Published : 21 Nov 2019 10:16 AM
Last Updated : 21 Nov 2019 10:16 AM

இந்தியா எந்த இடத்தில் சீனாவிடம் சறுக்குகிறது?

மு.இராமனாதன்

சமத்துவமின்மை என்பது சாதிகளில் மட்டுமல்ல; அது பல்வேறு விஷயங்களிலும் கிளைபரப்பியிருக்கிறது. நம் சமூகம் உடலுழைப்பைத் தாழ்வானதாகவும், மூளையுழைப்பை மேலானதாகவும் கருதுகிறது. இந்த ஏற்றத்தாழ்வை மிகச் சாதாரணமானதாகக் கருதும் இந்த மனோபாவத்தால் நாம் இழப்பது ஏராளம்.

நண்பர் ஒருவர் தென் தமிழகத்தின் சிறு நகரம் ஒன்றில் வீடு கட்டிக்கொண்டிருந்ததைப் பார்க்கச் சென்ற எனது சமீபத்திய அனுபவத்துடன் தொடங்கலாம். பொறியியல் படித்த ஓர் இளைஞரைப் பணிக்கு அமர்த்தியிருந்தார் ஒப்பந்தக்காரர். அங்கு பணியாற்றிய கொத்தனார்கள், தச்சர்கள், கொல்லர்கள், சிற்றாள்கள் எல்லோரும் அந்த இளைஞரை ‘சார்’ என்றே அழைத்தார்கள்.

இளைஞரோ தொழிலாளர்களைப் பெயர் சொல்லியும் ஒருமையிலும் அழைத்தார். வயதிலும் கட்டிட அனுபவத்திலும் தொழிலாளர்கள் மூத்தவர்கள். ‘இளைஞர் படித்தவர். கைகளில் அழுக்கு படாமல் பணியாற்றுபவர். ஆகவே, அவரது பணி உயர்ந்தது. கட்டிடத் தொழிலாளர்கள் படிக்காதவர்கள். உடலுழைப்பைக் கோரும் பணி அவர்களுடையது. அவர்கள் கைகளில் அழுக்கு புரளும். ஆகவே, தாழ்வானது.’ இதுதான் நமது சித்தாந்தமாக இருக்கிறது.

ஹாங்காங்கில் இது எப்படி இருக்கிறது?

எனது ஹாங்காங் அனுபவம் ஒன்றை இங்கே ஒப்பிட்டுப்பார்க்கலாம். ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை சுங் கான் வோ என்ற மலைப்பாங்கான இடத்தில் இருந்தது. அந்தப் பகுதிக்கு மெட்ரோ ரயில் அப்போது வரவில்லை. குவன் டாங் என்கிற இடத்திலிருந்து 16 பேர் அமரக்கூடிய சிற்றுந்தில் செல்ல வேண்டும். மருத்துவமனை வளாகத்தினுள் தாதியர் விடுதி ஒன்று கட்டப்பட்டது.

அதை மேற்பார்வையிடுகிற வேலை எனக்குக் தரப்பட்டது. கட்டுமானத்தோடு தொடர்புடைய அனைவரின் பயன்பாட்டுக்குமாக ஓர் அலுவலகம் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு சமையலறையும் இருந்தது. ஒரு பணிப்பெண் இருந்தார். காலையில் அலுவலகத்தைத் துப்புரவாக்குவார், மேசை நாற்காலிகளைத் துடைப்பார், அலுவலர்களுக்குத் தேநீர் தயாரிப்பார். பிறகு, குவுன் டாங் செல்வார். சமையல் பொருட்கள் வாங்கிவருவார். சமைப்பார்.

முதல் நாள் மதியம் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வட்ட வடிவ மேசை. அதன் மீது சோறும் காய்கறியும் இறைச்சியும் வைக்கப்பட்டிருந்தன. கட்டுமானப் பிரிவின் அலுவலர்கள் சுற்றி அமர்ந்திருந்தனர். அவரவர்கள் தத்தமது கிண்ணத்தில் பரிமாறிக்கொண்டனர். மேசையின் ஒரு பக்கம் கட்டுமானப் பிரிவின் மேலாளர் அமர்ந்திருந்தார்.

அவர் பெயர் டாங். அது குடும்பப் பெயர். டாங் சாங் என்று அழைப்பார்கள். திருவாளர் டாங் என்று பொருள். மேசையின் மறுபக்கம் பணிப்பெண் அமர்ந்திருந்தார். அவரது பெயர் சின். சின் தாய் என்று அழைப்பார்கள். திருமதி சின் என்று பொருள். ஊழியர்கள் எல்லோரும் ஒரே மேசையைச் சுற்றி அமர்ந்து உண்டார்கள். மரியாதைக்கு முக்கியத்துவம் சீன மொழியில் பொதிந்திருக்கும் பண்பாடானது வாழ்க்கையிலும் தொனிக்கும். வகிக்கும் பதவியால் தாழ்ச்சியோ உயர்ச்சியோ வருவதில்லை.

