

ஆக்ஸ்ஃபோர்டு அகராதி இந்த ஆண்டுக்கான தனது நட்சத்திர சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளது. பருவநிலை நெருக்கடிதான் (climate emergency) அந்தச் சொல். சமீபத்தில் உலகெங்கும் உள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் சேர்ந்து பருவநிலை நெருக்கடியை அறிவித்திருந்தார்கள் அல்லவா! அதைத் தொடர்ந்து, ‘பருவநிலை நெருக்கடி’ என்ற சொல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டைவிடப் பத்தாயிரம் மடங்கு அதிகமாக இந்த ஆண்டு அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு முதல் பத்து சொற்களில் சுற்றுச்சூழல் தொடர்பான எந்தச் சொல்லுமே இடம்பெறாத சூழலில், இந்த ஆண்டு அதிக அளவில் சுற்றுச்சூழல் சொற்கள் இடம்பெற்றிருந்தன.
பருவநிலை நடவடிக்கை (climate action), பருவநிலை மறுப்பு (climate denial), சூழலியல் பதற்றம் (eco-anxiety) போன்றவை மற்ற சொற்களாகும். நமது உரையாடலில் பருவநிலை இடம்பெறத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறிதான்; அது அடுத்து வரும் ஆண்டுகளில் செயல்வடிவம் பெறவும் வேண்டும்.
அரிதினும் அரிதான நோய் வந்தால்...
நோய் வந்தாலே பெரும்பாடுதான்! அதிலும் அரிதினும் அரிதான நோய் வந்தால் சொல்லவே வேண்டாம்! இப்படிப்பட்ட நோய்கள் வந்தவர்களில் 190 நோயாளிகள் தங்கள் சிகிச்சைக்கான ஆதரவுக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கடைக்கண் பார்வைக்காகப் பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள்.
இவர்களில் பலரும் ‘லைஸோஸோமல் ஸ்டோரேஜ் டிஸார்டர்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள். செல்களின் மறுசுழற்சி மையம் என்று அழைக்கப்படும் லைஸோஸோமில் குறைபாடு ஏற்படும்போது இந்நோய் ஏற்படுகிறது.
இது போன்ற அரிதினும் அரிதான நோய்களுக்கான தேசியக் கொள்கை வெகு காலம் கிடப்பில் இருக்கிறது என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது. தேசியக் கொள்கை வகுக்கப்படும் வரை இடைக்காலத்தில் ஏதாவது ஆதரவு தாருங்கள் என்று அந்த நோயாளிகள் மன்றாடியும் மத்திய அரசிடமிருந்து பதில் வந்தபாடில்லை.
சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் கேட்டால் வல்லுநர் குழு ஒன்றை நியமித்து, தேசியக் கொள்கை வகுத்துக்கொண்டிருக்கிறோம்; கூடிய விரைவில் அந்தக் கொள்கை இறுதி செய்யப்படும் என்கிறார்கள். அதுவரை நோயாளிகளின் நிலைமை என்ன என்பதுதான் கேள்விக்குறி!