Published : 18 Aug 2015 08:43 AM
Last Updated : 18 Aug 2015 08:43 AM

ரசிகமணி நினைவலைகள்

பல்லாயிரமாண்டு பண்பாட்டைக் கொண்ட தமிழுக்குப் பண்பாடு என்ற சொல்லைத் தந்தவர் ரசிகமணி

கண்ணபிரானும் கவி பாரதியும் பிறந்த அதே ரோகிணி நட்சத்திரத்தில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் டி.கே.சிதம்பரநாத முதலியார் பிறந்தார் என்னும் சிறப்புக்கு இணையாக ரசிக்கத்தக்கது அவருடைய பிறந்த தேதியான 18.8.1881. முன்பிருந்து பார்த்தாலும் பின்பிருந்து பார்த்தாலும் ஒத்திசைக்கும் தேதி. தாய்வழிப் பாட்டனாரின் ஊரான திருவில்லிபுத்தூரில் பிறந்த ரசிகமணி, அவ்வூர்க் கோபுரத்தைத் தமிழ்நாடு அரசின் இலச்சினையாக அப்போதைய முதல்வரும் தன் நண்பருமான ஓமந்தூராரைப் பரிந்துரைக்கச் செய்து, ஜவாஹர்லால் நேரு இசைவளிக்கக் காரண கர்த்தாவாக இருந்தார்.

கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி, ஆண்டாள், திருவாசகம் ஆகியவற்றோடு நில்லாமல், காவடிச் சிந்து, தனிப்பாடல்கள், நாட்டுப் பாடல்கள் போன்ற உதிரி இலக்கியங்களின் உண்மைத் தன்மையை உணரவைத்த ரசிகமணி, பாரதியையும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையையும் உள்ளன்போடு உயர்த்திப் பிடித்தார்.

கவிதானுபவத்தின் திறவுகோல்

கவிமணி புனைந்த சரஸ்வதி பாடலை ரசிகமணி விளக்கும்போது மெய்ம்மறந்த கல்கி, ‘இத்தனை கருத்துக்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் சொன்ன கருத்துக்களையே இக்கவிதையை எழுதும்போது கவிஞர் நினைத்தாரா?' எனக் கேட்கிறார். ரசிகமணி அதற்களித்த விடை எந்தக் காலத்துக்கும் பொருந்தும் கவிதானுபவத்தின் திறவுகோல். ‘ஒரு கவிஞன் தன் மனதில் எண்ணும் ஆழமான கருத்து தானாகவே சென்று கவிதையில் புகுந்துகொள்ளும். அறிவுத் திறமையை மீறிய உள்ளுணர்வு கவிஞனைப் பேச வைத்துவிடும்'.

விந்தன் நடத்திய ‘மனிதன்' இதழில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை மதிப்பிடுகிறார். ‘எந்த இடத்தில் கவிதையின் உயிர்நாடி பேசுகிறது? உயிர்நாடியின் ஒலி முற்றும் கேட்பதற்கு எந்த இடத்தில் எப்படி அழுத்தம் கொடுத்துப் பாட வேண்டும் என்றெல்லாம் பிறருக்கு அனுபவித்து விளக்கி கவிதானுபவத்தில் நண்பர்களைத் திளைக்கச் செய்தவர் ‘டி.கே.சி.'

