

நவீனா
குடும்ப அடையாள அட்டையில் ஏன் அப்பாவின் புகைப்படம் மட்டும் இருக்கிறது? குடும்பத்தின் அடையாளம் அப்பா மட்டும்தானா, அம்மா கிடையாதா? இதுபோன்ற கேள்விகள் குடும்ப அட்டையை நகல் எடுக்கும்போதெல்லாம் தோன்றும். திருமணம் எனும் அமைப்புக்குள் ஆண், பெண் இருவரும் சேர்ந்து நுழைந்தாலும் பெரும்பாலும் பெண்களுடைய தனிப்பட்ட அடையாளம் அவர்களே அறியாமல் தேயத் தொடங்கிவிடுகிறது. கிராமத்துப் பெண்களுக்கு இது இன்னும் வெகு இயல்பாக நிகழ்ந்துவிடும்.
மணமான பெண்கள் அங்கு பெரும்பாலும் இன்னார் மனைவி என்றே அறியப்படுகின்றனர். திருமணத்துக்குப் பின் தான் உட்கொண்ட உணவெல்லாம், தன்னை வளர்ப்பதற்கு மாறாகக் குள்ளமாக்கிவிட்டதாய் எழுதப்பட்ட கமலாதாஸின் கவிதை, சுயத்தை இழந்த ஒரு பெண்ணின் வலியை அழகாகச் சொல்கிறது.
இந்த வலியை எனது லக்ஷ்மி அத்தையின் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்த தபால் தொடர்பான நிகழ்வொன்றின் மூலம் உணரலாம். திருமணத்துக்குப் பின் ஏறத்தாழ வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில்தான் அத்தை இருந்தார். எப்போதும் இழுத்துச் சொருகிய சேலையுடன் வீட்டுவேலைகளைக் கவனித்தபடியே இருக்கும் அவர், நல்ல உயரமும் வனப்பும் கொண்டவர்.
புகைப்படங்கள் சொருகப்பட்ட அவரது திருமண ஆல்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் ஒரு படத்தில் கூட்டமாக நின்ற பெண்களை யார் எனக் கேட்க, தனது கல்லூரி காலத் தோழிகள் என்றார். “அத்த, நீங்க படிச்சிருக்கீங்களா?” என்றதற்கு எந்தவித அலட்டலுமின்றி, “ம்ம்ம், பிஎஸ்சி பாட்டனிம்மா” என்றார். அவருக்கு மாடித் தோட்டத்தில் மட்டும்தான் தாவரவியலை வளர்க்க வாய்த்திருக்கிறது.
ஒரு மதிய வேளையில் ஹாலில் அமர்ந்து காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த அத்தையை வாசலில் யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். குடும்ப உறுப்பினர்கள் தவிர, வெளி நபர் ஒருவர் அவரைப் பெயர் சொல்லி அழைத்ததாக எனக்கு நினைவில்லை. விடுவிடுவென வாசலுக்கு விரைந்தவரிடம், “இங்கே லக்ஷ்மின்றது யாரு? இந்தத் தபால் இந்த விலாசத்துக்கு வந்ததான்னு பாருங்க” என்று படபடத்தார் தபால்காரர்.
தனது பெயருக்குத் தபால் வந்திருப்பதை அவர் நம்பியிருக்கவில்லை. இருப்பினும், அழைப்பிதழில் இருந்த தோழியின் பெயரைப் பார்த்து, அவர் ‘ஆம்’ என்று பதிலளிப்பதற்குள் அதைப் புரிந்துகொண்டவராய், “ஏம்மா... தபால் அனுப்பறவங்ககிட்ட விலாசத்துல வீட்டுக்காரர் பேரையும் போடச்சொல்ல மாட்டீங்களாம்மா? சரவணே சம்சாரம்னு தெரிஞ்சிருந்தா எனக்கு இந்தப் பேயலைச்சலெல்லாம் மிச்சம்” என்று அவர் சிறிது காட்டமாகவே பேசினார்.
அதனால், அவமானம் அடைந்துவிட்டதாக நினைத்த அத்தையின் கண்களில் நீர் முட்டிக்கொண்டிருந்தது. “இப்போ எம் பேருக்கெல்லாம் இங்க தபால் வரலைன்னு யார் அழுதா?” என்று மேசை மீது அழைப்பிதழை வீசிவிட்டு மீண்டும் காய்களை நறுக்கத் தொடங்கினார். அழைப்பிதழின் அஞ்சல் உறையில் கொட்டை எழுத்தில் பதிந்திருந்த தேதியைப் பார்த்தபோது, திருமணம் முடிந்து இரண்டு நாட்களாகியிருந்தது.
- நவீனா, ‘லிலித்தும் ஆதாமும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writernaveena@gmail.com