Published : 12 Nov 2019 07:07 am

Updated : 12 Nov 2019 07:07 am

 

Published : 12 Nov 2019 07:07 AM
Last Updated : 12 Nov 2019 07:07 AM

360: உடல் பருமன் அதிகரிப்பால் அவதியுறும் குழந்தைகள்

obesity

நவீனப் பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகள் சரியாகச் சாப்பிடுவதில்லை என்ற மனக்குறை உண்டு. இது ஒருபுறம் என்றால் பீட்ஸா, பர்கர், சிப்ஸ் சாப்பிட்டுவிட்டு உடல் பெருத்துவிடும் பிள்ளைகள் இன்னொருபுறம். ஊட்டச்சத்து குறைவு, ரத்தசோகை, உடல் பருமன் இந்த மூன்று பிரச்சினைகளால் குழந்தைகள் அவதியுறுவதாகச் சொல்கிறது சமீபத்திய தேசிய சுகாதாரக் கணக்கெடுப்பு.

2016-2018 வரையில் 30 மாநிலங்களில் 1,12,000 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 5-9 வயது வரையுள்ள சிறுவர்களில் 10% பேர் நீரிழிவுக்கு முந்தைய கட்டத்திலும், 1% நீரிழிவு ஏற்பட்ட நிலையிலும் உள்ளனர். 5-19 வயது வரையுள்ளவர்களில் 5% பருத்த உடலுடன் இருக்கின்றனர். 35% குழந்தைகள் வயதுக்கேற்ற உயரத்தில் இல்லை, 33% வயதுக்கேற்ற எடையில்லை, 17% உயரத்துக்கேற்ற எடையில்லை, 41% பேருக்கு ரத்தத்தில் குறைந்தபட்ச சிவப்பணுக்கள்கூட இல்லை. சரிவிகித ஊட்டச்சத்து கொண்ட உணவு, அன்றாட விளையாட்டு இரண்டையும் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.


ஆங்கிலத்தில் தேம்பாவணி

வீரமா முனிவரின் ‘தேம்பாவணி’ அவரது 339-வது பிறந்த நாளான நவம்பர் 8 அன்று ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்காக 1711-ல் இந்தியா வந்த ஏசு சபையின் பாத்ரே கோஸ்டான்ஸோ கிஸெப்பி பெஸ்கி தமிழ் மேல் கொண்ட காதலால் தன் பெயரை வீரமா முனிவர் என்று மாற்றிக்கொண்டார்.

அந்நியர்களால் தமிழில் புலமை பெற முடியாது என்ற உள்ளூர்த் தமிழ்ப் பண்டிதர்களின் வாதத்தை மறுப்பதற்காக இந்தக் காவியத்தை வீரமா முனிவர் இயற்றினார் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காவியத்தின் கதாநாயகன் ஏசுவின் தந்தையான ஜோசப்.

இவருக்கு வளன் என்ற தமிழ்ப் பெயரை இக்காவியத்தில் வீரமா முனிவர் சூட்டியுள்ளார். இந்த நூலின் 3,615 விருத்தப் பாக்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியரான டொமினிக் ராஜ். இந்த மொழிபெயர்ப்பைச் செய்து முடிக்க ஆறு ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். தமிழுக்குச் சிறப்பைச் சேர்த்திருக்கும் வீரமா முனிவருக்கு இப்போது சிறப்பு சேர்த்திருக்கிறார் டொமினிக் ராஜ்.

இரட்டைக் குடியுரிமையை இந்தியாவும் ஏற்கட்டும்

அபிஜித் பானர்ஜி நோபல் விருதை வாங்கியிருந்தாலும் 2017-ல்தான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். பாலிவுட் நட்சத்திரம் அக்‌ஷய் குமார், வெளிநாடுகளுக்கு எளிதாகச் சென்றுவருவதற்காக கனடா நாட்டின் குடியுரிமையையும் உரிய பணம் செலுத்திப் பெற்றிருக்கிறார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இரட்டைக் குடியுரிமை கேட்கிறார்கள். அதன் மூலம் இந்தியத் தேர்தலில் அவர்கள் வாக்களிக்க முடியும். வெளிநாட்டுக் குடியுரிமை பெறுவதால், குறைந்த வருமான வரி, குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை, குடியிருப்பு வசதிகள் போன்றவை அந்தந்த நாடுகளில் இந்தியர்களுக்குக் கிடைக்கும்.

இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் குடிமகனாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்துவதால் நம் மக்களை நாமே நிரந்தரமாக வெளித்தள்ளுகிறோம் அல்லது இந்தியர்களாகத் தொடர வைத்து, அவர்களுடைய பொருளாதாரத்தைச் சேதப்படுத்துகிறோம்.

இதனால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசு கருதினால், அதிலிருந்து தப்பிக்கவும் வழி இருக்கிறது. வங்கதேசம் அப்படி விண்ணப்பிப்பவர்களை ‘இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ்’ பெற வேண்டும் என்கிறது. இதனால், தன் நாட்டவர் எந்தெந்த நாடுகளில் குடியுரிமை பெறுகின்றனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

பிரேசில் நாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருந்தாலும், பிரேசிலுக்குள் வரும்போதும் வெளியேறும்போதும் பிரேசில் கடவுச்சீட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கனடாவும் இரட்டைக் குடியுரிமையை ஊக்குவிக்கிறது. அமெரிக்கா ஊக்குவிப்பதில்லை என்றாலும் அது மறுக்கவில்லை. பாகிஸ்தான் 16 நாடுகளுடன் மட்டும் இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்ளலாம் என்று தனது மக்களுக்கு வரம்பு கட்டியிருக்கிறது. இப்போது உலகம் சுருங்கிவிட்டது. ‘ஒரே நாடு... ஒரே குடியுரிமை’ அவசியம்தானா என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.


உடல் பருமன்அவதியுறும் குழந்தைகள்வீரமா முனிவர்தேம்பாவணிஇரட்டைக் குடியுரிமைபானர்ஜி நோபல் விருதுபிரேசில் நாட்டவர்கள்இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author