

பருவநிலை மாற்றம் எனும் அபாயம் நம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. எனினும், அதைப் பற்றிய உரிய கவனம் பொது மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் செலுத்தப்படுவதில்லை என்பதுதான் இந்தியாவில் உண்மை.
நம் அன்றாடப் பேசுபொருளாகப் பருவநிலை மாற்றமும் புவி வெப்பமாதலும் இன்னும் இடம்பெறவில்லை என்பது துரதிர்ஷ்டமான நிலை. இச்சூழலில் உலகுக்கு வழிகாட்டும் விதத்தில் இத்தாலி ஒரு முன்னெடுப்பைச் செய்யவிருக்கிறது.
அடுத்த கல்வியாண்டிலிருந்து பருவநிலை மாற்றமும் வளம்குன்றா நிலையும் இத்தாலியின் பாடத்திட்டத்தில் இடம்பெறவிருக்கின்றன. ஏற்கெனவே சூழலியல் ஒரு பாடமாக இந்தியா உட்படப் பல நாடுகளில் இருந்தாலும், ‘மரம் நட்டால் மழை பெறலாம்’ என்ற ரீதியில்தான் அது இருக்கிறது. இத்தாலி பாடத்திட்டத்திலோ பருவநிலை மாற்றமானது தனிப்பட்ட ஒரு பாடமாக மட்டும் அல்லாமல் எல்லாப் பாடங்களுடனும் இணைக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, கணக்குப் பாடத்திலும் பருவநிலை மாற்றம் இடம்பெறும். அப்போதுதான் எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்களின் பிரக்ஞையில் பருவநிலை மாற்றமும் ஊடுருவும். இத்தாலியை இந்தியக் கல்வித் துறையும் பின்பற்ற ஆர்வம்காட்டுமா?
உங்கள் கார் ஓட்டும் திறமையே காப்பீட்டுத் தொகையைத் தீர்மானிக்கும்
நீங்கள் அதிவிரைவாக கார் ஓட்டுபவரா? எனில், உங்கள் காருக்கான காப்பீட்டுத் தொகையை இனி அதிக அளவுக்குச் செலுத்த வேண்டி வரலாம். ஆம்! இதற்குப் பெயர் பயன்பாட்டு அடிப்படையிலான காப்பீடு. ‘அனைத்துப் பொருட்களுக்கு இடையிலான இணையம்’ (Internet of Things) என்ற தொழில்நுட்பம்தான் இதற்கு அடிப்படை.
காரின் பல பாகங்களில் உணர்சாதனங்கள் பொருத்தப்படும். காரின் வேகம் எந்த அளவுக்கு முடுக்கப்படுகிறது, பயணித்த தூரம் எவ்வளவு, பிரேக்கை எந்த அளவுக்குத் திடீர் திடீரென்று பிடிக்கிறீர்கள், திரும்பும் இடங்களில் எவ்வளவு வேகமாகத் திரும்புகிறீர்கள், காற்றுப் பை எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது என்பதையெல்லாம் இந்த சாதனங்கள் உணர்ந்து தரவுகளை உங்கள் கார் காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பிவிடும்.
அதன் அடிப்படையில், உங்களுக்கான காப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படும். எடுத்துக்காட்டாக, நீங்கள் அதிக தொலைவு பயணித்திருந்தால் உங்களுக்கு அதிக தொகை. மேலும், விபத்து ஏற்பட்டிருந்தால் காப்பீட்டுத் தொகை அதிகரிக்கும். ஆகவே, நீங்கள் நல்ல ஓட்டுநரா, மோசமான ஓட்டுநரா என்பதைப் பொறுத்து, உங்கள் காப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்படும். காருக்கு மட்டுமல்ல; இனி பல்வேறு விஷயங்களிலும் ‘அனைத்துப் பொருட்களுக்கு இடையிலான இணையம்’ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவிருக்கிறது.
காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறும் தலைநகரம்
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிக அளவில் இருப்பது சமீப காலமாகத் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவருகிறது. அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றுக்கு அவ்வப்போது விடுமுறை விடப்படுகிறது. இந்நிலையில், டெல்லியின் காற்று மாசு காரணமாக பொருளாதாரத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
1990-க்கும் 2013-க்கும் இடைப்பட்ட காலத்தில் காற்று மாசு காரணமாக சுமார் ரூ.4 கோடியே கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக உலக வங்கி ஒரு கணிப்பைச் சொல்கிறது. சமீபத்திய கால நிலவரத்தையும் கணக்கில் கொண்டால், இழப்பு இன்னும் அதிகம் இருக்கும். இந்நிலையில், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், ஏனைய பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் டெல்லியில் பணிபுரிவதற்கு அஞ்சுகிறார்கள்.
பலரும் டெல்லியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் தகுதியற்ற இடமாக டெல்லி மாறிக்கொண்டிருக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களும் டெல்லியைப் பின்தொடர்ந்துவிடுமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.