Published : 28 Nov 2019 08:25 AM
Last Updated : 28 Nov 2019 08:25 AM

பெண் பார்வை: ஆல்ஃபா ஆண்கள்

உம்பெர்த்தோ எக்கோ எழுதிய ‘பௌடலினோ’ நாவலில் சுமார் எழுபது வயதாகும் நாயகன் மீது, இருபது வயதுடைய வேற்றுக்கிரகப் பெண் காதல்வயப்பட்டு, பல தடைகளுக்குப் பின் காதலைச் சொல்லி, அவனை முதன்முதலாக முத்தமிடுவாள். வயது என்ற பதத்தின் அர்த்தம் தெரியாத அவள், நாயகனின் வயதைக் கேட்கும்போது, ‘நான் இப்போதுதான் பிறந்திருக்கிறேன்’ என்பான். நாவலின் இந்த வரிகளைக் கடந்துவரும்போது ஏற்படும் சிலிர்ப்பு, நாயகனின் வயதை மறக்கச்செய்துவிடுகிறது. ஆல்ஃபா ஆண் எனும் சொல்லாடல் முதலில் மிருகங்களின் வேட்டைக் குழுத் தலைவனுக்கு வழங்கப்பட்டு, பின் சமூகத்தில் தலைமைப் பண்பு மிக்க ஆணுக்கானதாய் மாறி, தற்காலத்தில் வயதில் மூத்த ஆளுமைத்திறன் கொண்டவர்களைக் குறிப்பதாகப் பொருள்கொண்டுவிட்டது. இன்று பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களில் ஆல்ஃபா ஆண்களைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதாலும், திரைப்படங்களிலும் அவர்களைக் கொண் டாடும் விதமாகக் காட்சிகள் அமைக்கப்படுவதாலும் வயது முதிர்ந்த எவரையும் ஆல்ஃபா ஆண்களாக இளம் பெண்கள் சித்தரித்துக்கொள்ளும்படியான நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்கின்றனர்.

இப்படிப்பட்ட உளவியல் சிக்கல் ஒன்றில் மாட்டிக்கொண்ட அஸ்வினி, தினந்தோறும் காலையிலும் மாலையிலும் கல்லூரி வாசலில் தான் எதிர்கொண்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் மீது காதலில் விழுவதற்கு, ஆங்கில இலக்கியத்தில் அவள் வாசித்த ஜேன் ஆஸ்டின் நாவல்களும் ஒருவகையில் காரணம். அந்த நாவல்களில் விரவிவந்த காதலும் திருமணமும் ஒரு மூத்த ஆணுக்கும் இளம்பெண்ணுக்கும் நிகழ்வதாய் அமைந்துவிட, அவள் தினமும் பார்த்த அந்த நபரைத் தான் தேடிக்கொண்டிருந்த ஆல்ஃபா ஆணாக உருவகப்படுத்திக்கொண்டாள். திரைப்படங்களில்கூட மூத்த நாயகர்களுக்கும் இளம்பெண்களுக்குமான காதலையே அவள் சிலாகித்துப் பேசிவந்தாள். இத்தனைக்கும் அவள் நல்ல திறமைசாலி. வகுப்பில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் முதலில் அவள்தான் பதில்கூற வேண்டுமென்று நினைப்பாள். வடிவான முகம், மெல்லிய தேகம், வகுப்பில் அமர்ந்திருக்கும்போது தரையில் படியவந்து விழும்படியான நீண்ட கூந்தல் எனப் பெண்களுக்கானதாய் ஊர் கூறும் லட்சணங்கள் அனைத்தும் நிறைந்தவள்.

பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே இருவரும் ரகசியமாகத் திருமணத்தைப் பதிவுசெய்துகொண்டது இருபது வயதான அஸ்வினிக்கு ஆரம்பத்தில் சாதனையாகத் தெரிந்தது. எவரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்துவிட்ட பெருமிதத்தோடு இருந்தவளுக்கு அந்த மகிழ்ச்சி சில நாட்கள்கூட நீடிக்கவில்லை. அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்த நிலையில், இரு பெண் குழந்தைகள் இருப்பது பின்னர் தெரியவந்தபோது அஸ்வினிக்கு இடியிறங்கியதுபோல் இருந்தது. திருமண விஷயத்தில் அவளுக்கிருந்த ஆர்வக்கோளாறு, அவள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது. மிகப் பெரிய தவறுசெய்துவிட்டதாய் உணர்ந்த அவள் முகத்தில் குற்றவுணர்வும் அப்பிக்கொண்டது. ‘வயசுல மூத்தவர் என்ன அப்பா மாதிரி பாத்துப்பார்னு நினச்சுதான் அவரக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா, அவரோட பொண்ணுங்கள இனிமே நாந்தா அம்மா மாதிரி பாத்துக்கணும்னு சொல்றாரு’ என்ற அஸ்வினிக்கு, இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. அவளது கணவனின் மூத்த மகள் அவள் பயிலும் அதே கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் என்பது அஸ்வினிக்குக் கூடுதல் மன அழுத்தம் தந்தது. ‘அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு. நா எப்பிடி அவள மகளா நினைக்க முடியும்?’ என்ற கேள்வி நியாயமானதுதான். அந்தக் கேள்வி எழுவதற்கான சாத்தியம் ஏன் முன்பே அவளுக்கு வாய்க்கவில்லை?

- நவீனா, ‘லிலித்தும் ஆதாமும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writernaveena@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x