Published : 26 Nov 2019 07:39 AM
Last Updated : 26 Nov 2019 07:39 AM

மலர்களைக் கத்தரிப்பவர்கள்

ஷஹிதா

“பிறக்கும்போதே கத்தரிக்கோலும் கையுமாகப் பிறந்திருக்காடி. பேச்சிலும் கில்லாடி, சரியான எம்டன்” என்று அமுதாவிடமும் இந்துவிடமும் கிசுகிசுத்தபடிதான் இரண்டாம் தளத்தில் அமைந்திருந்த மலரின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தையல் பணிமனையிலிருந்து கீழே இறங்கினேன்.

பல வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில், பெண்களுக்கான தினசரி நிகழ்ச்சியொன்றில் தொடர்ந்து மலரைக் கவனித்துவந்திருந்தேன். பின்னிப்போட்ட நீளக் கூந்தலும் பருத்திச் சேலையுமாய் - எங்கள் தோழியர் குழுவின் பாஷையில் சொல்வதானால், அவள் பழமாய் இருந்தபோது பார்த்தது. நுங்கம்பாக்கத்தில் இருந்த அவளுடைய பணிமனையில் வைத்து நேரில் பார்த்தபோது, படு நவநாகரிகமாக மாறியிருந்தாள்.

குறுகத் தரித்த குதிரைக்கொண்டை, இடுப்பிலும் மார்பிலும் கச்சென்று ஒட்டி உடம்போடு சேர்த்துத் தைத்துப்போட்டிருப்பாளோ என்று மயங்கவைத்த சல்வார், உதட்டிலும் நகங்களிலும் ஒரே மாதிரி நிறத்திலான பூச்சு, அதிலும் முன்னோக்கி சிறிது குவிந்தாற்போன்றிருந்த அந்த உதடுகள்! தன்னை அடையாளம் கண்டுகொண்டேன் என்றதில் மகிழ்ந்து, “இப்போவெல்லாம் சேனல் புரோகிராமுக்குப் போறதில்ல மேம். மாமனார், மாமியாரென்று பெரிய ஃபேமிலி, நேரமில்லை” என்றாள்.

அளவுநாடா எடுக்காத டெய்லர்

ஒரு தையல் கலைஞரின் பணியகம், அத்தனை நவீனமாக இருந்ததிலும், அங்கேயே வைத்து மாணவர்களுக்கு அவள் தையல் பாடங்கள் நடத்திக்கொண்டிருந்ததிலும், அதீதத் தொழில்நெறியோடு வரவேற்று காபி கொடுத்து உபசரித்ததிலும் அசந்துபோனேன்.

பெருவியப்புக்கான விஷயங்களுக்குப் பஞ்சமேயில்லாமல் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தாள் மலர். மாணவிகள் எதிரில் என்னையே படிமியாக (model) நிற்க வைத்தாள். எனக்கும் அளவெடுத்தாற்போல ஆனது; அவர்களுக்கும் பாடம் நடந்தது.

அறையின் நடுவே நின்றிருந்த என்னை அப்படியே ஒரு சுற்று சுற்றியவள், “பிரேசியரின் அளவு சொல்லுங்கள் மேம்” என்றாள். நான் சொன்ன அளவு எனக்கானது அல்ல என்பதையும், எப்படியான ரவிக்கை, சல்வார்களுக்கு எந்த மாதிரியான உள்ளாடைகள் அணிய வேண்டும் என்றும், எனக்கான அளவை எப்படி நிறுப்பது என்பதிலுமாக எல்லோருக்குமான பாடம் நடந்தது. என் கைகளை ஒரு முறை தூக்கச் செய்தாள். ரவிக்கைக்கும் என் முதுகுக்கும் இடையில் ஒற்றை விரலை மட்டும் நுழைத்து சோதித்துக்கொண்டாள். அவ்வளவேதான். இறுதிவரையில் அளவுநாடாவை அவள் வெளியில் எடுக்கவேயில்லை.