வின்ஸ்லோவின் கூற்று

பல்லாயிரமாண்டு பண்பாட்டைக் கொண்ட தமிழுக்குப் பண்பாடு என்ற சொல்லைத் தந்தவர் ரசிகமணி. இப்படி எண்ணற்ற சொற்களை அவர் தந்திருக்கிறார். 15-02-1954 நாளன்று, அதாவது, இறப்பதற்கு முதல் நாள் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த டி.கே.சி தன்னைக் கவனிக்க வந்த டாக்டர் சேஷகிரி ராவிடம் ‘நாவறட்சி' என்கிற தமிழ் வார்த்தைக்கு இணையான வார்த்தை இங்கிலீசில் உண்டா என வினவினாராம். மண்மணம் விரவிடும் பல சொல்லாடல்கள் ரசிகமணிக்கு முயற்சியின்றியே சாத்தியமாகிறது. டாக்டர் வந்து புண்ணுக்கு வைத்தியம் செய்கிறார். புண் ‘குணமுகம்' காட்டுகிறது என்கிறார். காலிலிருந்து புண்கள் அநேகமாக ‘நிரந்து' விட்டன என்கிறார். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள் இன்று ‘சிறுகாலை'யில் புறப்பட்டுப் போயிருப்பார் என்கிறார். ‘நிரந்தேறிப் பொழிவீர்காள்' எனவும், ‘சிற்றஞ்சிறுகாலே' எனவும் வைணவப் பெண் ஆழ்வார் ஆண்டாள் பாடிய பாசுரம் அவரை ஆட்கொண்டிருக்கக் கூடும். “வைஷ்ணவப் பரிபாஷையில் ‘தேவரீர் எப்பொழுது எழுந்தருளிற்று' என்பதைச் சொல்கிறபோது அதன் பண்பாடும் சுகமும் எளிதில் விளங்கிவிடுகிறது. அதற்குச் சமமான வரவேற்பு வேறு எந்தப் பாஷையிலும் இருக்காதோ என்று சொல்லத் தோன்றுகிறது” என்று ரசிகமணி உருகுகிறார். ‘கிரேக்க மொழியில்கூட இல்லாத நளினமும் துல்லியமும் தமிழ் மொழிக்கு இருக்கிறது' என்கிற வின்ஸ்லோவின் கூற்றை அடிக்கடி சொல்லிச் சொல்லிப் பூரித்துப்போவார் ரசிகமணி. ‘தமிழைக் கற்பதால் ஆனந்தம் அடைந்தவர் ஒரே ஒருவர்தாம். அவர்தான் டி.கே.சி' என்கிறார் வையாபுரிப் பிள்ளை.

கம்பரை எனக்குத் தெரியும்

கம்பனுக்கு நான் செய்த சேவைகளிலெல்லாம் பெரிய சேவை, அவரை அனுபவித்த சேவைதான் என்று சொன்ன டி.கே.சி., செருகு கவிகளை ஒதுக்கித் தள்ளியதற்கான காரணத்தை ஒரு வரியில் சொன்னார். ‘கம்பரை எனக்குத் தெரியும், நன்றாகவே தெரியும்'. கம்பராமாயணத்தில் டி.கே.சி. பதிப்பித்த பாடல்களுக்கு அவர் எழுதிய உரைப் பகுதிகளை தமிழ் இலக்கியத்தின் சிகரம் என விமர்சித்த க.நா.சு. அவற்றைக் கம்பன் பாடல்களுக்குச் சமமாக மதிப்பிடுகிறார். ரசிகமணி நடத்திய வட்டத் தொட்டியின் வாரிசுகளே இன்றைய கம்பன் கழகங்கள்.

ஒவ்வொரு அம்சத்திலும் கருத்து வேறுபாடு இருப்பினும் பெரியாரும் ரசிகமணியும் ஒருவரை ஒருவர் திறந்த மனதுடன் அணுகினர். டி.கே.சி-யின் சஷ்டியப்த பூர்த்தி 1942-ல் குற்றாலம் அருகிலுள்ள திருவிலஞ்சிக் குமாரசாமி கோயிலில் நடைபெற்றபோது, பெரியார் கலந்துகொண்டார். முருகன் கோயிலில் நடக்கிற நிகழ்ச்சிக்கு நீங்கள் ஏன் போக வேண்டும் எனச் சுற்றியிருந்தோர் வினா எழுப்பியபோது ‘அறுபதாம் கல்யாணம் முருகனுக்கா நடக்கிறது? முதலியாருக்குத் தானப்பா நடக்கிறது!' என்றாராம் பெரியார். 20.07.1929-ல் திருநெல்வேலியில் பெரியார் படத்தைத் திறந்துவைத்து ரசிகமணி ஆற்றிய உரை அலாதியானது.

