Published : 27 Nov 2019 07:26 AM
Last Updated : 27 Nov 2019 07:26 AM

என்று தணியும் இந்த ஹாங்காங் கோபம்?

கடந்த வாரத்தில் ஹாங்காங்கின் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் ஒரு போர்க்களமானது. வளாகத்துக்குள்ளே மாணவர்கள். வெளியே காவலர்கள். வளாகத்தைச் சுற்றி அரண்களை உருவாக்கிக்கொண்டார்கள் மாணவர்கள். வேதியியல் சோதனைச் சாலைகளில் தயாரித்த பெட்ரோல் குண்டுகளைக் காவலரை நோக்கி வீசினார்கள். மூங்கில்களால் கவண்களை உருவாக்கி, அதில் எறிகணைகளை எய்தார்கள். பதிலுக்குக் காவலர்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள், ரப்பர் தோட்டாக்களால் சுட்டார்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தார்கள். பகலிரவாக யுத்தம் நடந்தது. முற்றுகையின் மூன்றாம் நாள் சுமார் ஆயிரம் மாணவர்கள் வெளியே வந்தார்கள், கைதானார்கள். ஒரு வாரத்துக்குப் பின்னும் சுமார் 100 மாணவர்கள் வளாகத்துக்குள் இருக்கிறார்கள்.

ஹாங்காங்கில் பிரதானமாக ஒன்பது பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை சர்வதேசக் கல்வி நிறுவனமான க்யூ.எஸ் வழங்கும் தரவரிசையில் முன்வரிசையில் நிற்பவை. எல்லா உயர் கல்வி நிலையங்களிலும் நெருப்பும் வெறுப்பும் கனன்று கொண்டிருக்கின்றன. மாணவர்களின் கரங்கள் வன்முறையைத் தூக்கிப் பிடித்திருக்கிறது.

போராட்டம் ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஹாங்காங் கைதிகளை விசாரணைக்காக சீனாவுக்குக் கைமாற்றலாம் என்ற மசோதாவை முன்மொழிந்தது அரசு. அதற்கெதிராக லட்சக்கணக்கானவர்கள் ஜூன் 9 அன்று அணிதிரண்டனர். மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது மட்டுமே அந்த அகிம்சைப் பேரணியின் கோரிக்கையாக இருந்தது. மசோதா திரும்பப் பெறப்பட்டது. ஆனால், அதற்கு மூன்று மாத காலம் எடுத்துக்கொண்டது அரசு. அதற்குள் காலம் கடந்திருந்தது. போராட்டம் பெரிதாகியிருந்தது. அது வன்முறை வயப்பட்டும் இருந்தது.

கோரிக்கைகளின் எண்ணிக்கை ஐந்தாகக் கூடியிருந்தது. அவை: நாடு கடத்தும் மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும், நடுநிலையான குழு ஒன்று போராட்டக்காரர்களுக்கும் காவலருக்கும் நடந்த கைகலப்புகளை விசாரிக்க வேண்டும், போராட்டத்தைக் கலவரம் என்று அழைக்கக் கூடாது, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், ஹாங்காங்கின் தலைவர், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ‘கோரிக்கைகள் ஐந்து; அதில் ஒன்றையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்பது ஊர்வலங்களில் பிரதான கோஷமாக இருந்துவருகிறது. ஆனால், அரசு முதல் கோரிக்கையைத் தவிர, மற்றவற்றை நிறைவேற்றுவதற்கில்லை என்று தீர்மானமாக மறுத்துவருகிறது.

ஜூன் மாதப் பேரணியைத் தொடர்ந்து, ஒவ்வொரு வார இறுதியிலும் பேரணிகள் நடந்தன. மெதுவாக வன்முறை புகுந்தது. மெட்ரோ ரயில் நிலையங்களும் அரசுக் கட்டிடங்களும் மைய அரசுக்கு அணுக்கமான நிறுவனங்களும் தாக்கப்பட்டன. போக்கும் வரவும் சிரமமாயின. நவம்பர் மாத மத்தியில் வார இறுதிப் போராட்டங்கள் பொது வேலை நிறுத்தமானது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பல மெட்ரோ ரயில் நிலையங்கள் அடைக்கப்பட்டன. சட்டத்தின் மாட்சிமை பேணப்படும் ஹாங்காங்கில், இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை.

இசையாத பெய்ஜிங்

150 ஆண்டு காலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங், 1997-ல் சீனாவின் மைய அரசின்கீழ் ஒரு மாநிலமாக மாறியது. ஒரு தனியான அரசியல் சட்டமும் உருவானது. அதன்படி அயலுறவு, பாதுகாப்பு நீங்கலாகப் பிற துறைகளில் சுயேச்சையோடு செயல்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடப்பில் இருந்த கட்டற்ற பொருளாதாரமும் தடையற்ற வர்த்தகமும் தொடர்கிறது. உலகத் தரமான உள்கட்டமைப்பு மேலும் வளர்ந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் நிலவுகிறது. ஹாங்காங்கின் அரசியல் சட்டம் ஜனநாயகத்தை அனுமதிக்கிறது. நகர்மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவர் 1,200 பேர் கொண்ட பெய்ஜிங்குக்கு அனுசரணையான ஒரு குழுவால்தான் தெரிவுசெய்யப்படுகிறார். தனது அமைச்சரவையை அவரே நியமித்துக்கொள்கிறார். செயலாட்சித் தலைவரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதுதான் ஐந்தாவது கோரிக்கை. இதற்கு பெய்ஜிங் இசையவில்லை.

