

ஷங்கர்
கிட்டத்தட்ட 150 நாட்கள், 1,300 கிமீ-க்கள், இரண்டு மாநிலங்கள், ஆறு மாவட்டங்களைக் கடந்திருக்கிறது ஒரு புலி. புலிகளின் நடமாட்டம், பரவலைக் கவனிக்கும் ஆய்வுகள் தொடங்கப்பட்ட பின்னர், அதிக தூரத்தைக் கடந்த புலி இதுவே ஆகும்.
மகாராஷ்டிரத்தில் உள்ள யாவட்மால் மாவட்டத்தைச் சேர்ந்த திபேஸ்வர் சரணாலயத்திலிருந்து கிளம்பி, புல்தானா மாவட்டத்தின் ஞான்கங்கா சரணாலயத்தை நோக்கிப் பயணித்த அந்தப் பெண் புலிக்கு இரண்டரை வயதாகிறது. புலிகள் நடமாட்டம், பரவலைக் கண்காணிப்பதற்கும் கணக்கிடுவதற்காகவும் ரேடியோ பட்டை அணிவிக்கப்பட்ட இந்தப் புலியின் பெயர் டிடபிள்யுஎல்எஸ்-டிஒன்-சிஒன். இது இரண்டு ஆண் குட்டிகளோடு 2016-ல் பிறந்தது.
புலிக்குட்டிகள் வளரத் தொடங்கும் போது, தாயை விட்டுத் தான் வசிப்பதற்கான புதிய பிராந்தியத்தைத் தேடத் தொடங்கும். அப்படித்தான் இந்தப் புலியும் தனது சகோதரப் புலியுடன் தான் இருந்த பகுதிக்கு அருகில் உள்ள பந்தர்காவ்டா சரகத்தில் தனது இருப்பிடத்துக்கான தேடலை ஆரம்பித்தது. தெலங்கானா மாநிலத்தின் எல்லையில் இருக்கும் பகுதி இது.
கடந்த ஜூலையின் மத்தியில் கிட்வாட் காடுகள் வழியாக அடிலாபாத் பகுதியை அடைந்தது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அடிலாபாத், நான்டெட் காடுகளில் பெரும் பொழுதைக் கழித்திருக்கிறது. அதற்குப் பின்னர், பைன்கங்கா சரணாலயத்தில் கொஞ்சம் நாட்களைக் கழித்தபிறகு, புசாத் சரகத்துக்குச் சென்று இசாப்பூர் சரணாலயங்களில் புகுந்துள்ளது. அக்டோபர் இறுதியில் ஹிங்கோலி மாவட்டத்துக்குள் நுழைந்தது. அங்கிருந்து வாசிம் மாவட்டத்தின் வழியாக அகோலா சரகத்தின் புல்தானா வனத்துக்குள் நுழைந்தது.
இப்படியாக, புலிகள் நன்றாகப் பராமரிக்கப்படும் இரைகளும் நன்றாகக் கிடைக்கும் ஞான்கங்கா சரணாலயத்துக்கு வந்துசேர்ந்துள்ளது. ரேடியோபட்டை அணிவிக்கப்பட்ட அந்தப் புலி, மேல்காட்டுக்கு 50 கிமீ தூரத்தில் இருப்பதாக செயற்கைத் துணைக்கோள் தொழில்நுட்பம் வழியாகத் தெரியவந்துள்ளது.
1,300 கிமீ தூரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களைக் கடந்து, வயல்களையும் மக்கள் வசிக்கும் இடங்களையும் கடந்த இந்தப் புலி, மனிதர்கள் யாருக்கும் தொந்தரவேதும் தரவில்லை. ஒரேயொரு முறை மட்டும் புலி இருந்த புதருக்குள் சென்ற மனிதரை விரட்டுவதற்காகத் தாக்கியுள்ளது.
உணவுக்காக மட்டுமே கால்நடைகள் சிலவற்றைப் பிடித்துள்ளது என்கிறார் மேல்காட் புலிகள் சரகத்தின் கள இயக்குநர் எம்எஸ் ரெட்டி. ஒரு இரையைப் பிடித்துச் சாப்பிட்ட பின்னர், அப்பகுதியில் நான்கு நாட்கள் இளைப்பாறுமாம்.
குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் புலிகள் செல்லாது என்பதே புலிகள் நடமாட்டம், பரவல் குறித்த இதுவரையிலான கருத்தாக உள்ளது. அதை இந்தப் பெண் புலி பொய்ப்பித்துள்ளது. உணவுக்காகவும் இணைக்காகவும் இருப்பிடத் துக்காகவும் வெகுதூரம் பயணிக்க வேண்டியதற்கான காரணம், காடுகளின் பரப்பு சுருங்கிவருவதாலும் இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.