Published : 29 Nov 2019 08:07 AM
Last Updated : 29 Nov 2019 08:07 AM

யார் என்ன எப்படி? - மாற்றுப் பாலினத்தோர் மசோதா ஏன் எதிர்க்கப்படுகிறது? 

தம்பி

பின்னணி என்ன?

கடந்த செவ்வாய் அன்று மாநிலங்களவையில் மாற்றுப் பாலினத்தோர் மசோதா நிறைவேறியது. மாற்றுப் பாலினத்தோர் தங்கள் பாலின அடையாளத்தைத் தாங்களே உறுதிசெய்ய வேண்டும் என்று 2014-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலிருந்து இந்த மசோதாவின் பின்னணி தொடங்குகிறது. மாற்றுப் பாலினத்தோரைப் பாதுகாக்கும் வகையில் 2016-ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அந்த மசோதாவை மாற்றுப் பாலினத்தோர் கடுமையாக எதிர்க்கவே 2017-ல் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டது. தொடர்ந்து, நிலைக்குழு அளித்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதையடுத்து டிசம்பர் 2018-ல் 26 திருத்தங்களுடன் அந்த மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்காக அனுப்பப்பட்டது.

அதற்குள் 2019-ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த மசோதாவைக் கையில் எடுத்த பாஜக தலைமையிலான அரசு, ஆகஸ்ட் 5 அன்று மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் கடந்த செவ்வாய் அன்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

என்ன சொல்கிறது மசோதா?

மாற்றுப் பாலினத்தோரை ‘முழுவதும் ஆணாகவோ பெண்ணாகவோ இல்லாதவர்கள்’ என்று இந்த மசோதா வரையறுக்கிறது. மாற்றுப் பாலினத்தோர் பாலின மாற்று சிகிச்சை செய்துகொண்ட பின் மாவட்ட நடுவரிடமிருந்து (ஆட்சியர்) பாலினச் சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். மேலும், மாற்றுப் பாலினத்தோருக்குப் பாலியல்ரீதியாகத் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு ஆறு மாதங்களிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும்.

மாற்றுப் பாலினத்தோர் ஏன் எதிர்க்கிறார்கள்?

மாற்றுப் பாலினத்தோருக்கு இந்த மசோதா அளிக்கும் விவரணையையே அவர்கள் எதிர்க்கிறார்கள். மேலும், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, அவரிடமிருந்து மாற்றுப் பாலினத்தோர் என்ற சான்றிதழைப் பெற வேண்டும் என்பதையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். தங்களுடைய நிலைமையை மாவட்ட ஆட்சியரால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்று கேள்வி கேட்கிறார்கள்.

தங்கள் பாலினத்தை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கே வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. பாலியல்ரீதியான தொந்தரவுக்குத் தண்டனை என்று இந்த மசோதா கூறினாலும், பாலியல் வல்லுறவுக்கு என்ன தண்டனை என்பது போன்றவற்றுக்கு மசோதாவில் இடமில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த மசோதா தங்களின் கழுத்தை நெரிக்கிறது என்பது அவர்களின் எண்ணம்.

எதிர்க்கட்சிகள் என்ன சொல்கின்றன?

மாற்றுப் பாலினத்தோரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து மாநிலங்களவையில் குரல் கொடுத்துவரும் திமுகவின் திருச்சி சிவா, இந்த மசோதாவை எதிர்த்திருக்கிறார். இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற அவரது கோரிக்கையானது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.

“பெண்களை, குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குபவர்கள் மீது சட்டம் கடுமையாகப் பாயும் சூழலில், மாற்றுப் பாலினத்தோர் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் நிலை குறித்து இந்த மசோதா கண்டுகொள்ளவில்லை” என்கிறார் திரிணமூல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x