

வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சி இடத்தை நோக்கி பாஜக மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து வெற்றிபெறும் செல்வாக்கோ தெம்போ இல்லாமல் இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸும் வலுவிழந்துள்ளன. 2021 வங்க சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிவிட பாஜக தீவிரமாக முயல்கிறது.
வங்கத்தில் முதலமைச்சர் பதவிக்கான கவர்ச்சியான தலைவர் எவரும் இப்போதைக்கு பாஜகவிடம் இல்லை. இப்போது மாநிலத் தலைவராக இருக்கும் திலீப் கோஷ், மக்களிடம் அந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றவர் இல்லை. திரைப்படத் துறையிலிருந்து சில பிரபலங்களைக் களத்தில் இறக்கி பாஜக செய்துபார்த்த பரிசோதனை முயற்சிகளும் பெரிய அளவில் எடுபடவில்லை.
அவர்களால் சில மக்களவை, சட்டமன்ற இடங்களைப் பிடிக்க முடிந்ததே தவிர, திரிணமூல் கட்சியை அடியோடு சாய்த்துவிட முடியவில்லை. இனி சினிமாக்காரர்களை நம்பியும் பயனில்லை என்ற நிலையில், பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் சவுரங் கங்குலியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளில் பாஜக இறங்கியிருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.
கங்குலி அனைவருக்கும் அறிமுகமானவர். மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக வெற்றிகளைக் குவித்தவர். தோல்வியே வழக்கமாகிவிட்ட இந்திய அணியைத் தன்னம்பிக்கையுடன் வெற்றிபெற வைத்தவர் அவர். அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வெற்றிபெற வைத்த கேப்டனாக இன்றும் மதிக்கப்படுகிறார். அணியில் சேர்ப்பது பிறகு நீக்குவது என்று கிரிக்கெட் வாரியம் தன்னைச் சிறுமைப்படுத்துவதாகக் கருதிய அவர், ஒருகட்டத்தில் ஓய்வுபெறுவதாக அறிவித்து விடைபெற்றுக்கொண்டார்.
கங்குலிதான் வேட்பாளரா?
‘சவுரவ் கங்குலிதான் எங்களுடைய முதல்வர் பதவிக்கான வேட்பாளர்’ என்று பாஜக அறிவித்துவிடவில்லை; ‘பாஜகவின் கொள்கைகள் பிடித்துள்ளன, எனவே சேர்ந்துவிட்டேன்’ என்று அவரும் கூறவில்லை. பிறகு, அவரை பாஜக வளைக்கிறது என்றரீதியில் பத்திரிகைகள் எழுதுவதன் காரணம் என்ன? 47 வயதே நிரம்பிய சவுரவ் கங்குலியை இந்திய கிரிக்கெட் ஆணையத் தலைவர் ஆக்கியிருப்பது அவரை அரசியல்ரீதியாகப் பயன்படுத்திக்கொள்ளத்தானா என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் சலசலப்பு. அதற்கு வாய்ப்பில்லை என்று உறுதியாக மறுத்துவிடவும் முடியாது. இடதுசாரிகள் மற்றும் மம்தா பானர்ஜியின் ஆட்சிக் காலங்களிலும் விருதுகள் வழங்கி சவுரவ் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கக்கூட இடதுசாரி முன்னணியும் திரிணமூல் காங்கிரஸும் தயாராக இருந்தன. அப்படியிருக்கையில், கங்குலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையத் தலைவர் ஆக்கியிருப்பதை மட்டும் ஏன் உள்நோக்கத்துடன் பார்க்க வேண்டும் என்ற கேள்வியும் எழக்கூடும்.
சவுரவ் கங்குலியை கிரிக்கெட் ஆணையத் தலைவர் ஆக்கக் கடைசி நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர நடவடிக்கையில் இறங்கினார். ஆதாயம் இல்லாமல் இதை அமித் ஷா செய்திருக்க மாட்டார், அந்த ஆதாயம் கங்குலிக்குப் பதவி தருவதன் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்துவது அல்லது கட்சிக்குள்ளேயே அவரைக் கொண்டுவர முயல்வது.
