Published : 15 Nov 2019 08:03 AM
Last Updated : 15 Nov 2019 08:03 AM

செ.நெ.தெய்வநாயகம்: மருத்துவச் சேவை ஒரு தவம்!

இர.இரா.தமிழ்க்கனல்

அதிகாலையிலிருந்து வரிசையில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் திடீரெனப் பரபரப்பாகி அவருக்கு வழிவிட்டு ஒதுங்குகின்றனர். உதவியாளருடன் உள்ளே நுழைந்து, மருத்துவர் அறைக்குச் செல்லும் அவர், தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒருவர். அவரின் உதவியாளர், மருத்துவரிடம் சன்னமான குரலில் முன்னுரிமை கேட்கிறார்.

“எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என மருத்துவர் கேட்க, “246” என்கிறார் மருத்துவப் பணியாளர். “பிறகென்ன, 247-வது அட்டையைக் கொடுத்து அவரை அமரவையுங்கள்” எனச் சொல்லிவிட்டு, இடைநிறுத்திய சிகிச்சையைத் தொடர்கிறார். அந்தத் திரைநட்சத்திரமும் 9 மணி முதல் 1 மணி வரை காத்திருந்தார். அவரின் நோய்க்குறிகளைக் கேட்டறிந்து, அவரிடம் கண்டிப்பான குரலில் அறிவுறுத்திவிட்டு, அடுத்த நோயாளியை அழைத்தார் பேராசிரியர் மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம்.

தெய்வநாயகத்தைப் பொறுத்தவரை மருத்துவப் பணி என்பது ஒரு தவத்தைப் போல, துறவறத்தைப் போல. நோய்முதல் நாடி தணிக்கச் சொல்லும் வள்ளுவர் வாக்கைப் பின்பற்றும் மருத்துவர்களில் கணிசமானவர்கள், அடுத்த குறளையும் நோய் தீர்க்கும் கொள்கையாகக் கொண்டிருப்பார்கள். ‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்’. அதாவது, நோயுற்றவரின் நிலையையும் நோயின் தன்மையையும் காலத்தையும் கணக்கில்கொண்டு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டும். அதைத் தன் வாழ்நாள் முழுவதும் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடித்தவர் செ.தெ.தெய்வநாயகம்.

நெஞ்சக நோய்களுக்குத் தனித் துறை

சென்னை மருத்துவக் கல்லூரியில் 1965-ல் எம்பிபிஎஸ் முடித்த தெய்வநாயகம், இங்கிலாந்தில் மேற்படிப்புகளை முடித்தார். தான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே ஆசிரியர் பணியைத் தொடங்கினார். தனிப்பட்ட பட்டறிவால் நிபுணத்துவம் பெற்றவர்களே சுவாச நோய்களுக்கான சிகிச்சை அளித்துவந்த அந்தக் காலத்தில், காசநோய் உட்பட்ட நெஞ்சக நோய்களுக்கென தனித் துறையை உருவாக்கியவர் அவர். காசநோய் மற்றும் நெஞ்சக நோய்கள் தொடர்பான பட்டய, முதுநிலைப் பட்டப் படிப்புகளைக் கொண்டுவந்து அதில் நிபுணர்கள் உருவாக வழிவகுத்தார்.

1989-ல் இப்போதைய போரூர் தனியார் மருத்துவக் கல்லூரியை, 3 ஆண்டுகள் அரசு கையகப்படுத்தி, தாமரை கல்லூரி என்ற பெயரில் நடத்திவந்தது. அதற்கு முதல்வராக தெய்வநாயகம் நியமிக்கப்பட்டார். அப்போது, எய்ட்ஸ் பாதித்து இறந்துபோன ஒருவரைச் சடலக் கூறாய்வு செய்ய மருத்துவர்கள் தயங்க, முதல்வர் தெய்வநாயகம் தானே சடலக் கூறாய்வு செய்து அறிக்கை அளித்தார். அந்த நிகழ்வுதான் அவரின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் தூண்டலாக அமைந்தது எனலாம்.

அனைவருக்கும் உரிய சிகிச்சை

பின்னர், தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு அவர் கண்காணிப்பாளராக அமர்த்தப்பட்டார். பால்வினை நோய்களால்தான் எச்ஐவி பாதிப்பு ஏற்படுகிறது என்று தவறாகக் கருதப்பட்டுவந்த காலகட்டத்தில், எச்ஐவி நோயாளிகளுக்கு தாம்பரம் மருத்துவமனையில் தனிப் பிரிவை அவர் ஏற்படுத்தினார். அவர்களில் பெரும்பாலானவர்களுக்குக் காசநோய் பாதிப்பு இருந்ததும் காசநோயாளிகளுக்கு எச்ஐவி பாதிப்புக்கான வாய்ப்பு இருந்ததும் கண்டறியப்பட்டது.

உள்நோயாளிகள் பிரிவில் சேர்க்கை கிடைக்காமல் ஏராளமானவர்கள் அவதிப்பட்டதைக் கண்ட தெய்வநாயகம், 1,500 பேர் வரைக்கும் சிகிச்சைபெற வழிவகுத்தார். நேரில் வந்துதான் தினமும் மருந்து வாங்க வேண்டும் என்பதால், குறைந்த வருவாய்ப் பிரிவினரான நோயாளிகள் வேலைக்குப் போக முடியாமல் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டனர். அவர்களுக்காக இடைவிடாமல் வாதாடி, போராடி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மொத்தமாக மருந்து வழங்கச்செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவந்த மைதா ரொட்டியை மாற்றி ஊட்டமளிக்கும் இட்லி, பொங்கல் உணவு வகைகளைச் சேர்த்தார்.

