Published : 18 Nov 2019 08:54 AM
Last Updated : 18 Nov 2019 08:54 AM

360: டெல்லியில் கல்லா கட்டும் ஆக்ஸிஜன் வியாபாரம்

உச்சபட்ச காற்று மாசால் தவித்துக்கொண்டிருக்கும் டெல்லிவாசிகளுக்குச் சுத்தமான ஆக்ஸிஜனைச் சுவாசிக்கத் தருகிறது ‘ஆக்ஸி ப்யூர்’ நிறுவனம். இந்நிறுவனத்தின் உரிமையாளர் 26 வயதே ஆன ஆர்யவீர் குமார். டெல்லியின் தற்போதைய அளவுக்கதிகமான மாசு ஆர்யவீர் குமாரின் தொழிலுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

சுத்தமான ஆக்ஸிஜனை விலைகொடுத்து சுவாசிப்பதற்கு செலவு அதிகம் என்றாலும், மக்கள் அதிக அளவில் இந்நிறுவனத்தை நாடத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற செய்தியின் மூலம் விஷயத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

முழுக்க முழுக்க சுத்தமான ஆக்ஸிஜன் நுரையீரலுக்குப் பலத்த சேதத்தை விளைவித்து மரணத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதால், மூக்குக்கு அடியில் ஒரு சிறு குழாயைப் பொருத்தி, அதிலிருந்து வரும் ஆக்ஸிஜன் வளிமண்டலக் காற்றுடன் சேர்ந்தே மூக்கினுள் செல்வதுபோல் வடிவமைத்துள்ளார்கள்.

15 நிமிடம் ஆக்ஸிஜனைச் சுவாசிக்க ரூ.299-லிருந்து ரூ.499 வரை கட்டணமாகப் பெறப்படுகிறது. இங்கே கிடைத்த வரவேற்பால், இன்னொரு கிளையும் டெல்லியில் தொடங்கப்பட்டிருக்கிறது. ‘தண்ணீரை யாரும் விலை கொடுத்து வாங்குவோம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்த்திருப்போமா? அப்படித்தான் இதுவும்’ என்கிறார் ஆர்யவீர் குமார். ஆனால், இது நல்ல சகுனம் அல்ல!

கையால் மலம் அள்ளுதலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

‘துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம்’ சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையின்படி 2019-ன் முதல் பாதியில் 50 பேர் கழிவகற்றும்போது உயிரிழந்திருக்கிறார்கள். உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய எட்டு மாநிலங்களிலிருந்து மட்டும் கிடைத்த எண்ணிக்கை இது.

கையால் மலம் அள்ளும் வழக்கமானது சட்டபூர்வமாக 1993-ல் ஒழிக்கப்பட்டது என்றாலும், நடைமுறையில் இன்னமும் தொடர்கிறது. 1993-லிருந்து நாடெங்கும் 817 பேர் கையால் மலம் அள்ளும்போது இறந்திருக்கிறார்கள் என்கிறது அந்த ஆணையம். உண்மையில் நிகழ்ந்திருக்கும் மரணங்களோ இன்னும் பல மடங்கு இருக்கும் என்கிறார்கள். நாட்டைச் சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு அடிமட்டத்திலும் அடிமட்டத்தில் இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள்தான் உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள்தான் இந்த வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, நமது சாதிய அமைப்பு மனிதர்களை எவ்வளவு கீழான நிலையில் வைத்திருக்கிறது என்பது புலப்படுகிறது. இன்னும் இந்தப் பிரச்சினைக்கு அறிவியல்ரீதியான தீர்வை அரசுகளால் கொடுக்க முடியவில்லை. வளர்ந்த நாடுகளில் கழிவுநீர் அமைப்பைச் சுத்தப்படுத்த இயந்திரங்கள், இயந்திர மனிதர்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவும் இதைப் பின்பற்றி இந்தக் கொடூரமான வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆப்பிள் விவசாயத்தில் களமாடிய பருவநிலை மாற்றம்

இமாச்சல பிரதேச ஆப்பிள்களுக்கு மவுசு அதிகம். ஆனால், தற்போது அங்கே ஆப்பிள் சாகுபடியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், சமீப காலமாகப் பருவநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்தான். ஆப்பிளுக்கு 800-லிருந்து 1,200 மணி நேரம் குளிர்ந்த வானிலை தேவை.

ஆனால், பருவநிலை காரணமாகக் குளிர்ந்த வானிலை நிலவும் நேரம் குறைந்துவிட்டது. இதனால், ஆப்பிளுக்கு மாற்றாக மாதுளையைத் தேடியுள்ளனர் அங்குள்ள ஆப்பிள் விவசாயிகள். மாதுளை நல்ல லாபத்தையும் விவசாயிகளுக்குத் தருகிறது என்றாலும் மாதுளையிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஆப்பிளைவிட அதிக அளவில் பூச்சிகள் மாதுளையை நோக்கிப் படையெடுக்கின்றன.

ஆப்பிளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் 5 முறை பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டுமென்றால் மாதுளைக்கு 10-லிருந்து 14 முறை தெளிக்க வேண்டியிருக்கிறது. புழுவாக இருக்கும்போது வண்ணத்துப் பூச்சி மாதுளைப்பூவில் நுழைந்து சேதத்தை ஏற்படுத்திவிடுவதால் பூவிலேயே பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், மக்கள் மத்தியில் மாதுளை குறித்த அச்சம் நிலவுகிறது. விவசாயிகளுக்கு இப்படியும் அப்படியும் போக முடியாத நிலை தற்போது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x