சீனாவின் மீது ஹாங்காங் இளைஞர்களுக்கு அவநம்பிக்கையும் அச்சமும் இருக்கிறது. இதற்கு வரலாற்று-பண்பாட்டுக் காரணங்கள் உள்ளன. நாற்பதுகளில் மா சே துங் உள்நாட்டு யுத்தத்தை நிகழ்த்தி, சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை நிறுவியபோதோ, அறுபதுகளில் மக்கள் பெரும் அவதிக்குள்ளான கலாச்சாரப் புரட்சி நடந்தபோதோ, எண்பதுகளில் டெங் ஸியோ பிங்கின் தலைமையில் சீனா தொழில் மயமானபோதோ, ஹாங்காங் காலனி ஆட்சியின்கீழ் ஒரு தொலைதூரப் பார்வையாளனாகவே இருந்தது.

ஹாங்காங் மக்கள் சீனர்கள்தான். ஆனால், அவர்கள் பேசும் சீன மொழியில் வேறுபாடு இருக்கிறது. 70%-க்கும் மேற்பட்ட சீனத்தின் மக்கள் பேசும் மொழி மாண்டரின் எனப்படுகிறது. ஹாங்காங் மக்கள் பேசும் மொழி காண்டனீஸ் எனப்படுகிறது. இன்றைக்குப் போராடும் ஹாங்காங் இளைஞர்கள் 1997-ஐ ஒட்டிப் பிறந்தவர்கள். இவர்கள் ஹாங்காங்கைச் சீனாவின் பகுதியாகவே அறிந்தவர்கள். என்றாலும், காலனிய ஆட்சியில் வளர்ந்த இவர்களது பெற்றோர்களைப் போலவே இவர்களும் பெய்ஜிங்கை சந்தேகக் கண்ணுடனே பார்க்கிறார்கள். அந்த ஐயத்தை அகற்றும் கடமை பெய்ஜிங்குக்கு இருக்கிறது. ஹாங்காங் மக்களின் ஜனநாயக விருப்பையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விருப்பம், நவம்பர் 24 அன்று நடந்த நகர்மன்றத் தேர்தலில் தெரிந்தது. தேர்தல் நாளில் எந்தச் சலசலப்பும் இல்லை. ஹாங்காங் மக்கள்தொகை 74 லட்சம். வாக்காளர்கள் 41 லட்சம். நான்காண்டுகளுக்கு முன்பு நடந்த நகர்மன்றத் தேர்தலில் வாக்களித்தவர்கள் 47%. இப்போது 71%. 18 மாவட்டங்களில் உள்ள 452 இடங்களுக்கு 1,090 வேட்பாளர்கள் களமிறங்கினார்கள்.

வன்முறையும் பாராமுகமும்

ஹாங்காங் அரசியல் கட்சிகளை பெய்ஜிங் ஆதரவுக் கட்சிகள் என்றும், ஜனநாயக ஆதரவுக் கட்சிகள் என்றும் பிரிப்பார்கள். இளைஞர்களின் வன்முறையைப் பெரியவர்கள் பலரும் ஒப்புக்கொள்ள வில்லை. அதேவேளையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை மைய-மாநில அரசுகள் கரிசனத் தோடு எதிர்கொள்ளவில்லை என்றும் சொன்னார்கள். ஹாங்காங் பத்திரிகையாளர் மைக் ரவுஸ் எழுதினார்: ‘போராட்டக்காரர்களின் வன்முறை முற்றிலும் தவறானது. அரசின் பாராமுகம் மோசமானது.’ அரசின் மீதான அதிருப்தி தேர்தல் முடிவுகளில் தெரிந்தது. இரவோடு இரவாக வாக்குகள் எண்ணப்பட்டு, நவம்பர் 25 விடிவதற்கு முன்னர் முடிவுகள் வெளியாயின. கடந்த ஆறு மாதங்களின் போராட்ட அதிர்வுகள் சுனாமியைப் போல் வாக்குச்சாவடிகளுக்குள் புகுந்தன. 18 நகர்மன்றங்களில் 17-ஐ ஜனநாயக ஆதரவாளர்கள் கைப்பற்றினார்கள்.

பல கல்வி நிலையங்கள் தேர்தலுக்கு மறுதினம் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால், பல்கலைக்கழகங்களை அப்படித் திறந்துவிட முடியாது. பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் இன்னும் முற்றுகையில்தான் இருக்கிறது. அதை உள்ளும் புறமும் சீரமைக்கக் காலம் பிடிக்கும். பல்கலைக்கழகத்துக்கு அருகில்தான் உலகப் புகழ்பெற்ற துறைமுகச் சுரங்கம் இருக்கிறது. ஹாங்காங் தீவுப் பகுதியையும், கவ்லூன் தீபகற்பப் பகுதியையும் இணைக்கும் கடலுக்கு அடியிலான 2 கிமீ நீளமுள்ள சுரங்கம் அது. 1972 முதல் பயன்பாட்டில் இருந்துவரும் அந்தச் சுரங்கம் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருக்கிறது. போராட்டத்தில் சிதைக்கப்பட்டுவிட்டது. 400 தொழிலாளர்கள் அதைச் சீரமைத்துவருகிறார்கள். விரைவில் வாகனங்கள் தடையின்றிச் சீறிப் பறக்க வேண்டும். அதற்கு மக்களின் கோரிக்கைகளைக் கரிசனத்தோடு அரசுகள் அணுக வேண்டும். போராட்டக்காரர்களும் ஹாங்காங்கின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தித் தாங்கள் எதையும் அடைந்துவிட முடியாது என்பதையும் ஹாங்காங்கின் எதிர்காலம் சீனாவோடுதான் பிணைந்திருக்கிறது என்பதையும் உணர வேண்டும்.

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x