Published : 03 Dec 2019 09:49 AM
Last Updated : 03 Dec 2019 09:49 AM

அதிகரிக்கும் தற்கொலைகள்... கவனிக்கப்படுமா கன்னியாகுமரி?

தமிழக அளவில் படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரி. அதேவேளையில், தற்கொலை மரணங்களும் இங்குதான் அதிகம். குமரியில் தற்கொலை செய்துகொள்பவர்களில் பெரும் பகுதியினர் நன்கு படித்தவர்களாக இருக்கிறார்கள்.

விளிம்புநிலை மக்களிடமும், கல்வி வெளிச்சம் முழுதாக எட்டாதவர்களிடமும் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்ன காரணம்? இதற்கான காரணங்கள் உற்றுநோக்கப்பட வேண்டியவை. ஆனால், பொதுவெளியில் விவாதிக்கப்படாத விஷயமாகவே இது நகர்ந்துகொண்டிருக்கிறது.

நிலப்பரப்போடு ஒப்பிடுகையில் மக்கள் அடர்த்தி குமரியில் மிக அதிகம். தமிழகத்தின் பிற மாவட்டங்களோடு ஒப்பிட்டால் ஓரளவு பொருளாதார பலம் கொண்ட மாவட்டமாகவே குமரி இருக்கிறது. இங்கே தற்கொலைகள் அதிகரிப்பதன் காரணங்கள் நுட்பமானவை.

இதன் பின்னணியில் ‘சமூக அந்தஸ்து’, ‘உணர்ச்சிவயப்படல்’ இரண்டும் ஒளிந்திருக்கிறது. தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்வதும் தவறுதான் என்கிறது சட்டம். தற்கொலைக்குத் துணிந்த பின், சட்ட அனுமதியைக் கோரும் அவகாசம் அவர்களுக்கு இருப்பதில்லை.

சமூக அந்தஸ்து படுத்தும் பாடு

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ‘தினசரி காவல் நிலைய அறிக்கையில் (டிஎஸ்ஆர்)’ மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளைத் தெரிந்துகொள்ள முடியும். அங்கு செய்தி நிமித்தம் போய்ப் பார்த்தால், குமரி மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு மூன்று தற்கொலைகளுக்குக் குறையாமல் பதிவாவது தெரியவந்தது. வயிற்றுவலி, தீராத நோயால் அவதி, கடன் தொல்லை, காதல் தோல்வி உள்ளிட்ட வகையறைக்குள் வரும் தற்கொலைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ‘சமூக அந்தஸ்து’ படுத்தும்பாட்டால் நேரும் மரணங்கள் இங்கே ஏராளம்.

இப்படியான தற்கொலைகளில் சிக்குபவர்கள் நன்கு படித்தவர்களாக இருப்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். மிகச் சமீபத்தில், நாகர்கோவில் வடசேரியில் தொழிலதிபர் ஒருவர், அவருடைய வயதான தாய், மனைவி, மருத்துவம் படிக்கும் மகள் எனக் குடும்பத்தோடு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

தொழில் நஷ்டம், வாங்கிய கடனை அடைக்க முடியாதது எனப் பல காரணங்கள் சொன்னாலும் அது தற்கொலைதானே? அதுவும் மருத்துவராகும் கனவோடு கல்லூரிக்குப் போன அன்பு மகளையும் சேர்த்துத்தானே குடித்திருக்கிறான் தற்கொலை அரக்கன்? இங்கே தற்கொலைக்கு உந்துவது ‘சமூக அந்தஸ்து’ என்னும் முகத்திரைதானே ஒழிய வேறென்ன சொல்வது? ஏதோ ஒருவகையில் படிப்பும் கூடக் கூட, சமூக அந்தஸ்து என்னும் போர்வையை இன்னும் அழுத்தமாக இழுத்துப் போர்த்துகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது இயற்பியல் பாடம் எடுத்த ஆசிரியர் அன்பு, நாகர்கோவிலில் ரொம்ப பிரபலம். “மதிப்பெண்கள் என்பது வாழ்க்கைக்கான தேர்வு அல்ல. நம் கல்வி முறைக்கான தேர்வுதான். பரீட்சையில் தோல்வியடைந்ததால் அதனால் மனமுடைந்து தற்கொலை எண்ணத்துக்குள் போக வேண்டியதில்லை” எனத் தேர்வு நெருங்கும்போதெல்லாம் பெரும் பகுதி நேரம் ஒதுக்கி விழிப்புணர்வுப் பாடம் எடுப்பார் அன்பு. ஆசிரியர் பணியோடு சேர்ந்து அவர் செய்த ஏற்றுமதி வர்த்தகத்தில் வெளிநாட்டிலிருந்து பணம் வராததால் பின்னொரு நாளில், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

