Published : 26 Nov 2019 07:10 AM
Last Updated : 26 Nov 2019 07:10 AM

360: அகிம்சையின் இசை

புகழ்பெற்ற ஐரிஷ் ராக் இசைக் குழுவான ‘யூ2’ இந்தியாவுக்கு வரவிருக்கிறது. இவர்களின் முதல் நிகழ்ச்சியானது வரும் டிசம்பர் 15 மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதையொட்டி இவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து ‘அகிம்சை’ என்ற தலைப்பிலான ஒற்றைப் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

“அகிம்சைக்குத்தான் பெரும் துணிவும் வலிமையும் தேவைப்படுகிறது. ஆயுதங்களாலோ அதிகாரத்தாலோ அசைக்க முடியாத சக்திதான் அகிம்சை. நவீன உலகின் புண்களை ஆற்றுவதற்குத் தேவைப்படும் அரும்காரியம் அது.

அகிம்சை எனும் இயக்கத்தைப் பெருமைக்குரிய யூ2 குழுவினருடன் சேர்ந்து கொண்டாடுவதென்பது மிகவும் பொருத்தமானது” என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். “எங்கள் குழுவானது மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் கொள்கைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டது.

அவரின் குரு மகாத்மா காந்தி. அகிம்சையை இந்தியா எங்களுக்கு அளித்தது. உலகுக்கு அது அளித்த மிகச் சிறந்த பரிசு அது. அணு சக்தி, ராணுவங்கள், கப்பற்படைகள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் போன்றவற்றைவிட அது சக்திவாய்ந்தது” என்கிறார் யூ2 குழுவின் நாயகர் போனோ. ‘அகிம்சை’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களும், யூ2 குழுவின் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

தண்ணீர்ப் பயன்பாட்டுக்கு ஒரு செயலி

புதுப் புதுப் பிரச்சினைகள் புதுப் புதுத் தீர்வுகளைக் கொண்டுவருகின்றன. இந்த ஆண்டு கோடையின்போது தண்ணீர்ப் பிரச்சினையால் சென்னை தத்தளித்தது அல்லவா? அதைத் தொடர்ந்து தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

இதன் அடையாளம்தான் தண்ணீர் சிக்கனத்துக்கான செயலி ஒன்று சென்னையில் பிரபலமாக ஆரம்பித்திருப்பது. இந்தச் செயலிக்கு அடிப்படையாகத் தண்ணீர் மீட்டரைக் குழாய் அமைப்பில் நிறுவ வேண்டும். அதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்தச் செயலி சொல்லிவிடும்.

சென்னையைச் சேர்ந்த வீகாட் யுட்டிலிட்டி சொல்யூஷன்ஸ் என்ற புதிய நிறுவனம்தான் இந்தச் செயலியை வடிவமைத்திருக்கிறது. பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை போன்ற தண்ணீர்ப் பிரச்சினையில் சிக்கியுள்ள இடங்களில் உள்ள அடுக்ககங்களில் இந்தச் செயலியைப் பயன்படுத்தித் தண்ணீரை எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதை மக்கள் அறிய ஆரம்பித்ததோடு அல்லாமல், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

கன்னிமராவுக்குப் புத்துயிர்

சென்னையின் பாரம்பரிய முகங்களுள் ஒன்று கன்னிமரா நூலகம். 1896-ல் இந்தோ-சார்சனிக் கட்டிடக் கலை முறையில் கட்டப்பட்ட இந்த நூலகத்துக்கு வயது தற்போது 123. புதிய புத்தகங்கள் மட்டுமல்லாமல் பல நூற்றாண்டுகள் பழமையான புத்தகங்களும் இந்த நூலகத்தில் உண்டு.

இந்த நூலகம் இந்தியாவின் நான்கு களஞ்சிய நூலகங்களுள் ஒன்றாகும். இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றின் தலா ஒரு பிரதி இந்த நூலகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த நூலகத்தில் தற்போது ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.

இந்த நூலகத்தின் மேற்கூரையும் குவிமாடங்களும் சில மாதங்களுக்கு முன்பாக சரிந்துபோனதால், அவற்றைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. நூலகக் கட்டிடத்தின் மறுசீரமைப்புப் பணிகளைப் பொதுப்பணித் துறை மேற்கொண்டுவருகிறது.

இந்தக் கட்டிடத்தின் பழமையான தோற்றத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் புதுப்பிக்கப்படும் என்கிறார்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகள். கன்னிமரா புத்துயிர் பெற்று அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x