Published : 29 Nov 2019 08:13 am

Updated : 29 Nov 2019 10:51 am

 

Published : 29 Nov 2019 08:13 AM
Last Updated : 29 Nov 2019 10:51 AM

பிச்சையெடுத்தல் ஒரு சமூகப் பிரச்சினை: அது தனிநபரின் தவறு அல்ல!

beggers-issue

கௌதம் பாட்டியா

இரண்டு நூற்றாண்டுகள் காலனிய ஆட்சியானது இந்தியர்களுக்கு ஏராளமான கொடுமைகளை இழைத்திருக்கிறது. அதில் ஒரு வடிவம்தான் குறிப்பிட்ட, குறுகலான வாழ்க்கை முறைக்குள் வராத ஒட்டுமொத்த மக்கள் குழுக்கள் மீது முத்திரை குத்தி அவர்களைக் குற்றவாளிகளாக்கியது. எடுத்துக்காட்டாக, குற்றப்பரம்பரையினர் போன்ற சட்டங்கள் மூலம் பூர்வகுடி மக்கள் பிறப்பிலேயே குற்றவாளிகள் என்று கருதப்பட்டு, சித்ரவதை முகாம்களுக்குள் தள்ளப்பட்டு, அவர்களின் குடும்பங்களிடமிருந்து அவர்கள் பிரிக்கப்பட்டு கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டனர்.

சுதந்திரமும் அரசமைப்பும் புதிய விடியலுக்கு வழிகாட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் நிதர்சனமானது வேறுவிதமாக இருந்தது. காலனியத்துக்குப் பிந்தைய இந்திய அரசானது பிரிட்டிஷ் அரசின் மோசமான கொடுமைகள் பலவற்றைப் பிரதியெடுத்தது. அவற்றில் பட்டவர்த்தனமான ஒரு எடுத்துக்காட்டு ‘பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டம்’. இந்தச் சட்டம் பம்பாயில் 1958-ல் கொண்டுவரப்பட்டு பிறகு பல மாநிலங்களுக்கும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கொடூரமான சட்டங்கள் நாடோடிகளாக வாழ்க்கை நடத்தும் சமூகங்களை, அதாவது சராசரியான குடிமக்கள் என்று அரசு செய்யும் வரையறைக்குள் வராத எவரையும், குற்றவாளிகளாக்குகின்றன. தடுப்புச் சிறைகளைவிடக் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லத்தக்க சான்றளிக்கப்பட்ட மையங்களை நிறுவுவதன் மூலம் சமூகத்தின் மிகவும் ஓரங்கட்டப்பட்ட பகுதியினர் சிலர் தீண்டாமையையும் சிறைவைப்பையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை.

எனினும், கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பொன்றை வழங்கியது. அந்த மாநிலத்தின் ‘பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்ட’த்தை செல்லாததாக அந்தத் தீர்ப்பு ஆக்கியது. தனது விரிவான தீர்ப்பில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டல் அந்தச் சட்டத்தின் காலனிய வேர்களை அடையாளம் கண்டதுடன், இந்தச் சட்டமானது மனித மாண்பு, சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றின் மீறல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டங்கள் என்ன சொல்கின்றன? நம் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயம் ‘பிச்சையெடுத்தல்’ என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கமே. “பிழைப்புக்கு எந்த வழியும் இல்லாமல், எந்தப் பொது இடத்திலும் திரிதல் அல்லது இருத்தல், அப்படியாக அந்த நபர் பிச்சை எடுத்தல் மூலம் உயிர்வாழ்தல்” என்று பிச்சைக்கு அர்த்தம் கூறப்படுகிறது. இப்படியாக, பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டம் பிச்சையெடுத்தல் என்ற செயலைத் தாண்டியும் செல்கிறது; திரிந்துகொண்டிருப்பவர்கள் ஏதோ ஒருகட்டத்தில் பிச்சையெடுக்கக்கூடும் என்று அவர்களைக் குற்றவாளிகளாக்குகிறது. இந்தச் சட்டத்தின் நோக்கமானது பொது இடத்தைப் பாதுகாப்பதோ குற்றங்களைத் தடுப்பதோ அல்ல, ஆதரவற்றோராகவும் ஏழைகளாகவும் தென்படுபவர்களை அப்புறப்படுத்தி இந்த இடங்களைச் ‘சுத்திகரிப்பதே’ ஆகும்.

