Published : 20 Nov 2019 12:11 PM
Last Updated : 20 Nov 2019 12:11 PM

அனைவருக்குமான நிதித் தேவை அடிப்படை உரிமையா?

பாலசுப்ரமணியம் முத்துசாமி

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ‘நம்ம ஊரு ஹீரோ’ எனும் தொலைக்காட்சித் தொடரில், வங்கி மேலாளர் பார்த்திபனின் பங்களிப்பு முன்னிறுத்தப்பட்டது. கந்துவட்டிக்குக் கடன் வாங்கும் ஒரு விசைத்தறித் தொழிலாளர் பெண்மணிக்கு அவர் ரூ.2 லட்சம் கடன் வழங்கியிருக்கிறார். சில வருடங்களில், அந்தப் பெண்மணிக்குச் சொந்தமாக 3 விசைத்தறிகளும், வங்கியில் இருப்பாக ரூ.4 லட்சமும் சொத்துக்கள் உருவாகின்றன.

அந்த ரூ.2 லட்சம் தொகையை அவர் கந்துவட்டிக்கு வாங்கியிருந்தால் வருடம் ரூ.2.4 லட்சம் வட்டி கட்டியிருக்க வேண்டும். வங்கியில் வாங்கியதால், வருடம் ரூ.2.12 லட்சம் கந்துவட்டியாகத் தர வேண்டிய பணம் மிச்சமாகிறது. அது சில வருடங்களில் அந்தத் தொழிலாளிக்கு 3 விசைத்தறிகளாகவும் வங்கிச் சேமிப்பாகவும் மாறுகிறது. 1967-லிருந்து வங்கிகளைத் தேசியமயமாக்க வேண்டும் எனப் பலத்த குரல்கள் எழுந்தன.

காங்கிரஸின் மூத்த தலைவர்களான காமராஜர், ஜெகஜீவன் ராம் போன்றவர்கள் காங்கிரஸ் கூட்டங்களில் பெரும் அழுத்தம் தரத் தொடங்கினர். அன்றைய இளம் துருக்கியரான சந்திரசேகர், பொருளியல் அறிஞர்களின் ஆராய்ச்சிக் குழு ஒன்றை நிறுவி, வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதைத் துரிதப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். துணைப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் இதை எதிர்த்தார்.

ஆனால், புள்ளிவிவரங்களும் அரசியல் நிலைகளும் வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதன் பக்கம் நின்றன. 1969-ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அப்போது, இந்தியாவில் 8,200 வங்கிக் கிளைகள் இருந்தன. 70% கடன்கள் 1% கடனாளிகளுக்கு வழங்கப்பட்டன. வேளாண்மைக்கு வழங்கப்பட்ட கடன் 2.2% ஆக இருந்தது. 77% கிளைகள் நகரங்களில் இருந்தன. வங்கிகளில் மக்களின் சேமிப்பு ரூ.4,600 கோடி அளவில் இருந்தது. தனியார் வங்கிகள் மூழ்கிப்போவது மிகச் சாதாரணமான நிகழ்வாக இருந்தது.
சர்.சி.வி.ராமனின் நோபல் பரிசுப் பணத்தைக்கூட ஒரு வங்கி திவாலானதில் அவர் இழக்க நேரிட்டது எனச் சொல்கிறார்கள்.

கிராமம் வந்துசேர்ந்த வங்கிகள்

முறையான நிதிக் கட்டமைப்பு இல்லாத அக்காலத்தில் உழவர்களும் உள்ளூர் சிறு/குறு தொழில் முனைவோரும் உள்ளூர் ஆதிக்க சாதி வட்டி வணிகர்களையே நம்பியிருந்தார்கள். குறைவான, பாதுகாப்பில்லாத வங்கிக் கட்டமைப்பால் மக்களின் பணம் பாதுகாப்பில்லாத வழிகளில் சேமிக்கப்பட்டன.

அதனால், சேமிக்கப்பட்ட அந்தச் செல்வம் சமூகத்துக்கான சரியான முதலீடாக மாறவில்லை. தேசியமயமாக்கமோ வங்கிகளை கிராமங்களுக்கு அனுப்பியது. வேளாண்மை, சிறு/குறு தொழில்கள் மக்கள் முன்னேற்றத்துக்கான முக்கியத் தேவையாக முடிவுசெய்யப்பட்டு, இலக்குகள் நிர்ணயித்து (40% கடன்கள்) கடனளிக்க வங்கிகள் பணிக்கப்பட்டன.