“பெரியார் கொள்கைகள் பல வைதீகர்களுக்கும் சமயப் பித்தர்களுக்கும் சற்று விரோதமாகத் தோன்றலாம். ஆனால், நமது திருமூலர் கூறியது போல்,

‘குருட்டினை

நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழி விழுமாறே' என்பது போன்றதே ஆகும்.”

ரசிகமணியின் சிறப்புகள்

தமிழிசைக் காவலர் என்பது ரசிகமணி வகித்த இன்னொரு பாத்திரம். 1941-ல் நடைபெற்ற தமிழிசை மாநாட்டின் கர்த்தா டி.கே.சி. தமிழிசை இயக்கத்துக்காகப் பல ஊர்களில் மேடை வாயிலாகவும், ரசனையின் ஒலி, இதய ஒலி ஆகியவற்றில் கட்டுரைகள் வாயிலாகவும் உரத்த சிந்தனைகளை வெளிப்படுத்தினார். 1943-ல் சென்னையில் தமிழிசைச் சங்கம் சார்பில் நடைபெற்ற முதலாவது இசை விழாவுக்குத் தலைமை தாங்கியவர் ரசிகமணி.

ரசிகமணிக்கு இன்னும் பல சிறப்புகள் உண்டு. அவற்றில் தலையாயது விருந்தோம்பல். பக்தி இலக்கியங்களில் ஈடுபாடுள்ள அளவுக்குப் பக்தியில் ஈடுபாடு கிடையாது. ஆனால், மரங்கள் உள்ளிட்ட இயற்கையம்சங்கள் மீது பக்தி பூண்டார். ரசிகமணி வலியுறுத்திய காரணத்தாலேயே தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் ‘என் சரித்திரம்' எனும் தலைப்புள்ள அவருடைய வணங்குதற்குரிய வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடனில் தொடராக எழுதியதாகவும்; 06.01.1940 முதல் 122 அத்தியாயங்கள் வெளிவந்ததாகவும் உ.வே.சா மகன் சா.கல்யாண சுந்தரம் பதிவுசெய்திருக்கிறார்.

ரசிகமணி ஒரு பத்திரிகையாளரும்கூட. 1931-ல் ஆரம் பிக்கப்பட்ட ‘கலைமகள்' ஆசிரியர் குழுவில் அவர் அங்கம் வகித்தார். சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் தொடங்கிய ‘வசந்தம்' மாதப் பத்திரிகையின் ஆசிரியராகவும் பெருமைப்படுத்தினார். மூன்றாண்டுகள் சென்னை மேல்சபை உறுப்பினராகவும், பின்னர் இந்து அறநிலையத் துறையிலும் தன் பங்களிப்பை நல்கினார் ரசிகமணி. ‘நுண்துளி தூங்கும் குற்றாலம்' என ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற குற்றாலத்தில் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்திருக்கிறார் டி.கேசி. மரணம் தழுவிய பகல் ‘என்னமாய் நிலா காய்கிறது' எனத் தன்னிலை மறந்து முனகுகிறார். ‘ஆனந்தமான உலகத்துக்குப் போறேம்' என்று உதடுகள் உச்சரிக்க உயிர் பிரிகிறது.

‘கடித இலக்கியத்தின் முன்னோடி' எனப் போற்றப்படும் ரசிகமணி ஒரு முறை குற்றாலத்திலிருந்து எழுதுகிறார்: “என்னுடன் இருந்த நண்பர்களும் எல்லோருமாக நேற்று புறப்பட்டுப் போய்விட்டார்கள். நான் ‘இனிது இனிது ஏகாந்தம் இனிது' என்று ‘சிவமே' என்றிருக்கிறேன். அருவிச் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. மற்றபடி நிசப்தம். மணி காலை 3.30.

- இரா. நரேந்திரகுமார், ‘ஆண்டாள்’உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: rjpmcub@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x