Published : 07 Nov 2019 07:07 am

Updated : 07 Nov 2019 07:07 am

 

Published : 07 Nov 2019 07:07 AM
Last Updated : 07 Nov 2019 07:07 AM

தமிழரவம்

tamilaravam

டி.தருமராஜ்

புதுமைப்பித்தன் கேலி பேசிய ‘தமிழ்க் குரங்கு’ போல இது என்ன ‘தமிழ் அரவம்’ என்று பயப்பட வேண்டாம். அரவம், உண்மையாய்ச் சொல்லுகிறேன், ரொம்ப நல்ல வார்த்தை. ‘அரவம் நல்லது’ என்றுகூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அரவம் என்றால் பாம்பு; அரவம் என்றால் ஆரவாரம் (அரவம் ஜாஸ்தியா இருக்கே!); அரவம் என்றால் மெல்லிய ஓசை என்றும் பொருள் (வந்துபோன அரவமே இல்லை); பேச்சுவழக்கில் அரவம், அருவமாகியும் விடுகிறது (அருவமில்லாம வந்துட்டுப்போயிட்டான்!); சம்ஸ்கிருதத்தில் அரவம் என்றால் ஓசையின்மை என்று அர்த்தம். எல்லாவற்றுக்கும் மேலே, அரவம் என்றால் தமிழர் என்றும் பொருள்.

தமிழ்ச் சமூகத்தின் ‘வெகுஜன’ அடையாளங்களை, மக்கள்தொகையில் அதிகமான உழவர்களே தீர்மானிக்கிறார்கள். உழவர்களின் அச்சமே ஒட்டுமொத்த சமூகத்தின் அச்சமாக உருமாற்றப்பட்டிருக்கிறது. அவர்களின் நம்பிக்கைகளே ஒட்டுமொத்த சமூகத்தின் நம்பிக்கையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அவர்களின் சடங்குகளே, வெகுஜன சடங்குகளாகக் கருதப்படுகின்றன.

சேகரித்தலும் வேட்டையாடுதலும் என்ற உணவு உற்பத்தி முறைக்குப் பின் மனித சமூகம் கண்டடைந்த வேளாண்மை என்ற உற்பத்தி முறையின் கவர்ச்சி ஒட்டுமொத்த சமூகச் சித்திரத்தையும் மாற்றி அமைத்தது என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். பழங்குடியின வாழ்க்கை முறையிலிருந்து நகர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கால்நடை பராமரிப்புக்கு வந்து, பின்னொரு பெரும் எழுச்சியாக, முற்றிலும் மாறுபட்ட கிராம வாழ்க்கையை எட்டிய தருணத்தைவிடவும் சிறந்த ‘நவீனத் தருணம்’ ஒன்றைத் தமிழ்ச் சமூகம் அனுபவித்திருக்கவில்லை. சமவெளியை (இங்கே ‘கட்டாந்தரை’ என்று வாசிக்க வேண்டும்) வாழிடமாகக் கொள்ள முடியும் என்ற யோசனை பழங்குடிகளுக்கும், கானகவாசிகளுக்கும் எத்தனை தூரம் குதர்க்கமாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிந்தால் நான் சொல்வதை விளங்கிக்கொள்ள முடியும்.

பச்ச மண்ணு - வெந்த மண்ணு

ஒருமுறை, அகத்தியர் மலை பழங்குடிப் பெரியவர் சங்கரன் காணியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இந்த விஷயத்தை இப்படிச் சொன்னார்: ‘மண்ணுல ரெண்டு வகை இருக்கு - பச்ச மண்ணு, வெந்த மண்ணு! நம்ம அகத்திய மலை பச்ச மண்ணு; மலையை விட்டு இறங்கியாச்சுன்னா வெந்த மண்ணுதான் கிடைக்கும். பச்ச மண்ணுல கரையான் இருக்காது. அதே மாதிரி வாதைகளும் கிடையாது. அகத்திய மலை முழுக்கவே தெய்வங்கள்தான்.’