இது, வங்க பாஜகவின் தலைவராக அல்லது முதல்வர் பதவிக்கான வேட்பாளராக கங்குலியைக் களம் இறக்குவதுதான் என்றெல்லாம் பேச்சு அடிபடுகிறது. கங்குலி இதை மறுக்கிறார். ‘அப்படியொரு உள்நோக்கம் பாஜகவுக்கும் இல்லை, முதல்வர் பதவிக்காக அரசியலில் இறங்கும் ஆர்வம் எனக்கும் இல்லை’ என்று மறுத்துவிட்டார் கங்குலி. தனக்கு அரசியல் ஆசைகள் கிடையாது என்றும், தன்னால் ஒருசமயத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கூட்டணிக் கணக்குகள்
வங்கத்தில் இடதுசாரி முன்னணியை ஆட்சியிலிருந்து அகற்றியது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. இப்போது திரிணமூல் காங்கிரஸை அகற்றும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியிருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்தவர் திரிணமூலை வலுவாக ஆதரிக்கின்றனர். இதனால், இந்துக்களைத் தங்களுக்கு ஆதரவாகத் திருப்பப் பல்வேறு முயற்சிகளை பாஜக எடுக்கிறது.
அசாமில் உள்ளதைப் போல வெளிநாட்டவர்களை அடையாளம் கண்டு வெளியேற்ற வங்கத்திலும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறையைக் கொண்டுவருவோம் என்று கூறுகிறது. இதற்கு வங்கத்தில் உள்ள இந்துக்களிடமும் வரவேற்பு இல்லை. இது பிற மாநிலங்களில் வங்காளிகளுக்கு எதிரான உணர்வைத்தான் வளர்க்கும் என்று நியாயமாகவே அஞ்சுகின்றனர்.
பாஜகவுக்காக திரிணமூலுடன் சமரசமாகப் போக இடதுசாரி முன்னணி தயங்குகிறது. ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளுடன் போரிடுவது அரசியல்ரீதியாகவும் எளிதல்ல. ஆனால், மம்தாவைத் தவிர தற்போது மக்களை ஈர்க்கக்கூடிய தலைவர்கள் வேறு யாரும் வங்கத்தில் இல்லை. ஜோதிபாசுவுக்குப் பிறகு மார்க்சிஸ்ட்டுகளிடம் அப்படி ஒரு ஆளுமை உருவாகவில்லை. காங்கிரஸ் நிலைமை இன்னமும் மோசம். காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததால் இடதுசாரிகளுக்கு அதிக இழப்பும், காங்கிரஸுக்கு அதிக லாபமும் கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கிடைத்தது.
2016-ல் நடந்த வங்க சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 211 தொகுதிகளில் வென்று ஆட்சிசெய்கிறது. 148 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி 26 இடங்களில் மட்டுமே வென்றது. 92 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 44 தொகுதிகளில் வென்றது. 291 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.
ஆனால், பிறகு 2019-ல் நடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் திரிணமூல் 22 தொகுதிகளிலும் பாஜக 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றன. இடதுசாரிகளுக்கு ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை. 211 சட்டமன்றத் தொகுதிகளில் வென்ற திரிணமூல் காங்கிரஸால், மக்களவைத் தேர்தலின்போது 164 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும்தான் முன்னிலை பெற முடிந்தது. பாஜக 121 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. எனவே, இந்த ஆதரவை மேலும் பெருக்கி திரிணமூலை வீழ்த்தப் பார்க்கிறது பாஜக.
அறிமுகமான ஒரு முகம்
மக்களவைத் தேர்தலில் ஆதரிக்கும் கட்சியை சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரிப்பதில்லை என்பது ஹரியாணா, மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம். எனவே, வங்காளிகள் நம்பும் ஒரு முகம், அவர்களுக்கு அறிமுகமான ஒரு முகமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பாஜக சிந்திக்கிறது. அதனாலேயே சவுரவ் கங்குலியை பாஜகவில் சேர்க்கத் துடிக்கிறது. ‘தீதி’ மம்தா பானர்ஜியின் ஆளுகைக்கு ஈடான ஆளுமை சவுரவ் கங்குலி. அவரை தாதா, பிரின்ஸ், மகாராஜா என்றும் வங்கத்தில் செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
கிரிக்கெட் அணியில் அவருக்கு உரிய இடம் தராமல் வெளியேறச் செய்துவிட்டனர் என்ற ஆதங்கமும் மக்களுக்கு இருக்கிறது. எனவே, மாநிலத்தின் உயர் பதவியை வகிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை மக்கள் ஆதரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அப்படி கங்குலி செய்தால் அவருக்கு வங்காளிகளிடையே மதிப்பு குறைந்துவிடும் என்றும் சில அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், கங்குலி இந்தப் பதவிக்காக அரசியலில் இறங்கும் முடிவை - அதிலும், பாஜகவில் சேரும் முடிவை எடுப்பாரா என்பது இந்த நிமிடம் வரை சந்தேகம்தான்.