Published : 10 Nov 2019 07:35 AM
Last Updated : 10 Nov 2019 07:35 AM

மனுதாரர் ராம் லல்லா பெற்ற மகத்தான தீர்ப்பு!

இவர் யார் தெரியுமா?

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 'ராம் லல்லா விராஜ்மன்' மட்டுமே உரிமைகோர முடியும். வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. ராம் லல்லா விராஜ்மன் அல்லது குழந்தை ராமர் விக்கிரகம் என்பது தெய்வ சிலையாகும். அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கோயிலில் ராம் லல்லா விக்கிரகத்தையே பக்தர்கள் வழிபடுகின்றனர்.

அந்த தெய்வ சிலையின் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தியோகிநந்தன் அகர்வால் கடந்த 1989-ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உரிமையியல் சட்ட விதியின்படி ராம் லல்லா சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு காப்பாளர், அறங்காவலர் மூலம் மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமையையும் பெற்றிருக்கிறது. கடந்த 2002-ம்ஆண்டில் தியோகி நந்தன் அகர்வால் காலமானார்.

அவரது மறைவுக்குப் பிறகு ராம் லல்லா விராஜ்மனின் பிரதிநிதியாக விஎச்பி மூத்த தலைவர் திர்லோகி நாத் பாண்டே நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

அயோத்தி வழக்கில் ஷியாவக்பு வாரியத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதேபோல இந்து அமைப்பான நிர்மோகி அகாடாவின் மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ராம் லல்லா விராஜ்மனின் மனுவை மட்டும் ஏற்றுக் கொண்டு மகத்தான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

விருந்தில் கலந்து கொண்ட நீதிபதிகள்

அயோத்தி நில விவகார வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மற்ற 4 நீதிபதிகளுடன் நேற்று இரவு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்தில் கலந்து கொண்டார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, அயோத்தி வழக்கில் நேற்று 1,045 பக்கங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், முஸ்லிம் சமூகத்தினருக்கு அயோத்தியில் மசூதி எழுப்ப 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒரே தீர்ப்பை வழங்கியது.

வழக்கமாக, அரசியல் சாசன அமர்வில் இடம் பெறும் நீதிபதிகளிடையே வெவ்வேறு தீர்ப்புகள் வரும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நீதிபதிகள் கலந்து ஆலோசித்து ஒரே தீர்ப்பை வழங்கினார்கள்.

நூற்றாண்டுகளாக நீடித்து வந்த, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, உடன் அமர்வில் இருந்த எஸ்.ஏ.பாப்டே, அசோக்பூஷண், டி.ஒய். சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர் ஆகிய 4 நீதிபதிகளுடன் நேற்று இரவு விருந்துக்குச் சென்றார்.

டெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் நட்சத்திர ஹோட்டலில் தலைமை நீதிபதி கோகோய் 4 நீதிபதிகளுடன் விருந்து சாப்பிட்டார். தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை, தீர்ப்பு எழுதியது உள்ளிட்ட நெருக்கடியான, அழுத்தமான சூழலில் இருந்து விடுபட்டு இந்த விருந்தில் நீதிபதிகள் பங்கேற்றனர்.

அதிக நாள் விசாரிக்கப்பட்ட வழக்கு

கடந்த 1970-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், எதனீர் மடத்தின் சொத்துகளை முடக்க 2 நிலச் சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கேரள அரசுக்கு எதிராக எதனீர் மடத்தின் பீடாதிபதி கேசவானந்த பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து கேசவானந்த பாரதிக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இவ் வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்பட்டு, 68 நாட்கள் வரை விசாரணை நீடித்தது. இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தில் அதிக நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்கு என்ற பெருமையை கேசவானந்த பாரதி வழக்கு பெற்றது. இதன்பின் ஆதார் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஆண்டில் 38 நாட்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. இதன்மூலம் கேசவானந்த பாரதி வழக்குக்குப் பிறகு அதிக நாட்கள் விசாரிக்கப்பட்ட 2-வது வழக்கு என்ற பெருமையை ஆதார் வழக்கு பெற்றது.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டது. நாற்பது நாட்கள் நடைபெற்ற தொடர் விசாரணை கடந்த 16-ம் தேதி நிறைவடைந்தது. இதன்மூலம் உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் விசாரிக்கப்பட்ட 2-வது வழக்கு என்ற பெருமையை அயோத்தி வழக்கு பெற்றுள்ளது. ஆதார் வழக்கு 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு முன்பே காலமான முதல் எதிரெதிர் மனுதாரர்கள்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மூல வழக்கைத் தொடர்ந்த இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு பெரியவர்கள் இருவருமே, இவ்வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே காலமாகியுள்ளனர்.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் முதன்முறையாக இந்து மற்றும் முஸ்லிம் தரப்பில் வழக்குத் தொடுத்த இருவருமே தற்போது காலமாகி விட்டனர். வழக்கில் கிடைத்த தீர்ப்பைத்தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை.