எய்ட்ஸ் சிகிச்சையில் சித்த மருத்துவம்

எச்ஐவி நோயாளிக்குப் பாதிப்பு அளவு ‘சிடி4 200’-க்குக் கீழே இருந்தால்தான், தினசரி மருந்து அளிக்க வேண்டும் என்பது உலகளாவிய வழிகாட்டல். ஆனால், நம் நாட்டுக்கு, மாநிலத்துக்குப் பொருந்தாத வறட்டுத்தனமான கருத்து அது என ஒதுக்கினார் தெய்வநாயகம். பாதிப்புள்ள அனைவருக்கும் உரிய சிகிச்சை தர வேண்டும் என்பதில் பிடிவாதமாக நின்றார். எய்ட்ஸ் சிகிசையில் மரபு மருத்துவத்தையும் இணைக்கலாம் எனும் கருத்தையும் செயல்படுத்தினார்.

மருத்துவர்கள் ஆனந்தகுமார், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களுடன் இணைந்து, சித்த மருத்துவத்தையும் இணைத்து கூட்டுச் சிகிச்சையை மேற்கொண்டார். ரசகந்தி மெழுகு, அமுக்ரா, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட ‘ரேம் தெரப்பி’யைக் கையாண்டார். அதனால், நோயின் வலு குறிப்பிடும் அளவுக்குக் குறைந்திருப்பதை நிரூபித்தார். தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடந்த 13-வது உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்தச் சான்றுகளுடன் ஆராய்ச்சி முடிவையும் சமர்ப்பித்தார்.

தன் சகாக்களான ஓ.ஆர்.கிருஷ்ணராஜ சேகர், என்.இரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து, ‘எச்ஐவி நோய்க்கான சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு’ எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அத்துடன் நின்றுவிடாமல், ஆட்சியாளர் களுடன் அடிக்கடி பேசி ஓராண்டுக்குள் கூட்டுச் சிகிச்சைக்கான அரசு ஆணையையும் கொண்டுவர வைத்தார். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டுச் சிகிச்சையால் நோய் பாதிப்பிலிருந்து மீண்டனர்.

ஓய்வுபெற்ற பிறகு, ‘இந்திய நலவாழ்வு நல்லறம்’ எனும் அமைப்பைத் தொடங்கி, எழும்பூரில் உள்ள செஞ்சிலுவைச் சங்க வளாகத்தில், மருத்துவர் குழுவுடன் இணைந்து ரூ.30-ல் சிகிச்சை வழங்கினார். பல ஆண்டுகளுக்குப் பின்னரே அது ரூ.50-ஆக ஆனது. முதலில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், காசநோயாளிகளுக்கு மட்டும் எனத் தொடங்கி, ஒருகட்டத்தில் நாட்பட்ட பல நோய்களுக்கும் கூட்டுச் சிகிச்சையை அளிப்பது என அது வளர்ந்தது. அப்போதைய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியின் ஊக்குவிப்புடன், மாநிலம் முழுவதும் மரபு மருத்துவர்களை மாநாடு கூட்டி, பட்டறிவின் தொகுப்பாகத் தனியான ஆவண நூலாக வெளியிடச்செய்தார்.

மாணவர்கள் வியக்கும் பேராசிரியர்

தெய்வநாயகத்தின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றவர் சித்த வல்லுநர் கு.சிவராமன். ‘நவீன அறிவியல் முறைப்படி மரபு முறைகளைக் கொண்டுவரும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையின் முதல் புள்ளி என்றால், பேராசிரியர்தான். சாமானிய மக்களுக்குப் பொருளாதார நெருக்கடி இல்லாததாக மருத்துவம் இருக்க வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். எவ்வளவு பெரும் சக்தி எதிர்த்துநின்றாலும் தன் கருத்தில் உறுதியாக நிற்பது, அவருடைய பெரிய பலம். கடைசி வரை கற்றுக்கொள்வதில் அவர் காட்டிய ஆர்வம் தனிச்சிறப்பு. மருத்துவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது’ என ஆசான் பெருமிதம் பேசுகிறார்.

‘காசநோய்க்குத் தினசரி மருந்து தருவதற்குப் பதிலாக, ஒருநாள் இடைவெளி விடலாம் என உலக சுகாதார நிறுவனமே மாற்றியது. அது தவறு எனக் கடுமையாக எதிர்த்து, ஓய்வுபெறும் வரை தினசரி மருந்துமுறையைப் பின்பற்றினார். அவரின் பணிக்காலத்துக்குப் பிறகு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்பதைக் கொண்டுவரவும் செய்தனர். ஆனால், ஆய்வு முடிவுக்குப் பின்னர், 2016-ல் தினசரி சிகிச்சைதான் சரியானது என உலக சுகாதார நிறுவனமே ஒப்புக்கொண்டது.

1990-களிலேயே இதைத் தீர்க்கமாகச் சொல்லும் அளவுக்கு நிபுணத்துவம் கொண்டிருந்தார் பேராசிரியர் தெய்வநாயகம். டெங்குக் காய்ச்சலுக்குத் தரப்படும் வலிநிவாரணிகளால் வயிற்றில் ஓட்டை விழுந்து அவதிப்படுகிறார்களே. சித்த மருத்துவம் கூறும் நிலவேம்புக் குடிநீரைப் பொதுச் சிகிச்சையாக வழங்கினால் என்ன என்று அவர் முன்கையெடுத்த முயற்சிதான் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் மூலம் நிலவேம்புச் சிகிச்சைக்கு வழிவகுத்தது’ என்கிறார் அவரின் இன்னொரு மாணவரான அரசு மருத்துவ அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம்.

நவம்பர் 15: செ.நெ.தெய்வநாயகம் பிறந்தநாள்

3- இர.இரா.தமிழ்க்கனல், பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: kanaltrr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x