கடக்க முடியாத வழிகள்

கடக்க முடியாத வழிகள்
Updated on
2 min read

நவீனா

நாற்புறமிருந்தும் ஊர்திகள், இரு சக்கர வாகனங்கள் சாரை சாரையாக வந்தவண்ணம் இருக்கும் மிக நெரிசலான சாலை. சிவப்பு, மஞ்சள், பச்சை என இடைவிடாது சமிக்ஞைகள் காட்டிக்கொண்டிருக்கும் கம்பங்கள் ஒவ்வொரு மூலையிலும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பாதையைச் சாலை வழியே கடப்பது நடக்காத காரியம் என மின்கம்பங்களில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகளுக்குக்​கூடத் தெரியும். அருகில் இருந்த சுரங்கப்பாதைதான் அதைக் கடக்க சுலபமான வழி. சுரங்கப்பாதையின் படிக்கட்டுகளில் இறங்கி, அதன் பெருவீதியைக் கடந்து, மறுமுனையில் வலப்புறமோ இடப்புறமோ திரும்பி, விரும்பிய சாலையை அடையலாம் என்றாலும், அது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியாக இருக்கிறது. சுரங்கப்பாதையில் நுழையும் படிக்கட்டுகளின் முடிவில் ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கிறார். அவர் முன் சிதறிக்கிடந்த சில்லறைகளைப் பார்க்கும்போது யாசகம் பெறுபவர்போலத் தோன்றுகிறது.

சுரங்கப்பாதையின் அகலவீதியில் சிறு வெளிச்சம்கூட இல்லாமல் மையிருட்டாக இருக்கிறது. விளக்குகள் எதுவும் எரியவில்லை. இருட்டு என்பதைப் பொருட்படுத்தாமல், இதுபோன்ற பாதைகளைப் பலமுறை கடந்த துணிச்சலில், இப்போதும் நடக்கத் தொடங்குகிறேன். முதல் அடி எடுத்து வைத்தவுடன், சட்டென்று பிரியங்காவின் கருகிய உடல் கண் முன் தோன்றுகிறது. பயம் அடிவயிற்றைக் கவ்விக்கொள்ள முன்னேறிச் செல்லாமல் தயக்கம் காட்டுகிறேன். எனது தடுமாற்றத்தைக் கவனிக்கும் அந்த மூதாட்டி, “செல்போன்ல லைட் போட்டுப் போம்மா, அதோ அந்த மூலையில்கூட இன்னொரு ஆள் ஒக்காந்திருக்காரு, பயப்படாமப் போ” என்கிறார். தைரியத்தைத் திரட்டிக்கொண்டு மீண்டும் முன்னேறிச் செல்ல எத்தனிக்கும்போது, பிரியங்காவின் செல்போன் உரையாடலும் அவரது அழுகையும் மெலிதாக என் காதுகளுக்குக் கேட்கின்றன. மீண்டும் தயங்கிய நான் அணிந்திருந்த உடையைக் கவனிக்கிறேன். சற்று முன்பு வரை எனக்கு ஒரு பொருட்டாகப் படாத அந்தப் பாவாடையும் சட்டையும் இப்போது பிரச்சினையாகத் தெரிகிறது. “அவள் அணிந்திருந்த உடைதான் என்னை வன்புணர்வுசெய்யத் தூண்டியது, பாவாடை அணிந்துகொண்டு சுரங்கப்பாதைக்குள் போனது அவளது குற்றம், இப்படியெல்லாம் உடை அணியும் பெண்கள் சமூகத்துக்குக் கேடு, அவர்களைக் கொல்வது சரிதான்” என்றெல்லாம் குரல்கள் என்னைச் சுற்றி எதிரொலிக்கின்றன. அந்தக் குரல்களின் இரைச்சலாகவே சுரங்கப்பாதையின் இருள் என் மீது முழுவதுமாக அப்பிக்கொள்கிறது.

இரண்டு ஆடவர்கள் சுரங்கப்பாதையின் எதிர்ப்புறமிருந்து வந்து என்னைக் கடந்து செல்கிறார்கள். அவர்களுடைய முகங்களைக் கவனிக்கிறேன், அவற்றில் எந்தச் சலனமும் இல்லை. வெளிச்சமான ஒரு வீதியைக் கடக்கும் இயல்பில்தான் அவர்கள் இந்த இருட்டையும் கடந்திருக்கிறார்கள். ஆனால், அந்த இருட்டு பெண்ணான எனக்கு மட்டும் இயல்பாக வாய்க்கவில்லை. என் கொடுங்கனவுகளில்கூட நான் உடல் கருகிச் சாவதை என்னால் எண்ணிப் பார்க்க முடியாது. கூடிய வரை பாதுகாப்பான பாதையைத் தேடும்படி என்னை ஏதோ உந்துகிறது. சாலையின் வழியே கடக்க நினைத்து இப்போது அதன் ஒரு மருங்கில் காத்திருக்கிறேன். என்னுடன் வேறு சில பெண்களும் காத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் கடைசியாக பிரியங்காவின் மரணமும், அந்த சாலையைக் கடப்பதற்காக சுரங்கப்​பாதையின் இருள் கவிந்த முகத்துடன் எங்களோடு காத்திருக்கிறது.

பிரியங்காக்களின் மரணம் இறவா நிலை கொண்டது. உயிருடன் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் அது ஓய்வின்றித் துரத்திக்கொண்டிருக்கிறது.

- நவீனா, ‘லிலித்தும் ஆதாமும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writernaveena@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in