Published : 04 Dec 2019 07:35 AM
Last Updated : 04 Dec 2019 07:35 AM

தூங்கா நகரம் அந்தஸ்தை இழக்கிறதா மதுரை?

வரதன்

இரண்டு வருடங்களுக்கு முன் மதுரை பைபாஸ் ரோட்டில் இருக்கும் டெர்பி ஷோரூமில், தீபாவளி முதல் நாள் இரவு நண்பருக்குச் சட்டை எடுக்கச் சென்றிருந்தோம். கூட வந்த நண்பர்கள் கடைக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். கடையில் கூட்டம் அதிகமில்லை. இளம் தம்பதியும் இன்னும் ஒன்றிரண்டு பேர் மட்டுமே. நள்ளிரவு நெருங்கியதும் போலீஸார் வெளியே இருந்து சத்தம் போட்டுக் கடையை அடைக்கச்சொல்லினர். அவர்கள் ஒவ்வொரு கடையாக அப்படிச் சொல்லிக்கொண்டு வந்திருக்கின்றனர். எனக்குச் சாப்பாட்டுக் கடைகளில் அந்த அனுபவம், சென்னையிலும் மதுரையிலும் ஏற்பட்டதுண்டு. அது வழக்கமான ஒன்றுதான். ஆனால், ஒரு துணிக் கடையில், அதுவும் தீபாவளிக்கு முதல் நாள் இரவு இது ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு. கடைக்காரர் ஷட்டரைப் பாதி இறக்கிவிட்டு, அச்சத்துடன் தனது இளம் கணவனை நெருங்கியவாறு நின்றிருந்த பெண்ணிடம், “நீங்க பாருங்கம்மா, ஒண்ணும் பிரச்சினை இல்ல” என்றார்.

கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் மத்தியிலிருந்து தீபாவளி முன்னிரவு நான் நண்பர்களுடன் மதுரையைச் சுற்றிவந்திருக்கிறேன். மதுரையைச் சுற்றுவதென்பது கோயிலைச் சுற்றுவதுதான். சித்திரையில் அழகர் ஆற்றில் இறங்கும் அனுபவத்துக்கு இணையான ஒரு அனுபவம் அது. பணம் சம்பாதிப்பதற்கும் பணத்தைச் செலவழிப்பதற்குமான இந்த வெளி, அதை வேடிக்கை பார்ப்பதற்கு வருபவர்களாலும் வேறு பல லாபங்களுக்காக வருபவர்களாலும் ததும்பிக்கிடக்கும். பொழுது புலர்கையில் லாப நட்டம் தெரிந்துவிடும். பிறகு, அடுத்த தீபாவளிதான்.

இந்த ஆண்டும் தீபாவளி முன்னிரவு தல்லாகுளத்தில் உள்ள ஈசி பை, விஷால் மாலில் உள்ள மேக்ஸ் போன்ற பிராண்டட் கடைகளில் பத்தரை மணிக்கெல்லாம் கடையடைக்கும் மன நிலையில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. வாடிக்கையாளர் முட்டிமோதாதபோது ஆர்வம் வடியத்தான் செய்யும்.

கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரையான ஆறு நாட்களுக்குள் அமேஸானும் ஃப்ளிப்கார்ட்டும் மட்டும் ரூ.19,000 கோடிக்குப் பொருட்களை விற்றிருக்கின்றன. அந்த நாட்களுக்குப் பிறகும் அவை தீபாவளிச் சிறப்பு விற்பனையைச் செய்திருக்கின்றன. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் சிறு டவுன்களிலும் முன்பைவிட விற்பனை கூடியிருக்கிறது என்கிறது அமேஸான். அதன் 88% ஆர்டர் சிறிய டவுன்களிலிருந்து வந்துள்ளன. அத்தோடு, இந்தியாவின் 99.4% பின்கோடுகளிலிருந்தும் எங்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளன என்கிறது அமேஸான். ஸ்மார்ட்போன் மற்றும் இணையச் சேவைப் பரவலின் விளைவு இது.

சட்டம் - ஒழுங்கு சீர் குலையாதிருக்கும் பொருட்டு ஒரு நகரத்தைத் தூங்க வைக்கும் போலீஸார், இனி முதலாளிகள் 24 மணி நேரமும் கடை திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துவிட்டது குறித்து விசனப்படத் தேவையில்லை. மதுரைவாசிகள் இப்போது சீக்கிரம் தூங்கிப் பழகிவிட்டார்கள். அத்தோடு, இரவில் உறங்கும் நகரங்களின் விளக்குகள் இப்போது அமேஸானிலும் ஃபிளிப்கார்ட்டிலும் எரிந்துகொண்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x