வாழத் தகுதியற்றது என்று பழங்குடியினம் புறந்தள்ளிய நிலப்பரப்பை உருமாற்றியதுதான் வேளாண் சமூகத்தின் ஆகப்பெரிய புரட்சி. நீரையும் நிலத்தையும் ஒருசேரப் பிசைய உணவு உற்பத்தியாகும் என்ற யோசனை ஆரம்ப காலங்களில் மாயமந்திரம்போலவே பார்க்கப்பட்டிருக்கிறது. ‘…

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு/ உடம்பும் உயிரும் படைத்திசினோரே…’ (புறநானூறு - 18: 22, 23-வது வரிகள்). அதேபோல, பழங்குடியின வாழ்க்கையில் கேள்வியேபட்டிராத வகைக்கு, வைகறையிலும் விடியலிலும் உழைக்கச் செல்லும் உழவர்களைப் பார்த்து தொல்காப்பியத்திலிருந்து சங்க இலக்கியம் வரைக்கும் அத்தனை பேரும் வியந்து வியந்து பேசுகிறார்கள் (நற்றிணை 60-வது பாடல்). இதன் விளைவாகவே, திருக்குறள் ஒருபடி மேலே சென்று, ‘ஏர் பின்னது உலகம்’ (குறள் - 1031) என்றும் அறிவிக்கிறது.

வரலாற்றுப் பதிவுகளும் சரி, இலக்கியப் பதிவுகளும் சரி, தமிழ்ச் சமூகத்தை வேளாண்மை எவ்வாறு ஒருமுகப்படுத்தியது என்பதையே நமக்குத் திரும்பத் திரும்பச் சுட்டிக்கொண்டிருக்கின்றன. புதிய வாழிட நிர்மாணம், புதிய அரசியல் அமைப்பின் வருகை, புதிய உணவுப் பழக்கவழக்கம், புதிய சமூக உறவுகள், புதிய நம்பிக்கைகள், புதிய விழுமியங்கள் என்று வரிசைகட்டி வந்ததைப் போலவே, புதிய உளச்சிக்கல்களும் பொதுமைப்படுத்தப்பட்டன. விவசாயத்துக்காகக் காளைகளோடு புழங்க நேர்ந்த உழவர்களின் மனச்சித்திரங்களும், அதனிலிருந்து தோற்றம் பெற்ற சடங்குமுறைகளும், விலக்குகளும், குறியீடுகளும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளாக நிலைப்படுத்தப்படுகின்றன.

காலிக் குறிப்பான்கள்

காளைகளோடோ அல்லது பசுக்களோடோ நேரடியாக எந்தவிதத் தொடர்பும் இல்லாத நபர்களும், காளை குறித்த சமூக உளவியக்கத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், ‘தமிழர்’ என்று ஒன்றிணையக்கூடிய வாய்ப்பை ‘ஏறு’ என்ற காலிக் குறிப்பான் (Ernesto Laclav பயன்படுத்தும் ‘Empty Signifier’ என்ற கருத்தாக்கத்தை நான் இப்படி மொழிபெயர்த்துக்கொள்கிறேன்.) வழங்கிவிடுகிறது. பாம்பின் நடமாட்டத்தையும், பிசாசின் நடமாட்டத்தையும் கிளர்ச்சியோடு பேசத் தொடங்குவதுபோலவே ஏறு தழுவுதலையும் கிளர்ச்சியோடு அணுகுதல் தமிழ்த் தன்மையாக உருவகிக்கப்படுகிறது.

காலிக் குறிப்பான்கள், நிகழ்வுகளின் மூலமே தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன. தன்னளவில் அவற்றுக்கு எந்த இருப்பும் இல்லை. அவை, அரவம்போலவோ பேய்போலவோ ஜல்லிக்கட்டுக் காளைபோலவோ கட்புலன்களுக்குப் புலப்படாமல் இருக்கின்றன. நிகழ்வுகளின்போது அவற்றுக்கு எவ்வாறு பொருண்மை இல்லையோ, அதுபோலவே பிற சமயங்களில் அவற்றுக்குப் பருண்மையும் இல்லை.

அவற்றுக்குப் பெயர் இல்லை. அப்படி ஏதாவது இருந்தாலும் அப்பெயர்களை உச்சரிப்பது விலக்கப்பட்டிருக்கிறது. இதையே லாக்லவ், காலிக் குறிப்பான்கள் விலக்கின் மூலமே வெளிப்படுகின்றன என்கிறார். அரவமும் பேயும் எவ்வாறு தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைக்கின்றன என்பதை விளக்குவதற்கு வண்ணதாசனைத் துணைக்கு அழைக்கப்போகிறேன்.