இந்தச் சட்டங்களானது நடைமுறையால் மோசமாக்கப்படுகின்றன. பிச்சையெடுப்பவர்கள் எந்தப் பிடி ஆணையுமின்றி கைதுசெய்யப்படலாம். நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு அவர்கள் ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடங்கள் வரை பிச்சைக்காரர்கள் இல்லத்தில் வைக்கப்படுவார்கள். ‘இரண்டாவது முறையாகக் குற்றமிழைத்ததாக’க் கண்டறியப்பட்டால், தண்டனையானது ஏழு ஆண்டுகள் நீளும். இன்னும் குறிப்பாக, பிச்சைக்காரர்களைக் காவல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து, தலைமுடியை மழித்து, உடலைச் ‘சுத்தம்செய்வதற்காக’ அவர்களின் ‘ஆடைகளை அகற்ற’ ஜம்மு காஷ்மீரின் பிச்சை தடுப்புச் சட்ட விதிகள் அதிகாரம் தருகின்றன.

உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த மனுதாரர் சுஹைல் ரஷீத் பட் மேற்கண்ட விஷயங்களில் ‘பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்ட’த்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். அரசோ ‘பிச்சைக்காரர்க’ளிலிருந்து ‘நல்ல குடிமக்க’ளை உருவாக்குவதற்கும், பொது ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் இந்தச் சட்டம் அவசியம் என்று வாதாடியது. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு ‘பிச்சைக்காரர்கள்’ இடையூறு விளைவிக்கிறார்கள் எனவும், ‘அமைப்புமயப்பட்ட பிச்சை’யைத் தடுப்பதற்கும் இந்தச் சட்டம் அவசியம் என்று வாதிட்டது.

காலனிய எச்சங்கள்

எச்சரிக்கையுடனும் விரிவாகவும் அமைந்த இந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் அரசின் வாதங்களுக்கு எதிர்வினையாற்றியது. இங்கிலாந்தில் உள்ள பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டங்களின் மூலத்தை விவாதிப்பதன் மூலம் தலைமை நீதிபதி தனது தீர்ப்பைத் தொடங்கினார். நிலையான பிழைப்பாதாரம் இல்லாதவர்கள் சமூகத்துக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு, ‘பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்ட’த்துக்கு முன்னோடியாக ‘நாடோடியாகத் திரிதல் தடுப்புச் சட்டங்கள்’ இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்டன. இந்தியாவில் பிச்சையெடுத்தல் 1920-களில் குற்றமாக்கப்பட்டன. இது ‘சில சமூகங்களின் மீது குற்றத்தைச் சுமத்தி, அவற்றைக் கீழிறக்கும்’ காலனிய தர்க்கத்தின் அடிப்படையில்தான் இப்படிச் செய்யப்பட்டிருக்கிறது.

பிறகு, ‘பிச்சையெடுத்தலும் வீடில்லா நிலையும் மிக மோசமான வறுமையின் அடையாளங்கள்’ என்ற முக்கியமான அவதானிப்பை உயர் நீதிமன்றம் முன்வைத்தது. ‘சமூகம் உருவாக்கிய வலையைத் தாண்டியும் ஒரு மனிதர் விழுந்துவிட்டார் என்பதன் வெளிப்பாடுதான் பிச்சையெடுத்தல். தனது எல்லா குடிமக்களும் அடிப்படையான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கடமையிலிருந்து அரசு தவறிவிட்டதன் சான்றுதான் இது.’ ஆகவே, தனிப்பட்ட மனிதர் ஒருவரின் தோல்விதான் அவரது வறுமை என்ற தீங்கான உலகப் பார்வையைப் புறந்தள்ளி, பிரதான தோல்வியானது அரசினுடையது என்று நீதிமன்றம் அடையாளம் கண்டது.

