Published : 09 Dec 2019 07:44 AM
Last Updated : 09 Dec 2019 07:44 AM

மதுரை சோமு: மக்களின் பாடகர் 

கவனகன்

இசை தெரியாத பாமர மக்களையும் அதன் ஆழ அகலங்களை அனுபவிக்க வைத்தவர் மதுரை சோமு என்கிற எஸ்.சோமசுந்தரம் (1919-1989). கச்சேரி மேடைகளைக் காட்டிலும் கோயில் திருவிழாக்களின் திறந்தவெளி அரங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தவர்.

நேரம், காலம் என்ற வரையறைகள் எதுவும் இன்றி மணிக்கணக்கில் பாடியவர். ஆறு மணி நேரம் வரைக்கும்கூட அவரது கச்சேரிகள் தொடர்வது உண்டு. அனைத்துவிதமான பக்க வாத்தியங்களையும் கொண்டு ‘ஃபுல் பெஞ்ச்’ கச்சேரிகளை நடத்தியவர். தெய்வம் படத்தில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே முருகய்யா’ பாடலின் மூலம் எல்லோர்க்கும் அறிமுகமானவர்.

தஞ்சை சுவாமிமலையில் பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர் சோமசுந்தரம். அவரின் தந்தை சச்சிதானந்தம், அரசுப் பணியின் காரணமாக மதுரைக்கு இடம்பெயர்ந்ததால் சோமுவும் மதுரையிலேயே வளர்ந்தார். இளம் வயதில் குஸ்தி கற்றுக்கொண்டார். இசையில் அவருக்குத் தீவிர ஆர்வம் இருந்தாலும், தொடர்ச்சியான உடற்பயிற்சிகளால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டிருந்தது.

சுந்தரேசப் பட்டரிடம் இசை கற்றுக்கொண்ட அவர், பஜனைக் குழுக்களில் சேர்ந்து இடைவிடாத இசைப் பயிற்சி மேற்கொண்டு தனது குரல்வளத்தை மெருகேற்றிக்கொண்டார். அப்போது நாகஸ்வரம் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். நாகஸ்வரத்துக்கேற்ற கம்பீரமான ராகங்களையும் அவர் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்றதற்கு அதுவும் ஒரு காரணம்.

சோமுவின் தாய்மாமா, அன்றைய சென்னை மாகாணத்தின் சித்தூரில் மாவட்ட துணை ஆட்சியராகப் பதவியில் இருந்தார். அவருடன் சோமுவும் சித்தூருக்குச் சென்றார். சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையிடம் 14 ஆண்டுகள் குரு குலவாசம் இருந்து இசை பயின்றார்.

சித்தூரில் தங்கியிருந்ததால் தெலுங்கிலும் நன்றாகப் பேசுவார் சோமு. சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பொருளுணர்ந்து பாடுவார். ஆனாலும், தமிழிசை இயக்கத்தில் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவராக விளங்கியவர் மதுரை சோமு. கேரளத்துக்குச் சென்றால் ஸ்வாதி திருநாள் கீர்த்தனைகளைப் பாடுவார். கன்னடத்தில் புரந்தரதாசர் கீர்த்தனைகளையும் பாடுவார்.

ஹிந்துஸ்தானி இசை பாணியிலும் வல்லவராக இருந்தார் மதுரை சோமு. உஸ்தாத் படே குலாம் அலி கானின் மிகத் தீவிரமான ரசிகரான சோமு, ஒருமுறை மும்பையில் குலாம் அலிகான் முன்னிலையில் அவரது பாணியில் பாடி அவரிடமிருந்து பாராட்டு பெற்றிருக்கிறார். திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளையின் முன்னிலையில் தோடியில் பாடி பாராட்டு வாங்கியதைத் தன் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரமாக அவர் கருதினார்.

அபூர்வ ராகங்களில் பாடி முத்திரைகளைப் பதித்த சோமு, அபூர்வ ராகங்களில் சாகித்யங்களையும் இயற்றியிருக்கிறார். மேடைகளில் அவ்வப்போதைய சூழலுக்கேற்பத் திடுதிப்பென்று புதிய சாகித்யங்களை இயற்றிப் பாடும் ஆசுகவியாக விளங்கினார். ரசிகர்களிடமிருந்து வரும் பாடல்களையும் அவ்வாறே உடனடியாக மெட்டமைத்துப் பாடி அசத்துவார்.

ஒரே ஒரு சினிமா பாடல் மூலம் சாஸ்திரிய இசை அறியாதவர்க்கும் அறிமுகமானவர் மதுரை சோமு. முருக பக்தரான சின்னப்பத் தேவர் தயாரித்த ‘தெய்வம்’ படத்தில் சோமு பாடியது, கிருபானந்த வாரியார் சுவாமிகள் கேட்டுக்கொண்டார் என்பதற்காகத்தான். ஏற்கெனவே, ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்துக்காக நான்கு பாடல்களைப் பாடியிருக்கிறார் சோமு. ராவணன் வேடமேற்று நடித்த டி.கே.பகவதிக்காகப் பதிவுசெய்யப்பட்ட பாடல்கள் அவை.

ஆனால், திரைப்படப் பாடலுக்காகத் தான் பாடும் முறையை மாற்றிக்கொள்ள சோமு தயாராக இல்லை. எனவே, அந்தப் பாடல்கள் வேறொரு பாடகரைக் கொண்டு மீண்டும் பதிவுசெய்யப்பட்டு வெளிவந்தன. திரைப்படங்களுக்காகப் பாடுவதில்லை என்று சோமு முடிவெடுத்தது அப்போதுதான். தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘தெய்வம்’ திரைப்படத்துக்காக குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் பாடிய அவர், அதே நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர்-கணேஷ் இசையமைப்பில் ‘சஷ்டி விரதம்’ என்ற படத்துக்காக ‘துணைவன் வழித் துணைவன்’ என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராகவும், தமிழக அரசின் அரசவை இசைப் புலவராகவும் விளங்கியவர். இசைப் பேரறிஞர், சங்கீத சக்ரவர்த்தி, அருள்ஞான தெய்வீக இசைக்கடல், பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை திருச்சி செல்வேந்திரன் ‘மகா கலைஞன் மதுரை சோமு’ என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

ஒரே நாளில் இரண்டு, மூன்று கச்சேரிகள். இடைவிடாத பயணம். ரயில் பயணங்களிலும் ரசிகர்கள் வேண்டுகோளுக்காகப் பாடுவது என்று அவரது வாழ்வே ஒரு மாபெரும் இசைப் பயணமாக அமைந்தது. இது அவருக்கு நூற்றாண்டு. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் அவரது குரல் தமிழுலகில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

டிசம்பர் 9: மதுரை சோமு நினைவுநாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x