வண்ணதாசனின் முகநூல் பதிவு

எல்லாப் பெட்டிக்கடைகளிலும் வாழைப்பழத் தார் தொங்கிக்கொண்டு இருக்கும். எங்கள் பக்கத்தில் அதிகம் தொங்குகிற தார் ‘மொந்தாம் பழம்’ என்று சொல்லப்படும் மொந்தன் பழம் அல்லது நாட்டுப் பழம். மோரிஸ் என்கிற பச்சை நாடான், கோழிக்கோடு என்கிற ரஸ்தாளி, செவ்வாழை எல்லாம் பிற்பாடு வந்தவை.
கடையில் இருந்தவருக்கு ‘என்னை எங்கேயோ பார்த்திருப்பதுபோல’ இருந்திருக்கிறது.

கொஞ்சம் கரிசனத்தோடு பார்த்தால், எல்லா முகங்களுமே அப்படி ஏற்கெனவே பார்த்ததாகவே தோன்றும். ‘எங்கே இருக்கியோ?’ என்று கேட்டார். ‘அந்தக் கல்வெட்டாங்குழிப் பக்கம் தெற்கே பார்த்த மூணு வீடுகளில் ஒன்று’ என்றேன். ‘இந்த சர்ச்சுக்குத்தான் வருவீர்களா?’ என்றார். பதில் சொன்னேன். ‘இதுக்கு முந்தி பாளையங்கோட்டையிலே இருந்தேளோ?’ என்பதற்கு, ‘இல்லை. எனக்கு டவுண். மேல ரதவீதி சுடலமாடன் கோயில் தெரு. சந்திப் பிள்ளையார் முக்குப் பக்கம்’ என்று விவரம் சொன்னேன்.

அவருக்கு விடை கண்டுபிடித்துவிட்ட சந்தோஷ முகம். இதுவரை தோலுக்கு அடியில் இருந்த சிரிப்பு மேலே வந்து, ஒட்டின கன்னத்தில் படர்ந்துவிட்டது. கண்களின் ஓரத்தில் சதை திரண்டு இடுங்கிப் பார்வையில் ஈரப்பூச்சு மினுங்கியது. ‘சரிதான். நான் டி.ப்பி.ட்டியிலே கண்டக்டரா ஓடிக்கிட்டு இருந்தேன்’ என்று சிரித்தார். சற்று உட்புறமாகச் சரிந்திருந்த புகையடித்த பற்கள்.

தனபேரின்பம் டிராவல்ஸ் என்று எனக்குள் இருந்த பெயரை அவர் டி.ப்பி.ட்டி என்று உச்சரித்த விதத்தில் அவர் எனக்கும் தெரிந்தவர் ஆகிவிட்டார். அவரை நான் பார்த்ததே இல்லை. அவரும் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ‘இங்கே குடிவந்து எத்தனை வருஷம் இருக்கும்?’ என்றார். இதற்குள் பழங்களுக்குரிய தொகையைக் கொடுத்திருந்தேன். ‘இருவது ரூவாதான் போட்டிருக்கேன்’ என்ற சலுகையுடன், இந்தக் கேள்வி அவரிடம்.

‘பத்துப் பதினஞ்சு வருஷம் இருக்கும்’ என்று என் பைக் பக்கம் வர, அவரும் சற்று நகர்ந்து வெளியே வருகிறார். உள்ளே நிழலில் இருந்து வியாபாரப் பேச்சுக்கொடுத்தபோது இருந்ததைவிட, வெயிலில் ஒல்லியாகவும் தளர்ந்தவராகவும் தெரிகிறார்.

‘கல்வெட்டாங்குழிப் பக்கம் வீடுன்னுதானே சொன்னிய?’ முகம் இளகி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் மட்டும் கொம்பு மாதிரி இரண்டு பள்ளம். ‘ஆமா’ நான் அந்தப் பள்ளங்களிலிருந்து அவரை வெளியேற்றிக்கொண்டு இருந்தேன். ‘இப்போ அங்கே பூச்சி நடமாட்டம் இருக்கா?’ என்றார். அவர் சொல்லியது நெளிந்து என்னைத் தாண்டிச் செல்வதற்குள், அவரே, ’முன்னால எல்லாம் அந்தப் பக்கம் அது ஜாஸ்தி’ என்றார்.

அவர் ஏதோ ஒரு புதிய திசையை எனக்கும் அவருக்கும் இடையில் உண்டாக்கியிருந்தார். அதில் ‘பூச்சிகள்’ சதா ஊர்ந்து நெளிந்துபோனபடி இருந்தன. என் பாதையின் குறுக்கே எந்த அவசரமும் இன்றிப்போகிற ஒரு வால் சுழிப்பின் பளபளப்புத் தென்பட்டது. ‘முன்ன மாதிரி இல்ல. இப்ப ஒண்ணும் கண்ணுல தட்டுப்படக் காணும். கீரிப்பிள்ளை நடமாட்டம் எப்பமாவது இருக்கு’ – இப்படிச் சொல்லும்போது, எனக்கும் வேறு வேறு நினைவுகள் வராமல் இல்லை.