நிர்மோகி அகாடா அமைப்பின் தலைவராக இருந்தவர் மஹந்த் பாஸ்கர் தாஸ், கடந்த 1959-ம் ஆண்டு பாபர் மசூதிக்கு எதிராக பைசாபாத் நீதிமன்றத்தில் முதலில் வழக்குத் தொடுத்தார். இதுபோல முஸ்லிம் தரப்பில் ஹசிம் அன்சாரி முதலில் வழக்குத் தொடுத்தார்.

முதன்மை மனுதாரரான மஹந்த் பாஸ்கர் தாஸ் 89-வது வயதில் கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். பக்கவாத நோய் ஏற்பட்ட அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், பாஸ்கர் தாஸ் அயோத்தியை விட்டு வேறு ஊருக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபோலவே முஸ்லிம் தரப்பு முதன்மை மனுதாரரான ஹசிம் அன்சாரி, தனது 96-வது வயதில் 2016-ம் ஆண்டு உயிரிழந்தார். அயோத்தி பிரச்சினையில் எதிரெதிர் மனுதாரர்களாக இருந்தபோதிலும், இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் சுமுகமான உறவு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பளித்த நீதிபதிகள்..

நீண்டகாலமாக நடந்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகள் குறித்த விவரம் வருமாறு:

ரஞ்சன் கோகோய்

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ரஞ்சன் கோகோய், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். உச்ச நீதிமன்ற நீதிபதியான பிறகு, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பத்திரிகையாளர் கூட்டத்தை சில நீதிபதிகளுடன் சேர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சன் கோகோய் நடத்தினார். சுதந்திர இந்தியாவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக சக நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தது அதுவே முதன்முறையாகும்.

டி.ஒய். சந்திரசூட்

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரான டி.ஒய். சந்திரசூட், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற டி.ஒய். சந்திரசூட், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒய்.வி. சந்திரசூடின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். அப்துல் நசீர்

கர்நாடகாவைச் சேர்ந்தவரான எஸ். அப்துல் நசீர், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்தவர் ஆவார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றார். தனிநபர் (பிரைவசி) காப்பதை அடிப்படை உரிமை என2017-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வில் அப்துல் நசீரும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ. பாப்டே

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான எஸ்.ஏ. பாப்டே, நாக்பூர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1978-ல் பார் கவுன்சிலில் இணைந்த அவர், மும்பை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் 21 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த அவர், 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரது பொறுப்பை எஸ்.ஏ. பாப்டே ஏற்கவுள்ளார்.

அசோக் பூஷண்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அசோக் பூஷண், அலகாபாத் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த அவர், பிற்காலத்தில் அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக உயர்ந்தார். இதனைத் தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016-இல் பதவியேற்றார். ஆதாருக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து உள்ளது என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் அசோக் பூஷணும் இடம்பெற்றார்.

மூன்று பிரதமர்கள் முயற்சி..

அயோத்தி நிலப் பிரச்சினையில் சமரசம் செய்ய வி.பி.சிங், நரசிம்மராவ் மற்றும் வாஜ்பாய் ஆகிய மூன்று முன்னாள் பிரதமர்கள் முயற்சி செய்தனர். ஆனாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பின் சார்பில் அகழ்வராய்ச்சி நடந்தது. இதுபோல பல்வேறு காரணங்களால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தாமதமானது.

நீதிபதிகள் எஸ்.யூ.கான், டிவி.சர்மா மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், செப்டம்பர் 24, 2010-ல் தீர்ப்பு வெளியாகும் என ஒரு வழியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரமேஷ் சந்திரா திரிபாதி உட்பட 9 பேர், தீர்ப்பை ஒத்தி வைக்கக் கோரி செப்டம்பர் 13, 2010-ல் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி, திரிபாதிக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததுடன் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக திரிபாதி கூறிவந்த நிலையில், உயர் நீதிமன்றம் செப்டம்பர் 30, 2010-ல் தீர்ப்பை வெளியிட்டது.

இத்துடன், பைஸாபாத் சிவில் நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சில உத்தரவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று சிலர் அவ்வப்போது தடை உத்தரவுகளை பெற்று வந்ததும் வழக்கு தாமதத்துக்கு காரணமாக அமைந்தது.

இதனிடையே, அயோத்தி குறித்து 1994-ம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டிருந்தது. அதில், “வழக்கின் தீர்ப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதை பாதிக்கலாம். இதனால், நாட்டில் பதற்றம் ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்காக 1994-ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், இதில் ஒரு மதத்தினரின் வெற்றியை மற்ற மதத்தினரின் தோல்வியாக கருதக் கூடாது” என கருத்து கூறியது. அயோத்தி நிலப் பிரச்சினையில் சமரசம் செய்ய வி.பி.சிங், நரசிம்மராவ் மற்றும் வாஜ்பாய் ஆகிய மூன்று முன்னாள் பிரதமர்கள் முயற்சி செய்தனர். ஆனாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இவர்களில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, காஞ்சி காமகோடி மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியின் உதவியை நாடினார். இதன்படி நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x