வியப்புமிகு சென்னை: உபரி நூல்களால் உருவான வரலாறு

வியப்புமிகு சென்னை: உபரி நூல்களால் உருவான வரலாறு
Updated on
1 min read

இன்று பல லட்சம் புத்தகங்களுடன் தேசிய நூல் களஞ்சியமாகத் திகழும் கன்னிமாரா உதயமானதற்கு அதிகப்படியாக இருந்த சில நூல்கள்தான் காரணம்!

இங்கிலாந்தில் உள்ள ஹெய்ல்பரி கல்லூரியில் அவர்கள் தேவைக்கு மேல் நிறையப் புத்தகங்கள் இருந்தன. அப்புத்தகங் களை இந்தியாவுக்கு அனுப்பலாம் என அவர்கள் முடிவெடுத்தார்கள்.

1861-ல் அப்புத் தகங்கள் மெட்ராஸுக்கு வந்து சேர்ந்தன. அவை சென்னை மியூசியத்தில் ஒப்படைக்கப் பட்டன.

1890-ல் சென்னை ஆளுநராக கன்னிமாரா பிரபு இருந்தார். அவர் வாசிப்பில் நாட்டம் கொண்டவர். இங்கு தரமான பொது நூலகம் ஒன்று வேண்டுமென்ற எண்ணம் அவர் மனதில் நெடுநாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் மியூசியத்தில் அதிகமாகிவிட்ட புத்தகங்களை வைக்கத் தனிக் கட்டிடம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1890-ல் புதிய பொது நூலகத்துக்கான அடிக்கல் நாட்டினார் கன்னிமாரா. 1896 டிசம்பர் 5-ல் நூலகக் கட்டிடம் திறக்கப்பட்டது. அப்போது ஆர்தர் ஹாவ்லக் ஆளுநராக இருந்தார். எனினும், நூலகம் தோன்றக் காரணமாக இருந்த கன்னிமாராவின் பெயரையே நூலகத்துக்கு அவர் வைத்தார்.

சில ஆயிரக்கணக்கான புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகத்தில், இன்று 6 லட்சம் புத்தகங்களுக்கு மேல் இருக் கின்றன. மாணவர்களுக்கான பாடப்புத்தங்கள் தொடங்கி அறிவியல், மருத்துவம், சட்டம், பொறியியல், இலக்கியம், என எல்லாத் துறை நூல்களும் கிடைக்கின்றன.

1954-ல் கன்னிமாரா தேசிய நூலகமாக அறிவிக்கப்பட்டது. கல்கத்தா, பம்பாய், டெல்லி, சென்னை என இந்தியாவில் நான்கே நான்கு தேசிய நூலகங்கள்தான் உள்ளன. கன்னிமாரா தேசிய நூலகக் களஞ்சியமாக இருப்பதால், இந்தியாவில் வெளிப்படப்படும் அனைத்து நாளிதழ்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றின் ஒரு பிரதியைப் பெற்றுப் பாதுகாக்கிறது. ஒவ்வொரு பதிப்பாளரும் தான் வெளியிடும் புத்தகத்தின் ஒரு பிரதியை இங்கு அனுப்ப வேண்டும்.

113 வயதான கன்னிமாராவில் அரசாங்கக் கட்டிடங்களுக்கே உரிய வாசனையை உணர முடியாது. மரங்கள் அடர்ந்த சூழலில் வீற்றிருக்கும் கன்னிமாரா நூலகம் வாசிப்பனுபவத்தின் சுகத்தைக் கூட்டக் கூடியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in