

“மகாத்மா காந்தி, மதுவிலக்கைக் கொள்கையாக அல்ல; வாழ்க்கை முறையாகவே வலியுறுத்தினார். குடிகாரர்கள் தங்களை அழித்துக்கொள்வதுடன் தங்களைச் சார்ந்துள்ள மக்களையும் அழித்துவிடுகிறார்கள். சமுதாயத்தின் ஒழுக்கமும் சீரழிவுக்குள்ளாகிறது. மதுவிலக்கால் சமுதாயம் அடையும் நன்மைகள்தான் பிற எவற்றையும்விட முக்கியமானவை.
உடல்நலம் மிக்க மக்களைக் கொண்ட நாடுதான் முன்னேற முடியும். மதுவிலக்கு காரணமாகக் குடித்துவிட்டு ரகளை செய்வதைக் காணாத புதிய தலைமுறையை இப்போது நாம் காண்கிறோம். சிலர் திருட்டுத்தனமாகக் குடிக்கிறார்கள் என்பதற்காக, ஒருசிலர் மதுவிலக்குச் சட்டத்தை மீறுகிறார்கள் என்பதற்காக எந்த நாகரிக அரசும் மதுவிலக்குச் சட்டத்தை எடுத்துவிடாது. மதுவிலக்குச் சட்ட மீறல் குற்றங்களைப் பார்த்து, திட்டம் தோல்வி அடைந்துவிட்டது; ரத்துசெய்துவிடலாம் என்றால் ஏற்றுகொள்ள இயலாது. இன்னும் வலுவான முறையில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையே அது வலியுறுத்துகிறது.
“மதுவால் கண்ணீர் வடிக்கும் தாய்மார்களின் முகங்களும், அழுது கதறும் குழந்தைகளின் உருவங்களும், நலிந்துவிட்ட குடும்பங்களும் என் மனக்கண்ணின் முன்பு காட்சியளித்தன. சில நிமிடம் சிந்தித்தேன். மதுவிலக்கை ரத்துசெய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட, தாய்மார்களின் மகிழ்ச்சி பொருந்திய குடும்பங்கள்தான் தமிழக அரசுக்கு முக்கியம். இதற்கு எதிராக இந்த வருமானம் எந்த வகையிலும் ஈடல்ல என்று முடிவுகட்டினேன். ஆகவே, மதுவிலக்குச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை மூடி, திட்டத்தை இன்னும் உறுதியாக அமலாக்கி, அத்திட்டத்தில் வெற்றி காண முனைவோம்.
“மதுவிலக்கைத் தளர்த்தியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களான காமராஜ் அவர்களுடனும் பக்தவச்சலம் அவர்களுடனும் கைகோத்துப் பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூவரும் ஒன்று சேர்ந்து மற்ற மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவோம் என்றால், அந்த நாள் பொன்னாள்… இம்முறையில் நமக்குச் சிறை தண்டனை கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயார்!”