ஒரு வெள்ளிக்கிழமை வாசலுக்குள் ஏறிவந்த ஒன்று, எந்தப் புடைக்குள் போய் ஒளிந்தது என்று இன்றுவரை தெரியாது. பைக் முன் சக்கரத்துக்குள் ஒன்று நசுங்காமல் தப்பித்திருக்கிறது. பக்கத்து வீடு கட்டுமானம் நடக்கும்போது மணல் அம்பாரத்தில் படுத்திருந்த கருப்பு நாய் விடாமல் ‘குலைத்து’ விரைப்பாக எச்சரிக்கை செய்ய, மழைத் தண்ணீர்போல தன்போக்கில் ஒன்று அதன் வலசையில் போய்க்கொண்டிருந்தது.

அவர் இன்னும் அதே திசையில்தான் பார்த்துக்கொண்டு இருந்தார். கை தன் தடவலை நிறுத்தி பைக் சீட்டின் மத்தியில் அப்படியே படர்ந்திருந்தது. ‘சொல்லி வச்சது மாதிரி, டாண்ணு விடியக்காலம் வடக்கே இருந்து தெக்கே போகும். அதே மாதிரி சாயுங்காலம் டாண்ணு தெக்கே இருந்து வடக்கே திரும்பி வரும். மாயம் மாதிரி இருக்கும். ஒண்ணும் செய்ய ஓடாது. கன்னத்துல போட்டுக்கிட்டுக் கும்பிடுகிறதோடு சரி’ – அவர் குறுக்குக் கை போட்டு இரண்டு கன்னங்களிலும் போட்டுக்கொண்டார்.

‘பால் காய்ச்சி வந்த புதுசுல நாங்களும் பார்த்திருக்கோம்’ - நான் அவரிடம் சொன்னபோது, அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘நல்லா இம்புட்டு நீளம், இரு பாகம் சைஸுக்கு இருக்கும்’ - அவர் இரண்டு கைகளையும் அகலமாக விரித்திருந்தார். ‘ஆமா. பார்த்திருக்கேன்’ என்றேன். ‘அப்படியா. சார்வாளும் பார்த்திருக்கேளா?’ கண்ணெதிரே அது மீண்டும் தெரிவதுபோல நான் தலையை மட்டும் அசைத்தேன்.

அவர் வேறு ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்போ சரியாப்போச்சா?’ என்றார். ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே, இருக்கேன்னு அதான் முதல்ல இருந்தே தோணிக்கிட்டு இருந்தது’ என்று பைக்கின் மேல் வைத்திருந்த கையை எடுத்து விலகிக்கொண்டார். தமிழ்ச் சூழலில் அந்நியரல்லாத இரண்டு புதியவர்கள் தங்களுக்குள் பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கும், எப்படி முயல்கிறார்கள் என்பதற்கும், பழக்கம் எப்படி நிகழ்கிறது என்பதற்குமான உதாரணமாக இதைக் கொள்ளலாம்.

பூர்வ ஜென்ம பந்தம்

பழக்கடைக்காரர், கதைசொல்லியைப் பார்த்ததுமே ஒரு வினோத உணர்வால் தாக்கப்படுகிறார். ‘இன்றைக்குத்தான் முதன்முதலாகப் பார்க்கிற இந்த ஆளை, நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்’. இதற்கு, பாரம்பரிய அறிவியல் ‘பூர்வ ஜென்ம பந்தம்’ என்ற பதிலைச் சொல்கிறது. காவியங்களில் பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது.

பழக்கடைக்காரர்போலவே திகைக்கிற நபர்களிடம், ‘முந்தைய ஜென்மத்தில் பழகிய பழக்கம், இந்த ஜென்மத்தில் மிச்சசொச்சமாகத் தொடர்கிறது’ என்றுதான் காப்பியங்கள் கதை கட்டுகின்றன. இப்படிச் சொல்வதன் மூலம், அந்த வினோத உணர்வைக் கொன்றும் தின்றுவிடுகின்றன. இதேபோல, ‘பூர்வ ஜென்மக் கதை’களின் நலிந்த வடிவம் ஒன்றும் நம்மிடம் இருக்கிறது.

