Published : 20 Nov 2019 11:52 AM
Last Updated : 20 Nov 2019 11:52 AM

360: தொழிற்சாலைக் கழிவுகளே காரணம்!

கடந்த சனிக்கிழமையன்று திருநீர்மலை ஏரியில் ஆயிரக் கணக்கான மீன்கள் செத்து மிதந்திருப்பது உள்ளூர் மக்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. செத்து மிதந்த மீன்கள் பெரும்பாலும் கட்லா வகையைச் சேர்ந்தவை. ஒவ்வொன்றும் சராசரியாக ஒன்றரை கிலோ எடை கொண்டவை. இந்த மீன்கள் உள்ளூர் மக்களுக்கு முக்கியமான உணவு ஆதாரமாகும்.

ஏரிக்கு அருகில் அமைந்த தொழிலகங்களிலிருந்து வந்து கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகள்தான் இந்நிலைக்குக் காரணம். அளவுக்கு அதிகமான கழிவுநீர் கலப்பால், ஏரியின் நீரே கறுப்பாக மாறிவிட்டிருக்கிறது. செத்து மிதக்கும் மீன்கள் அழுகியதால் ஏரிக்கு அருகிலேயே செல்ல முடியாதபடி துர்நாற்றமும் கூட. தமிழ்நாட்டின் பொதுப்பணித் துறையும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இந்த நிலைமையைக் கண்டுகொள்ளவே இல்லை என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

பாசனத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்பட்ட இந்த ஏரியால், இனிமேல் எந்தப் பயனும் இல்லை என்ற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. ஒரு பக்கம் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்று கூக்குரல் விடுத்துக்கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம், சேமித்த தண்ணீரை இப்படிக் கழிவுநீரைக் கலந்து வீணடித்துக்கொண்டிருக்கிறோம்!

இது காவலர்களுக்கான அறை

வெயிலிலும் மழையிலும் இரவு பகல் பாராமல் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் காவல்துறையினருக்கு இருக்கிறது. ஓய்வுஒழிச்சல் இல்லாமல் அவர்கள் பணியாற்றும் சூழலே, அவர்களில் பலரை மூர்க்கமாக ஆக்குகிறது. இந்நிலையில், தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் ஒரு ஆரோக்கியமான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஓய்வறை இந்தக் காவல்நிலையத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. “கடந்த காலத்தில் இருந்ததுபோலில்லாமல், இங்குள்ள காவல்துறையினருக்கு அடுக்குமெத்தை, குளிர்சாதன வசதி, சாப்பாட்டு மேசை, சுத்தமான கழிப்பறை போன்ற வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஓய்வு எடுத்துக்கொள்ளாமல் உழைக்கும் காவல்துறையினருக்குத் தேவையான வசதிகளைச் செய்துதந்திருக்கிறோம்” என்கிறார் காவல்துறைத் துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி. இதுபோன்ற வசதிகள் மற்ற காவல் நிலையங்களுக்கும் கூடிய விரைவில் செய்துதரப்படவிருக்கின்றன என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தினர். வரவேற்கத் தகுந்த முயற்சி!

பெண்களைத் தவிக்க விட வேண்டாம்!

கர்ப்பிணிகளுக்கும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குமான திட்டம்தான் ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோசனா’. இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கும் முதல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் மாதம் தோறும் ரூ.6,000 வழங்கப்படும். ஆனால், உண்மையில் இந்தத் திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 30%-தான்.

தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து பெறப்பட்ட இந்தத் தகவலை அடிப்படையாக வைத்து, ஆய்வாளர்கள் ழீன் தெரெசே, அன்மோல் சோமான்ச்சி, கேரா ஆகிய மூன்று வளர்ச்சிப் பொருளியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வும் இதை உறுதிப்படுத்துகிறது.

இந்தத் திட்டத்தில் பதிவுசெய்ய வரும் பெண்களைப் பல ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதாலும் பல பக்க ஆவணங்களைப் பூர்த்திசெய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்குவதாலும் பயனாளிகள் பலரும் விடுபட்டுவிடுகிறார்கள் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தத் திட்டத்தின் பலனை அனுபவிக்கும் பயனாளிகள் பலருக்கும் ஓரிரு தவணை அந்தப் பணம் வருவதோடு நின்றுவிடவும் செய்கிறது.

கருவுற்றதால் வேலையிழப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு, இந்த ரூ.6,000 ஒரு ஆறுதலாக இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டம் முறையாகப் போய்ச் சேராததால் எதிர்பார்த்த வெற்றியை அது பெறவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்வதை எளிமையாக மாற்றி, பலன்கள் உரியவர்களுக்கு உரிய காலத்தில் சென்றுசேர்கின்றனவா என்பதைக் கண்காணித்தால் கருவுற்ற பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x