Published : 29 Nov 2019 08:16 am

Updated : 29 Nov 2019 10:50 am

 

Published : 29 Nov 2019 08:16 AM
Last Updated : 29 Nov 2019 10:50 AM

அஜினமோட்டோ: அபார ருசியில் ஒளிந்திருக்கும் ஆபத்து!

ajinomoto-issue

கு.கணேசன்

“ஆஹா, என்ன ருசி… இது அபார ருசி!” வீட்டிலோ விருந்திலோ இப்படிப் பாராட்டுகிறீர்கள் என்றால், அந்தப் பிரமாத ருசிக்குப் பின்னால் உங்கள் ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கும் ஓர் ஆபத்து காத்திருப்பதை நீங்கள் அறியவில்லை என்றே அர்த்தம். ‘எம்எஸ்ஜி’ என்னும் மூன்றெழுத்து விஷம்தான் அந்த ஆபத்து! அதாவது, அஜினமோட்டோ எனும் ‘மோனோ சோடியம் குளுட்டமேட்’. இது உணவுக்குச் சுவை கூட்டும் ஒரு வேதி உப்பு. ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்னும் வணிக உத்தியில் அசைவ உணவுகளில் மட்டுமே இது கலக்கப்பட்டது. இப்போது இது கலக்கப்படாத உணவே இல்லை என்னும் நிலைமைக்கு ‘முன்னேறி’விட்டது. ஆம், சீன உணவகங்களில் ‘விஐபி’ உப்பாக வீற்றிருந்த ‘எம்எஸ்ஜி’, இப்போது எல்லோர் வீட்டுச் சமையலறைக்குள்ளும் சர்வ சாதாரணமாக நுழையும் விருந்தாளி ஆகிவிட்டது.

இந்த உப்பு ‘ஆபத்தின் அவதாரம்’ என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இதன் மீதான முதல் குற்றச்சாட்டு, பிரபலமான ஒரு மருத்துவ இதழில் வெளிவந்தது. சீன உணவகங்களில் சாப்பிட்டவர்களுக்கு உடல் பலவீனம் ஏற்படுவதாகவும் படபடப்பு வருவதாகவும் கைகள் மரத்துப்போவதாகவும் ஒரு சீன-அமெரிக்க மருத்துவர் எழுதினார். இந்தப் பிரச்சினைக்கு ‘சீன உணவக நோய்த்தொகுப்பு’ என்று பெயரும் சூட்டினார். அப்போது ஆரம்பித்த சர்ச்சை இன்று வரை தொடர்கிறது.


ஒவ்வொரு நாளும் நூறு நோயாளிகளைச் சந்திப்பவன் என்கிற முறையில் நான் சொல்கிறேன்: மதுப் பழக்கம், புகைப் பழக்கத்துக்கு இணையாக இன்று இந்தியர்களின் உடல்நலனைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது துரித உணவுப் பழக்கம். அதிலும் முக்கியமாக, இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் உணவுப் பழக்கத்தைச் சீன உணவுகள் புரட்டிப்போட்டுள்ளன. சாப்பிடும் அறையில் அரைகுறை வெளிச்சம் தந்து 600 மடங்கு விலை வைத்து விற்கும் நட்சத்திர உணவகங்களில் தொடங்கி சாலையோரத் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் மலிவு விலை அசைவ உணவுகள் வரை அனைத்திலும் ‘எம்எஸ்ஜி’ இருக்கிறது.

நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், சில்லி சிக்கன், கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட சிக்கன் வகைகள், சூப் வகைகள், பிரியாணி வகைகள், ஸ்பிரிங் ரோல்கள், பல வண்ண சாஸ்கள் போன்ற சீன உணவுகள் முன்பெல்லாம் கடைச்சரக்குகளாக இருந்தன. இப்போதோ அவற்றை வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். கடுகு, சீரகம், சோம்பு, மிளகு, மஞ்சள், பெருங்காயம், இலவங்கம், வெந்தயம் குடிகொண்டிருந்த அஞ்சறைப் பெட்டியில் ‘எம்எஸ்ஜி’, சோடா உப்பு, பல வண்ணப் பொடிகள் புகுந்துவிட்டதைப் பார்க்கிறோம். சீன உணவின் சுவைதான் இன்றைக்கு சிறுவர்களுக்கும் இளையவர்களுக்கும் அதிகம் பிடிக்கிறது. இல்லை, இல்லை, அவர்களை அடிமைப்படுத்தியிருக்கிறது. அதற்கு ‘எம்எஸ்ஜி’தான் பின்புலம் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.