அந்த இரண்டு பேரின் மூதாதையரை விசாரித்து, அக்குடும்பங்களுக்கு இடையே ஏதாவது ஒரு பந்தத்தை உருவாக்க முடிந்தால், அதுதான் அந்த நலிந்த வடிவம். அதன் பின், ‘ஓ… இன்னார் பேரனா? அதானே பாக்கேன்... சரிதானே!’ என்று அசுவாரஸ்யமாக அந்த வினோத உணர்வைக் கடந்துசென்றுவிட முடிகிறது. இங்கே அப்படி நடக்கவில்லை. புராணியத்தின் மூலமோ அல்லது வரலாற்றின் மூலமோ அதை அவர் சிதைக்க விரும்பவில்லை. இதனால், அவ்வினோத உணர்வைப் பின்தொடரும் சாகசத்தை அவர் தனியாகவே ஆரம்பிக்கிறார்.

கதைசொல்லிக்கோ இந்த சுவாரஸ்யம் முதலில் பிடிபடவில்லை. அவர் பழுத்த வாழைப்பழம் வாங்க மட்டுமே வந்தவர். வியாபாரத்தையும் கடந்து ஒரு பரிச்சய உணர்வு அங்கே தொழிற்படுகிறது என்று தெரிந்தாலும்கூட, ‘கரிசனத்தோடு யார் ஒருவரைப் பார்த்தாலும் அந்த முகம் தெரிந்த முகமாகிவிடும்’ என்ற பிரபஞ்ச விதி அவரிடம் இருப்பதால், அவர் நிறைய பதில்களோடு காணப்படுகிறார்.

தமிழில் நவீனக் கலைஞர்கள் பெரும்பாலும் இப்படித்தான் - வினோதத்தை முதல் பார்வையில் தவறவிடுகிறார்கள். தனியன்களை விடவும் அவர்களுக்குப் பொதுமைகள்தான் நிஜமானவை. உண்மையில், அந்த வினோதப் பிரச்சினை பழக்கடைக்காரருடையது. அதைக் கடக்கும் சாகசப் பயணத்தில் அவர் கதைசொல்லியையும் வழித்துணைக்கு அழைத்துக்கொள்கிறார், அவ்வளவுதான். ஏனெனில், வினோத சாகசம் கூட்டாகச் செய்ய வேண்டிய பயணம்.
இதுவொரு முரண்.

ஆன்மீகத் தேடலில் உலகப் பொதுவான விடைகளைத் தன்னந்தனியே அடைந்துவிட முடிகிறது. ஆனால், தனிப்பட்ட விடைகளைக் கண்டடைய மட்டும் துணையாள் தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் இரண்டு பேராகவே அதைச் செய்ய முடியும் என்கிறார்கள். பழக்கடைக்காரர் தனது விடையையே தேடுகிறார்; ஆனால், அதைக் கதைசொல்லியின் துணையின்றி அவரால் செய்ய முடிவதில்லை. பொதுமைகளைத் தனியாகவும், தனிமைகளைப் பொதுவாகவுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

புதியவர்களை இணைக்கும் கண்ணி

இரண்டு புதியவர்கள் அவர்களை இணைக்கக்கூடிய கண்ணியொன்றைத் தேடத் தொடங்குகிறார்கள். அந்தக் கண்ணி, நிலவியல் சார்ந்ததாக இருக்க முடியுமா என்பதுதான் அவர்களது முதல் கேள்வியாக இருக்கிறது. கல்வெட்டாங்குழி, பாளையங்கோட்டை, சந்திப் பிள்ளையார் முக்குப் பக்கம் என்று அவ்விருவருக்கும் பொதுவான இடங்களைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்.

இதில், சந்திப் பிள்ளையார் முக்குப் பக்கம் என்பது ஒரு சாத்தியத்தை வழங்குகிறது. அந்த வெளியில் இரண்டு பேரும் வெவ்வேறு காரணங்களுக்காகப் புழங்கியிருக்கிறார்கள் - கதைசொல்லியின் வாழிடம் அது. பழக்கடைக்காரர் தொழில் நிமித்தம் அங்கே வளையவந்திருக்கிறார். ஆனால், நிலவெளி அத்தனை வலுவான காரணியாகவும் அவர்களுக்குத் தோன்றவில்லை.

