Published : 25 Nov 2019 08:31 AM
Last Updated : 25 Nov 2019 08:31 AM

சென்னைக்கு வெறும் ‘853’ போதுமா? 

சாலைகளைக் கடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சென்னையின் சுரங்கப்பாதைகள் பெரும்பாலும் அவசரத்துக்கு ஒதுங்கும் இடமாக மாறியிருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் புழங்கும் ரயில் தடங்களிலுள்ள கழிப்பறைகளில் துருவேறிய பூட்டுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

பேருந்து நிலையங்களிலோ நிலைமை இன்னும் மோசம். அங்குள்ள கழிப்பறைக்குச் செல்ல அஞ்சி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்துக்குப் பின்னால் ஒதுங்கும் கூட்டத்தை அனுதினமும் காண நேர்கிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் சென்னை மாநகரம், இந்த நூற்றாண்டில் எவ்வளவோ வளர்ச்சிகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், பொதுக் கழிப்பிட வசதியில் மட்டும் ஏன் இந்த அவலம் இன்னமும் தொடர்கிறது?

2019-ல் கிட்டத்தட்ட ஒரு கோடியே ஆறு லட்சத்துக்கும் மேல் சென்றுவிட்ட சென்னை மாநகர மக்கள்தொகைக்கு, மாநகராட்சி கட்டி வைத்திருக்கும் பொதுக் கழிப்பறைகள் 853 அமைவிடங்களில்தான். இதில் 6,701 இருக்கைகள் உள்ளன.

இந்த 853-லும் பெரும்பாலானவை குடிசைப் பகுதிகளில் வாழ்வோருக்காகக் கட்டப்பட்டு, முறையாகப் ‘பயன்படுத்த முடியாத நிலையில்’ பராமரிக்கப்படுபவை. பொதுக் கழிப்பறைகளுக்கு முக்கியத் தேவை இடையறாத தண்ணீர். குடிநீருக்கே ‘ஜோலார்பேட்டை தண்ணீர் ஸ்பெஷல்’ வரும் சூழலில், இவற்றுக்கு மட்டும் தண்ணீர் எப்படிக் கிடைக்கும்?

தலைநகருக்கே இந்த நிலையா?

ஒரு நல்ல நாகரிகமுள்ள சமூகம், பிறர் பார்க்கும்போது அருவருப்பான செயலைச் செய்யக் கூடாது. சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல, உலகிலேயே மிக மூத்த குடி என்று மார்தட்டும் தமிழ் இனத்தின் மாநகரம் இல்லையா? நகரப் பேருந்து நிலையத்தில் முறையான நிழற்குடைகள் இல்லை, தடுமாறாமல் நடக்க சாலை இல்லை, இரவில் தெளிவாகப் பார்க்க விளக்கு வெளிச்சம் இல்லை, குப்பைகளைப் பாதுகாப்பாகவும் சேதாரமின்றியும் கொட்ட போதிய குப்பைத்தொட்டிகள் இல்லை, தவித்த வாய்க்குத் தண்ணீர் தர தெருக்குழாய்கள் இல்லை. இத்தனை இல்லைகளைக்கூடச் சமாளித்துவிடலாம். அவசரமாகச் சிறுநீர் கழிக்கவோ, இயற்கையின் உந்துதலுக்குப் பதிலளிக்கவோ போதிய கழிப்பறைகள் இல்லை என்பதுதான் பெருந்துயரம்.

சென்னை கடற்கரையோர நகரமாக இருப்பதால் காற்றில் ஈரப்பதம் அதிகம். அதனால், வியர்வையும் அதிகம். இதனால், நா வறட்சி ஏற்பட்டு தண்ணீர் குடிப்பதும் அதிகம். குடிப்பதில் (அதாவது, வெறும் தண்ணீரில்) 20% மட்டுமே வியர்வையாகவும் எஞ்சியவை சிறுநீராகவும் பிரியும். மாநில அரசின் வருவாயைப் பெருக்க ஏராளமான டாஸ்மாக் வேறு திறக்கப்பட்டிருப்பதால் லோக்கல் குடிமகர்களுக்கும் கழிப்பறைகளின் தேவை அவசியமாகிவிட்டது.