இவ்வாறாக நிறுவிவிட்டு, நீதிமன்றம் அடிப்படை உரிமைகள் என்ற கேள்விக்கு வருகிறது. ‘பிச்சையெடுத்தல்’ என்பது ஒரு மனிதர் தனது நிலையை மற்றொருவருக்கு எடுத்துச்சொல்லி, அதன் மூலம் அவரின் உதவியை நாடுவதற்கான அமைதியான வழிமுறை என்பதால், அது அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (1) அளித்துள்ள பேச்சு சுதந்திரம் என்ற உத்தரவாதத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. சட்டமானது ‘பொது இடங்களில் திரிதலை’ குற்றமாக்குகிறது. ஆனால், நீதிமன்றமோ ‘பொது இடமானது பொது மக்களில் ஒவ்வொருவரும் அனுபவிப்பதற்கு உரியது’ என்பதால், இந்தச் சட்டம் ஏழைகளையும் சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களையும் இந்தப் பொது இடங்களிலிருந்து ஒதுக்கிவைக்கிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இப்படியாக, சுதந்திரமாகப் பல்வேறு இடங்களுக்கும் செல்வதற்காக அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையையும் மீறுகிறது.

இறுதியாக, வறுமையைக் குற்றமாக்குவதன் மூலம் பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டமானது, அடிப்படை மனித கண்ணியத்தை மீறியுள்ளதாகத் தலைமை நீதிபதி கூறியுள்ளார். “இந்தச் சட்டமானது வறுமைக்கு எதிரான எண்ணத்தைக் கொண்டிருக்கிறது. வேறு தேர்வே இல்லாதவர்களை, நிறுவனங்கள் போன்றவற்றின் ஆதரவு இல்லாதவர்களை, எந்த ஆதரவும் பிழைப்பு ஆதாரங்களும் இல்லாதவர்களைக் குற்றவாளிகளாக்குகிறது” என்று நீதிபதி குறிப்பிடுகிறார். கூடவே, இந்தச் சட்டத்தின் கீழ் வரும் கொடூரமான நடவடிக்கைகளும் சேர்ந்து அரசமைப்புச் சட்டத்தின் 21-வது கூறு வழங்கியுள்ள வாழ்வதற்கான உரிமையையும் தனிமனித சுதந்திரத்தையும் மீறுகின்றன.

தண்டிக்கும் அரசமைப்புச் சட்டவாதம்

சமீப காலமாக, ‘தண்டிக்கும் அரசமைப்புச் சட்டவாதம்’ என்ற நிகழ்வு ஒன்று எழுச்சிபெற்று வருகிறது. இது தனிமனித உரிமைகளை விவரிக்கப்படாத தேசியத் திட்டமொன்றில் மூழ்கடிக்க முயல்கிறது. இந்தத் திட்டத்துக்குத் தனிமனிதர்கள் பங்களிக்கவில்லை என்றால் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்று வேறு சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அல்லது போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்களுக்குத் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் என்பது. இதன் மூலம் சுதந்திரமும் சமத்துவமும் ஒரு நல்ல குடிநபர் எப்படி இருக்க வேண்டும் என்ற அரசின் லட்சியத்துக்குக் கட்டுப்பட்டவையாகின்றன. அப்போது, உரிமைகள் என்பவை மனிதர்களாக இருப்பது தொடர்பானவையாக அல்லாமல், மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதற்கானவையாக ஆகிவிடும்.

பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டங்களும் ‘தண்டிக்கும் அரசமைப்புச் சட்டவாதம்’ என்ற வகைமையைச் சேர்ந்தவையே. ஆகவே, ஒரு சமூகப் பிரச்சினையைத் தனிநபரின் தவறுபோல் கருதிக் குற்றமாக்குவதை அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று தெளிவாகத் தீர்ப்பு வழங்கிய ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் பாராட்டுக்குரியது.

தமிழில்: ஆசை

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தண்டிக்கும் அரசமைப்புச் சட்டவாதம்பிச்சை எடுப்பதுசமூகப் பிரச்சினைதனிநபரின் தவறு அல்லபுதிய விடியல்காலனிய எச்சங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author