திரைப்பட நடிகைகளுக்கான ரவிக்கைகளை வடிவமைத்துக்கொண்டிருப்பது பற்றியும், அந்தச் சமயம், எந்த நடிகையின் எந்தப் படத்துக்கான ஆடை வடிவமைப்பாளராக இருந்தாள் என்பதையெல்லாமும் பகிர்ந்துகொண்டாள். கூடவே, அத்தனை நடிகையரிலும் பார்க்க நாங்கள் மூவரும் எத்தனை இயற்கையாக வடிவாகயிருந்தோம் என்பதையும் சேர்த்துச்சொன்னதில் கூசிக்கொண்டு தான் நான் அவளை ‘எம்டன்’ என்று அழைத்தது.

முன்னெப்போதும் நான் கேட்டறிந்திராத ‘ப்ளவுஸ் ட்ரையல் செஷ’னுக்கு என்னை அழைத்து, சரியான அளவில் வாங்கி அணிந்திருந்த உள்ளாடையைச் சரிபார்த்த பிறகு, அவள் முன்னிலையிலேயே புதிதாய்த் தைத்திருந்த ரவிக்கையை அணியச் செய்தாள். பதினான்கு வயதிலிருந்து பாவாடை தாவணியில் தொடங்கி அந்த நாற்பதாவது வயது வரையில் நான் அணிந்துவந்த அத்தனை ரவிக்கைகளின்பேராலும் என்னைக் கடுமையாக வெட்கம்கொள்ளச் செய்த ஒரு ரவிக்கை அது. “ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவ ஷஹிதா மேம். ஒருத்திக்கானது இன்னொருத்திக்கு ஒருபோதும் பொருந்தாது” என்றாள்.

பொத்தான்களை அவ்விதமாக ஏன் அமைத்திருந்தாள் என்பதையெல்லாம் விளக்கிவிட்டு, மறுபடி முதுகில் ரவிக்கைக்கு இடையில் ஒரு விரல் நுழைத்துச் சோதித்தாள். ரவிக்கையை அணியும்போது எப்போது மூச்சை இறுக்கி, எப்போது இலகுவாக்க வேண்டும் என்றெல்லாம் ஒருத்தி சொல்லித்தருவாளென்று நான் கனவிலும்கூட நினைத்ததில்லை. “இனி நீங்க ஊர்லருந்துட்டே ரவிக்கைத் துண்டை அனுப்புங்க. மாதிரி, அளவு பத்தி போன்ல சொல்லுங்க போதும். மாடல் போட்டோ அனுப்பினா அதேபோல தச்சுத் தந்துடுவேன்” என்றாள்.

பெண்கள் மீது கவிழ்க்கப்படும் கூடை

சும்மா அப்படியே திரும்பித் திரும்பி அறையின் நாற்புறமும் இருந்த கண்ணாடிகளில் ரசித்துக்கொண்டிருந்த என்னைக் கலாய்த்துக்கொண்டிருந்தார்கள் தோழியர் இருவரும். “இதெல்லாம் இங்கதான் முடியும் மலர். ஊர்ல நான் பர்தாவோட திரியுறவ” என்றேன். “இப்படி அழகான ட்ரெஸ் உடுத்திட்டு பர்தா வேணுமா என்ன?” என்றாள்.
நானறிந்து என் அக்கா, தங்கைகள் நல்லவிதமாக உடுத்திக்கொள்வதை விட்டுப் பலகாலமாகிவிட்டது.

பர்தாவுக்குள் எதை அணிந்தால்தான் என்ன? உடற்கட்டும்தான் எக்கேடும் கெட்டால் என்ன? ஆடை அணிகள், ஒப்பனை மீதான நாட்டமெல்லாம் மற்றவர்களுக்காக நாம் செய்துகொள்வதா என்ன? பெண்களின் ஒட்டுமொத்தப் படைப்பாக்கத் திறன் மீதும், ரசனை விருப்பங்களின் மீதும் கூடையைக் கவிழ்த்தாற்போல ஒரு மூடியைப் போட்டுக் கவிழ்த்துவிட்டு, ஆண்கள் எங்களிடம் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?