ஆனால், அவர்கள் பாவம் அரசுக்கு வருவாயைத் தரும் காமதேனுக்களாக இருக்கிறார்களே தவிர, தங்களுக்கென்று நாகரிகமான மதுவிடுதி, நாகரிகமான கழிப்பறை என்றெல்லாம் கேட்டு, அரசை ஒருபோதும் தொல்லை செய்வதில்லை. சில சமயம் புறநகர் ரயில் நிலைய நடைமேடைகள், லோக்கல் ரயில் பெட்டிகளில்கூடக் கழித்துவிட்டு, யாருக்கும் தொல்லையில்லாமல் படுத்துவிடுகிறார்கள்!

தொற்று பரிவர்த்தனை மையம்

சென்னையில் இப்போதெல்லாம் அண்ணா நகரிலிருந்து பிராட்வே பஸ் நிலையம் வருவதற்குக்கூடக் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. வழியிலேயே காபி - டீக்கு எங்காவது நிறுத்தினால் தேவலை என்று நினைக்கும் அளவுக்கு ஏராளமான சர்க்கரை நோயாளிகள் பயணிக்கிறார்கள். எல்லோருக்கும் சொந்த அல்லது வாடகை வாகனப் பிராப்தி இல்லை.

விளைவு, கடைசியாக பிராட்வேயில் பேருந்து நின்றதும் வேகமாக ஓடி, அதற்கும் காம்பவுண்டு சுவருக்கும் இடையில் உள்ள ‘எல்ஓசி’யில் (எல்ஐசி அல்ல) வேகமாகச் சிறுநீரைக் கழித்துவிடுகிறார்கள். அங்குள்ள கட்டணக் கழிப்பிடம் என்பது ரூ.2 அல்லது ரூ.5 கொடுத்து அவஸ்தையைக் குறைத்துக்கொண்டு, சிறுநீரகத் தொற்றைப் பதிலுக்கு வாங்கும் பரிவர்த்தனை மையமாகவே இருக்கிறது.

எப்படி ஒரு நவநாகரிக யுகத்தில், இத்தனை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், அறிவார்ந்த மக்கள், ஒரே உதையில் ஒன்பது முறை வில்லன்களை அந்தரத்திலேயே பல்டியடிக்க வைக்கும் சூப்பர் ஸ்டார்கள், சுப்ரீம் ஸ்டார்கள், தல-தளபதிகள் உள்ள நகரத்தில் இது பெருங்குறையாக யார் கண்ணிலும் படவில்லை, யாருக்கும் இதை சரிசெய்யவே தோன்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

சென்னையில் குறைந்தது 10 பல்கலைக்கழகங்கள், 10 பெரிய மருத்துவமனைகள், ஏராளமான துணைத் தூதரகங்கள், வணிக நிறுவனங்கள், துறைமுகம், விமான நிலையம், பெரிய ரயில் நிலையங்கள் உள்ளன. தென்னிந்திய மாநிலங்களிலிருந்தும் வட இந்தியாவிலிருந்தும் கல்வி, வியாபாரம், மருத்துவம் போன்றவற்றுக்காக அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர்.

பாண்டி பஜாரில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்திந்திய அளவில் வியப்புடன் பேசப்படுகின்றன. மெகா ஸ்டோர், மெகா மால் என்றால் சென்னைதான் என்று புகழ்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சென்னையைச் சுற்றிப்பார்க்க அல்லது தங்களுடைய தேவைகளுக்காக நகருக்குள் செல்லும்போது வழியில் எங்கும் கழிப்பறைகள் இல்லாததைப் பார்த்து அவதியுறுவது அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எங்கே தெரியப்போகிறது. அவர்கள் எங்கு போவதாக இருந்தாலும் கார்களிலேயே போய்விடுவார்கள். வழியில் கழிப்பறைகளைத் தேடும் சாமானியர்கள் வாழ்க்கை அவர்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை.