இரண்டாவது ஆச்சரியம்

அடுத்த நாள் மாலை குவன் டாங் நிலையத்தில் ரயிலேறுவதற்கு முன் நடைமேடையில் எனக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. அன்னா லியுங் இளம் பெண். பொறியியல் கணக்கீட்டாளர். மருத்துவமனையின் கட்டிடப் பிரிவில் பணியாற்றினார். அன்னா ஓர் இளைஞரின் கைகளைக் கோத்துக்கொண்டு நின்றிருந்தார். அந்த இளைஞரின் முகமும் எனக்குப் பரிச்சயமாகத்தான் இருந்தது.

புதிரை அன்னாவே விடுவித்தார். இளைஞரின் பெயர் வில்சன் லாம். வில்சன் தாதியர் விடுதிப் பணித்தலத்தில் கொல்லராக வேலைபார்க்கிறார். கணினியின் முன் சதா கணக்குபோடும் அன்னாவுக்கும் கம்பிகளை வளைக்கும் வில்சனுக்கும் காதல் மலரும் என்பதை நம்புவது ஒரு தமிழ் மனம் கொண்ட எனக்குச் சிரமமாக இருந்தது.

ஹாங்காங்கில் அவரவர்க்கு அவரவர் செய்யும் பணி மேலானது. அதேநேரத்தில், அடுத்தவரின் பணி தாழ்வானதும் அல்ல. கருமமே கண்ணாயிருப்பார்கள். காலத்தைப் பொன்னெனப் போற்றுவார்கள். பணியில் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். செய்யும் தொழில் ஒருவரது அந்தஸ்தை நிர்ணயிக்காது. ஆனால் நாம்? சமீபத்தில் ஒரு திருமணத்துக்குப் போயிருந்தேன். ஒரு பெரிய அரசு அதிகாரி காரில் வந்தார். ஓட்டுநர் முதலில் அதிகாரிக்குக் கார் கதவைத் திறந்துவிட்டார். வீட்டார்கள் அவரைச் சுற்றிக்கொண்டார்கள்.

அடுத்து ஓட்டுநர் கடிகாரச் சுற்றுக்கு எதிர்த் திசையில் சுழன்றோடி காரின் மறுபக்கக் கதவைத் திறந்துவிட்டார். அதுவரை பொறுமை காத்த அதிகாரியின் மனைவி, இட்ட அடி நோகாமல் தரையில் பாதம் பதித்தார். கார் ஓட்டுவது ஒரு பணி. அதிகாரி செய்வதும் ஒரு பணி. அதிகாரி தன்னைப் பெரியோர் என்றும் ஓட்டுநரைச் சிறியோர் என்றும் நினைக்கிறார்.

அதிகாரியின் மனைவியும் அப்படியே நினைக்கிறார். அதனால்தான், கார் கதவைத் தாங்களே திறந்துகொள்வது தங்களின் கௌரவத்துக்குக் குறைச்சல் என்று இருவரும் கருதுகிறார்கள். ஓட்டுநர் சிரம் தாழ்த்தித் திறந்துவிடும் வரை காத்திருக்கிறார்கள். இந்த இணையரின் பிள்ளைகள் அவர்கள் வீட்டுக் காவற்காரரோடும் பணிப் பெண்ணோடும் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை ஊகிப்பது கடினமல்ல.

இந்தியாவின் வினோத சூழல்

செய்யும் தொழிலால் பாராட்டப்படும் ஏற்றத்தாழ்வு இந்தியாவில் ஒரு வினோதமான சூழலை உருவாக்கியிருக்கிறது. ஒரு பக்கம் வேலையின்மை. மறுபுறம் திறன் மிகுந்த தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை. வெள்ளை காலர் வேலைதான் மேலானது என்று பலரும் நம்புவதால் காசைக் கொட்டிப் பலரும் தனியார் கல்லூரிகளில் படிக்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் 552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பட்டம் பெறுகிற பல இளைஞர்களுக்கு அவர்தம் படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை. அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை என்கிறார்கள் முன்னணி நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள். மறுபுறம் நீல காலர் வேலையோடு உள்ள ஒவ்வாமை காரணமாக அதற்கு முறையான பயிற்சிகள் இல்லாத சூழல்.

சீனா இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்கிறது என்பது நமக்கான பாடம். சீனாவில் 96% பேர் படித்தவர்கள். பள்ளிப் படிப்பு கட்டாயம். சிறப்பாகப் படிக்கிறவர்கள் பட்டப்படிப்புக்குப் போவார்கள். மற்றவர்கள் தொழிற்பயிற்சிப் பள்ளிக்குப் போவார்கள். விருப்பமுள்ள தொழிலில் பயிற்சி பெறுவார்கள். உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் பலவும் தங்கள் ஆலைகளை சீனாவில் நிறுவியிருக்கின்றன.

அங்கு பள்ளிக் கல்வியும் தொழிற் பயிற்சியும் பெற்ற தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். உடலுழைப்பைக் கோரும் வேலைகளை அவர்கள் தரக்குறைவாக நினைப்பதில்லை. அதனால்தான், மேலாளர் டாங் சாங்கும் பணிப்பெண் சின் தாயும் ஒரே மேசையில் அமர்ந்து உணவருந்த முடிகிறது. அன்னாவும் வில்சனும் கைகோத்துக்கொண்டு நடக்க முடிகிறது. வேலைவாய்ப்பின்மையைப் பூதாகரமாக வளரவிடாமல் தடுக்க முடிகிறது!

- மு.இராமனாதன்,
ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x