“எம்டனா? அப்ப ஒனக்கு அவளைப் பிடிக்கலயா?” காரில் பயணப்பட்டுக்கொண்டிருந்தபோது கேட்ட இந்துவுக்கு அவசரமாகப் பதில் சொன்னேன். “ஐயோ, அவளை ஏன் பிடிக்காமல் போகும்? அத்தனை பெண்களுக்கு மத்தியில் வைத்து நம் உடல்கட்டை எப்படிப் புகழ்ந்தாள். செக்ஸியான பெண்கள் என்றாளே? இப்படிப் பேசும் பெண்ணை, அழகியை, திறமைசாலியை யாருக்குத்தான் பிடிக்காமல்போகும்? என் வாழ்நாளில் இப்படிப் பொருந்தும் ஒரு ப்ளவுஸை நான் அணிந்ததே இல்லை.

எங்கள் ஊரில் என்றால், தனியாளாகக் கடைக்குப் போய் சானிடரி நாப்கின் பொட்டலங்களை வாங்கினாலும் வாங்கிவிடலாம், தையல்காரரிடம் சென்று அளவு, மாதிரி சொல்லி விளக்கி, உருப்படியாய் ஒரு சட்டை தைத்துக்கொள்வதற்கு பிரம்மப்பிரயத்தனமல்லவா செய்ய வேண்டும்?” என்றேன்.

அவள் தைத்துத்தந்திருந்த பிரின்ஸஸ் கட் ரவிக்கையை (வழக்கமான வெட்டுக்களும் கப்பும் இல்லாத, சிறுமிகள் அணியும் மேற்சட்டை போன்றது) அணிந்திருந்த துணிச்சலில், சீராக நீவின ஐந்து பட்டைகளாக முந்தானையைப் பின் குத்திக்கொண்டு, தலையில் முந்திச்சேலையால் முக்காடிட்டு, பர்தா அணியாமல் நெருங்கின உறவினர்களின் விசேஷங்களுக்குச் செல்லப் பழகிவிட்டேன்.

ஊசி நூலோடு பிறந்தவள்

இந்த ஆண்டு பண்டிகைகளுக்கான சேலைகளை வாங்கிய பின் மலரை அழைத்தேன். அழைப்பு நிராகரிக்கப்பட்டது. அமுதாவை அழைத்துக் கேட்டபோது, “மலர் பணிமனையை மூடிவிட்டாள் ஷஹி” என்றாள். அவள் திறமைசாலியாய் இருந்ததில், அவள் சரசரவென்று வெளிச்சத்துக்கு வந்ததில் அவள் கணவனின் கண்களுக்குக் கூச்சமெடுத்துவிட்டது. சேர்ந்து வாழ வேண்டும் என்றால் கடையை மூடியாக வேண்டும் என்று சொல்லிவிட்டானாம்.

இப்போது அவள் எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. அடையாளமே இல்லை. பெரிய உயரத்துக்குச் சென்றவளை, இன்னும் மிகப் பெரிய உயரத்துக்குச் செல்லும் திறமை கொண்டிருந்தவளைக் கணவனின் ஒரே கேள்வியால் கீழே இறக்கிவிட முடிகிறது.

நீ சொல்லிக்கொண்டே இருந்தாயே ஷஹி. கத்தரிக்கோலோடு பிறந்தவள் என்று. பிழையாய் சொல்லிவிட்டாய். அவள் ஊசி நூலோடு பிறந்தவள். தான் தைக்கும் எதையும் நறுக்கிப்போடும் கத்தரியோடு பிறந்தவனிடம் சிக்கிக்கொண்டுவிட்டவள்.

- ஷஹிதா, ‘அன்புள்ள ஏவாளுக்கு’ நாவலின் மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: shahikavi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x