ஒரேயொரு இடத்தையாவது காட்டுங்கள்

சென்னை அண்ணா சாலையிலாகட்டும், பெரியார் ஈவெரா சாலையிலாகட்டும் (காமராஜர், ராஜீவ் காந்தி சாலைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம்) சில பல கிமீக்கள் நடந்தால்கூட சிறுநீர் கழிக்க மாநகராட்சி சார்பில் ஓரிடம் இருக்காது. வழியில் உள்ள வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டிடங்களில் சிறுநீர் கழிப்பதற்காக நுழையக் கூச்சப்பட்டு, வீதியோரத்திலேயே தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறவர்களே அதிகம்.

இது ஆண்களுக்கு சரி, பெண்களின் நிலை பற்றி யாராவது சிந்திக்கிறார்களா? இரவிலும்கூட அவர்களால் இப்படி ஒதுங்கிக்கொள்ள முடியாதே? சென்னையில் எங்கெல்லாம் இதைக் கட்டுவது என்று மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்புகூட நடத்த வேண்டாம், ஒவ்வொரு வார்டிலும் எங்கெல்லாம் குப்பென்று யூரியா வாடை மூக்கைத் துளைக்கிறதோ அந்த இடத்தை அடையாளமிட்டு அங்கே கட்டிவிடலாம்.

இங்கே சிறுநீர் கழிக்காதே

பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட காலத்தில் தெருவில் சிறுநீர் கழித்தால் அபராதம் போடுவார்களாம். அந்த வழக்கம் இப்போது நீடித்தால், தமிழ்நாடு அரசு பற்றாக்குறை பட்ஜெட்டே போடத் தேவையில்லை. தேவைப்படும் இடங்களில் கழிப்பறைகளே கட்டாத மாநகராட்சிக்கு யார் அபராதம் விதிப்பது?
இதை நிர்வகிக்க போதிய துப்புரவு ஊழியர்கள் இல்லை, நிர்வகிக்க முடியவில்லை என்பது சென்னை மாநகராட்சியின் வாதமாக இருந்தால், ‘சுலப் சவுச்சாலாயா’ போன்ற தன்னார்வ நிறுவனங்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம்.

இப்போதைக்கு சென்னை மாநகர மக்கள், தமிழ்நாடு மின்வாரியம் ஆங்காங்கே மண் தரையில் அமைத்துள்ள மின்மாற்றிகளுக்குக் கீழேயும், குப்பைமேடுகளிலிருந்து வீசும் மணத்தை மேலும் கூட்டும் வகையில் அவற்றுக்கு அருகிலும், ‘இங்கே சிறுநீர் கழிக்காதே’ என்று எச்சரிக்கும் இடங்களிலும் தங்களுடைய தவிப்பைத் தீர்த்துக்கொள்கிறார்கள். மாநகராட்சியின் துப்புரவுத் துறை மேற்பார்வையாளர்கள் நகர்வலம் வந்தால், இதுபோல மேலும் பல ‘டிஸ்சார்ஜ் பாயின்ட்டுகள்’ அவர்கள் கண்களுக்குத் தெரியலாம்.

மிகப் பெரிய மாநகரில் பொது இடத்தில் கழிப்பறைகள் இல்லை என்பது மிகப் பெரிய அவமானம். தமிழ்நாடு கல்வி, சுகாதாரத்தில் சாதனைகள் படைத்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருந்தாலும் இது மிகப் பெரிய அவலமே. தமிழக அரசு, மாநகராட்சி அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன் முயற்சி எடுப்பது அவசியம். ‘விக்டோரியாவுக்கு நடந்தது காரனேஷன், சென்னையில் நடப்பது யூரினேஷன்’ என்ற அவலத்திலிருந்து நகரைக் காக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x