1969-ல் 8,200 கிளைகளைக் கொண்டிருந்த இந்திய வங்கிக் கட்டமைப்பு இன்று 1.52 லட்சம் கிளைகளைக் கொண்டிருக்கிறது. உலகில் மிக அதிகமான வங்கிக் கிளைகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 1969-ல் ரூ.4,600 கோடியாக இருந்த (இன்றைய மதிப்பில் ரூ.1.9 லட்சம் கோடி) வங்கி சேமிப்பு, இன்று ரூ.1.12 கோடி கோடியாக உயர்ந்துள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூழ்காது எனும் பெரும் நம்பிக்கையில் மக்களின் சேமிப்பு வங்கிகளுக்கு வந்ததன் விளைவு. அந்தச் சேமிப்பு தேசப் பொருளாதாரத்தை இயக்கும் மூலப் பொருளாக மாறுகிறது. 1969-ல் ரூ.40 கோடி வேளாண் கடன் (இன்றைய மதிப்பில் ரூ.1,643 கோடி) இன்று ரூ.11.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 1969-ல் ரூ.251 கோடியாக இருந்த சிறுதொழில் கடன் (இன்றைய மதிப்பில் ரூ.10,310 கோடி) இன்று ரூ.11.68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மிக விரிவாகக் கட்டமைக்கப்பட்ட வங்கிக் கிளைகள், சாதாரண மக்களின் சேமிப்பைத் திரட்டி, மிகப் பாதுகாப்பாக வைத்திருந்து அதை நாட்டின் தேவைகளுக்கு மடைமாற்றியது. இது இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான கொள்கை முன்னெடுப்பாகும். 1991-ல் கொண்டுவரப்பட்ட நவதாராளமயச் சீர்திருத்தங்களைவிட முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தம் எனச் சொல்லலாம்.

அடித்தட்டு மக்களும் கந்துவட்டியும்

இந்த அளவு நிதி கிராமங்களுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், இன்றும் உழவர்களும் சிறுதொழில் முனைவோரும் உள்ளூர் ஆதிக்க சாதிச் செல்வந்தர்களைத் தொழிற்கடனுக்காக அண்டி வாழும் நிலையில்தான் இருந்திருப்பார்கள். சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பின்தங்கியிருந்திருப்பார்கள்.

ஆனால், இந்த முன்னேற்றம் அனைத்து மக்களையும் சென்றடையவில்லை. நம் சமூகத்தின் மிக முக்கியமான அங்கமான அடித்தட்டு மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இந்த முறையான வங்கிக் கட்டமைப்பும் அதன் பயன்களும் இன்னும் முழுமையாகப் போய்ச்சேரவில்லை. அவர்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்காகக் கந்துவட்டி போன்ற அதீத வட்டிமுறைகளைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

ஒரு ஏழைத் தொழிலாளி தன் அவசரத் தேவைகளுக்காக ரூ.5,000 ரூபாய் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். அதற்கான கந்துவட்டி மாதம் 10%. வருடத்துக்கு அவர் கட்டும் வட்டி மட்டும் ரூ.6,000 ரூபாய் (138%). இதையே அவர் வங்கியில் 16% வட்டியில் வாங்கும்போது, அவருக்கு வருடம் ரூ.5,200 மிச்சமாகிறது. அவசரச் செலவுக்குக் கந்துவட்டியில் கடன் வாங்கும் ஏழை, ஒரு மத்தியவர்க்க மனிதரைவிட இரு மடங்குக்கும் அதிகமாகச் செலவிடுகிறார். ஏழைகளுக்கான கட்டமைப்பின்மையின் குறைபாடு இது. அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியும்கூட.

புதிய முன்னெடுப்புகள் வேண்டும்

உணவு, கல்வி, சுகாதாரம்போல ஏழைகளின் அடிப்படைத் தேவைகளுக்கான நிதியும் அடிப்படை உரிமையாகக் கருதப்பட்டு, அத்தேவைகளைக் குறைந்த வட்டிவிகிதத்தில் பெறும் வகையில், ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஏழைகளுக்கான நிதித் தேவைகள் அலகில் மிகச் சிறியவை. அச்சிறிய தேவைகளைப் பூர்த்திசெய்ய இப்போதைய வங்கிக் கட்டமைப்புகள் உதவாது.

தொழில்நுட்பத்தின் உதவியுடன், சமூகத்தின் பங்களிப்புடன் அவற்றைச் செய்ய புதிய முறைகள் சமைக்கப்பட வேண்டும். 2008-ம் ஆண்டு நூறு சிறு தப்படிகள் எனும் நிதித் துறைச் சீர்திருத்தங்கள் பற்றிய ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையும் இதைப் பரிந்துரைக்கிறது. அதன் ஒருபடியாகத்தான் தபால் அலுவலக வங்கிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

தற்போது சுய உதவிக் குழுக்களின் மூலம் குறுங்கடன்கள் வழங்கும் முறைகள் இருந்தாலும், அவற்றில் நிறைய குறைபாடுகள் உள்ளன. அவை களையப்பட்டு, கந்துவட்டி என்னும் கொடூரத்தைக் காணாமலாக்க வேண்டும். குறைவான வட்டியால் சேமிக்கப்படும் பணத்தைக் கொண்டு ஏழைகள் பொருட்களை வாங்கத் தொடங்குவார்கள். அது முறையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும்.

கந்துவட்டித் தொழிலின் அதிக வட்டி அபாயம் காரணமாக வன்முறை அதன் தவிர்க்க முடியாத பகுதியாக உள்ளது. அவர்களே கிராம/சிறுநகர அளவில் அரசியல் கட்சிகளின் அடியாட்களாகவும் உள்ளார்கள். எனவே, அடித்தட்டு மக்களுக்கான நிதித் தேவையைப் பூர்த்திசெய்து கந்துவட்டியை ஒழித்தால் மக்களாட்சிக்கும் நன்மை பயக்கும்.

- பாலசுப்ரமணியம் முத்துசாமி,
‘இன்றைய காந்திகள்’ நூலாசிரியர்.
தொடர்புக்கு: arunbala9866@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x