பள்ளிக்கு அன்று விடுமுறை விடப்பட்டது. ‘அவர் இறந்த சில நாட்களிலேயே பணம் வந்துவிட்டது, அவசரப்பட்டுவிட்டார்’ என்றெல்லாம் பள்ளிக் காலத்தில் செவிகளில் விழுந்தது. தற்கொலை குறித்த எதிர்மறையான எண்ணம் கொண்டிருந்த, அதுகுறித்துத் தன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டிருந்த ஒருவருக்கே அப்படியான மனநிலை வாய்க்கிறதென்றால், இந்தப் பிரச்சினையை நாம் நுட்பமாக அணுக வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சுமத்தும் அழுத்தங்கள்

படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் என்றாலும் பெரிதாகத் தொழில் வாய்ப்புகள் இல்லாத பகுதி இது. இதனாலும் இளம் தலைமுறையினரின் தற்கொலைப் போக்கு இங்கு அதிகம். இதற்காக எல்லாம்கூடவா சாவார்கள் எனக் கேட்கும் அளவுக்கான சம்பவம் ஒன்று சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.

தென்தாமரைக்குளம் பகுதியில் அப்பா வாங்கிவந்த புரோட்டாவைத் தம்பியோடு பகிர்ந்து சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட மன உளைச்சலால் சதீஷ் என்ற வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். படித்தவர்கள் அதிகம் என மார்தட்டிக்கொண்டே சூழலைப் புரிந்து நடக்கும் இளைய தலைமுறையை இங்கே நாம் உருவாக்க முயலவில்லை.

“இன்றைய தலைமுறை மீது பெற்றோருக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக வாழும் போக்கு இருந்தது. இதனால், குழந்தைகள் அனுசரணையாகப் பழகவும், விட்டுக்கொடுத்து வாழவும் இயல்பாகவே பயிற்சி கிடைத்தது. இப்போதெல்லாம் குடும்பங்கள் உடைந்திருக்கின்றன. சேர்ந்து வாழ்வதாகச் சொல்லும் குடும்பம்கூட உள்ளுக்குள் பிரிந்தே கிடக்கின்றன.

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் வீட்டில் அந்தக் குழந்தையின் மீது அதீத கவனத்தைக் குவிக்கின்றனர். தங்களைவிடத் தங்கள் குழந்தைகள் உச்சத்துக்குப் போக வேண்டுமென தங்கள் கனவுகளையும் அவர்கள் மீது சுமத்துகின்றனர்.

கொஞ்சம் வளர்ந்து, சமூகத்தின் முகத்தைப் பார்க்கும்போது குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அவர்கள் வளர்ந்துவந்த சூழலுக்கும் சமூகத்துக்குமான இடைவெளிக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதெல்லாம் தற்கொலைகள் பெருக ஒருவகையில் காரணமாகிறது” என்கிறார், இதுதொடர்பாக தொடர் விழிப்புணர்வை மேற்கொண்டுவரும் மருத்துவர் அஜய்குமார்.

ஏட்டுக் கல்வியும் வாழ்க்கைக் கல்வியும்

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு போலீஸ்காரரின் தற்கொலையை முன்னுதாரணம் காட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். குமரியின் பாறையடி பகுதியைச் சேர்ந்த அஜின் ராஜ் என்ற 26 வயது வாலிபர் போலீஸாக இருந்தார். இவர் குமரியின், கோதையாறு நீர்மின் நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பாதுகாப்புப் பணிக்காகக் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். காதலித்த பெண்ணோடு கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்யப் பிடிக்காமல் நடந்த தற்கொலை அது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களோடு ஒப்பிட்டால், மக்கள் அடர்த்தியைவிடக் கல்விக்கூடங்கள் குமரியில் அதிகம். ஆனால், ஏட்டுக் கல்வி மட்டும் போதிக்கப்படுகிறதே தவிர, வாழ்க்கைக் கல்வி போதிக்கப்படாததன் வெளிப்பாடே இப்படி உயிர்கள் மடிவதற்குக் காரணம். நெருக்கடியான சூழலை எதிர்கொள்வது குறித்தும், மனதை விசாலப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

பள்ளிகள்தோறும் தற்கொலை விழிப்புணர்வுப் பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும். தற்கொலையின் விளிம்புவரை போய் மீண்டுவந்து வாழ்வில் ஜெயித்தவர்களின் வாழ்க்கைக் கதைகள் பாடப்புத்தகத்தில் இடம்பெறச்செய்ய வேண்டும். ‘கல்வி கற்றாலே விழிப்புணர்வு வந்துவிடும்...

வாழ்வை எந்தச் சூழலிலும் எதிர்கொள்ளும் திறன் வந்துவிடும்’ என்ற பொதுக்கருத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது குமரியின் தற்கொலைச் சம்பவங்கள். அதை நாம் பரிசீலிக்க வேண்டும்!

- என்.சுவாமிநாதன்,
தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x