என்னிடம் பத்து வயதுச் சிறுமி அடிக்கடி தலை வலிக்கிறது என்று சிகிச்சைக்கு வந்தாள். முக்கியமாக, ஞாயிற்றுக்கிழமை வந்தால் அவளுக்குத் தலைவலியும் வந்துவிடும். விடுமுறை நாளில் வீட்டுப்பாடம் படிக்கச் சிரமப்படுவதால்தான் இந்தத் தலைவலி வருகிறது என்றே நானும் அவளது பெற்றோரும் நினைத்தோம். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகுதான் உண்மை புரிந்தது. அந்தச் சிறுமிக்கு ‘கோபி மஞ்சூரியன்’ ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு சனிக்கிழமை இரவிலும் பெற்றோருடன் உணவகத்துக்குச் சென்று அதைச் சாப்பிட்டிருக்கிறாள். அதில் கலக்கப்படும் ‘எம்எஸ்ஜி’தான் அவளுக்கு ஒவ்வாமையாகி தலைவலியை உண்டாக்கியிருக்கிறது. இது தெரிந்ததும் அவளுக்குத் துரித உணவுகள் தரப்படுவதையே தடைசெய்துவிட்டேன். அதற்குப் பிறகு அவளுக்குத் தலைவலி வரவில்லை. பெண்களுக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். இப்போது புதிதாகப் புகுந்துள்ள காரணம், ‘எம்எஸ்ஜி’!

சாதாரண தலைவலியில் தொடங்கும் இந்த நோய்ப் பயணம் ஆஸ்துமா, சுவாசப் பிரச்சினை, செரிமானப் பிரச்சினை, தூக்கமின்மை, நெஞ்சுவலி, அல்சர், மூலநோய், குழந்தைப்பேறின்மை என நீண்ட பாதையில் பயணித்து, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு, குடல் புற்றுநோய் என்று கொடிய நோய்களில் விரிகிறது. இதற்கான காரணங்களும் வலுவாகவே இருக்கின்றன.

இந்தியாவில் முதல் சீன உணவகம் கொல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கேதான் ‘எம்எஸ்ஜி’யால் இரைப்பையில் புற்றுநோய் வருவதும் உறுதிசெய்யப்பட்டது. சீன உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களிடம் கொல்கத்தா சந்திரபோஸ் புற்றுநோய் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உண்மையானது.

இதயமும் பாதிக்கப்படும்

உணவில் இந்த உப்பை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. அபார ருசிதான் எல்லோருக்குமான இலக்கு. அதை அடைவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதுதான் எழுதப்படாத விதி. அளவில்லாமல் ‘எம்எஸ்ஜி’யைப் பயன்படுத்தும்போது நம் ரத்தத்தில் குளுட்டமேட் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கிறது. அப்போது நரம்புகள் பலவீனமாகி நரம்புத்தளர்ச்சிக்கு வித்திடுகிறது; விரல் நடுக்கம், உடல் மதமதப்பு, குமட்டல், வாந்தி போன்ற தொல்லைகள் எட்டிப்பார்க்கின்றன. குளுட்டமேட் பத்து மடங்கு அதிகரிக்கிறது என்றால், ரத்த அழுத்தம் அதிகமாகி இதயத்தையே பாதிக்கிறது. அளவுக்கு மீறிய ‘எம்எஸ்ஜி’ பயன்பாடு உடலுக்குள் சோடியத்தின் அளவை எகிற வைப்பதுதான் இதற்குக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவில் 2002-ல் நடத்தப்பட்ட ஒரு தனியார் ஆராய்ச்சியில் இது புலப்பட்டது.

நம் இரைப்பையில் லெப்டின் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. இதுதான் நாம் திருப்தியாகச் சாப்பிட்டோமா இல்லையா என்பதை உணர்த்துகிறது. ‘எம்எஸ்ஜி’ கலந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த லெப்டின் வேலைநிறுத்தம் செய்துவிடுகிறது. அதனால், இவர்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதில்லை. அதன் விளைவாக, இவர்கள் அளவில்லாமல் சாப்பிடுவது வழக்கமாகிவிடுகிறது. இது உடற்பருமனில் கொண்டுபோய்விடுகிறது. இப்படி உண்டான உடற்பருமன், அடுத்தகட்டத்துக்குத் தாவி நீரிழிவு, மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

வீட்டுச் சமையலறையில் நேரம் செலவழிப்பதற்குச் சோம்பேறித்தனப்பட்டு ‘உடனடி’ உணவுகளை நாடிச் செல்வதை நவீனமாகக் கருதுகிறோம். அவற்றில் குவிந்திருக்கும் வேதித் துணுக்குகளை உடைத்துப் பார்த்தால் எல்லாமே விஷம். அவற்றில் ‘எம்எஸ்ஜி’ என்பது ஒரு வீரிய விஷம்.

நாட்டில் பிளாஸ்டிக்குக்குத் தடை, பேனர் வைக்கத் தடை, இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை… இந்த வரிசையில் இப்போது ‘எம்எஸ்ஜி’க்கும் தடை விதிக்கும் யோசனை அரசுக்கு இருப்பதாகத் தெரிகிறது. அது காலாகாலத்தில் நடந்தேறிவிட்டால் நம் வீட்டுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com


அஜினமோட்டோஅபார ருசிஅஜினமோட்டோ ஆபத்துஎம்.எஸ்.ஜிநூடுல்ஸ்ப்ரைடு ரைஸ்சிக்கல் நூடுல்ஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x