத் தேசம் பெரிது என்றார் அப்துல் கலாம். நாகரிகத்தின் அடையாளம் அது. அந்த எண்ணம் நமக்கும் சட்டம் இயற்றுபவர்களுக்கும் இல்லாததே நமது அவலம்.
வாஸந்தி,
மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com