பழக்கடைக்காரரை அந்தக் காரணம் திருப்திப்படுத்தவில்லை. கதைசொல்லிக்கும் அதில் உடன்பாடில்லை. பெளதீக வெளி ஆட்களை ஓரிடத்தில் சேர்க்கிறது. ஆனால், பிணைப்பதில்லை. பழக்கடைக்காரர் தன் மனதில் வைத்து உதப்பிக்கொண்டிருக்கிற ‘தெரிஞ்ச முகமா இருக்கே!’ என்ற வினோத உணர்வுக்கு இது அல்ல பதில்.

பழக்கடைக்காரர் இப்போது பாம்புகளின் நடமாட்டத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார். அதுவரை முகதாட்சண்யத்துக்காகப் பேசிக்கொண்டிருந்த கதைசொல்லி, இப்போது முழு மூச்சாய் அவ்வுரையாடலில் பங்கேற்கத் தொடங்குகிறார்.

ஏனெனில், பாம்புகள் பற்றிச் சொல்வதற்கு அவரிடமும் ஏராளமான அனுபவங்கள் உள்ளன. இப்போது, பழக்கடைக்காரர் ஒரு குறிப்பிட்ட பாம்பைப் பற்றியும், அதன் நடமாட்டத்தைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அந்த ‘நடமாட்ட’த்தைக் கதைசொல்லி தானும் கண்டிருப்பதாகச் சொன்னதும் இருவருக்கும் எல்லாமும் விளங்கிவிடுகிறது. அவர்களுக்கிடையிலான இனந்தெரியா பிணைப்பு பிடிபட்டுவிடுகிறது.

ஒரு மாயாஜாலத்தை எந்தவித விளக்கங்களும் இல்லாமல் பார்த்தவுடன் விளங்கிக்கொள்கிற பழக்கடைக்காரரும், அதற்கான காரணகாரியங்களை விளக்கிய பின்பு அதை மாயாஜாலம்தான் என்று ஒத்துக்கொள்கிற கதைசொல்லியும் நிஜமாகவே வேறுவேறு சிந்தனைப் போக்கை உடையவர்கள். பேச்சையும் எழுத்தையும்போல. இடுகுறித்தன்மையையும் காரண காரியங்களையும்போல.

நேரில் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை; பழகியிருக்க வேண்டிய அவசியமில்லை; தொன்மத் தொடர்போ, வரலாற்றுத் தொடர்போகூடத் தேவையிருக்கவில்லை. ஒருவர் இன்னொருவரை அறிந்திருப்பதற்கு, இரண்டு பேருக்கும் பொதுவான ஒரு நிகழ்வு போதுமாக இருக்கிறது. அந்த நிகழ்வைக்கூட அவர்கள் ஒரே சமயத்தில் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களை இணைப்பது, பாம்பு குறித்த நிகழ்வும் அதையொட்டி அவர்கள் அடைந்த கிளர்ச்சியுமே. சொல்லப்போனால், அவர்கள் இருவரும் பரிமாறிக்கொண்டது ஒரே மாதிரியான கிளர்ச்சியை மட்டுமே.

தமிழரைக் கரைக்கும் பரிச்சய உணர்வு

தமிழ்ச் சூழலில் அரவம் ஏற்படுத்தும் இத்தகைய கொந்தளிப்பு ஜனரஞ்சகத் தன்மை கொண்டது. அந்தப் பழக்கடைக்காரரும் கதைசொல்லியும் மட்டுமல்ல, அப்படியான சூழலில் எந்தவொரு தமிழரும்கூட அந்தப் பரிச்சய உணர்வில் கரைந்துபோயிருக்க முடியும். நாக நடமாட்டம் குறித்த எந்தவொரு பேச்சும் தமிழர்களை இணைக்கக்கூடிய வல்லமை கொண்டது. இதேபோன்ற பரிச்சய உணர்வை பேய்களைப் பற்றிய பேச்சும் ஏற்படுத்திவிடுகிறது. பாம்பு நடமாட்டம் என்று சொல்வதைப் போலவே பேயையும் நடமாட்டம் என்றே நாட்டுப்புறப் பேச்சில் சொல்லிவருகிறார்கள்.

வண்ணதாசனின் அந்தக் கதையிலிருந்து மிக முக்கியமான சில விஷயங்களை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். தமிழ்ச் சமூகத்தின் சகோதர உணர்வென்பது மொழியால் நடைபெறுகிறது என்று மேம்போக்காய்ச் சொல்லப்பட்டாலும், அதன் அடியாழத்தில் ஒரே மாதிரியான கிளர்ச்சிகளை/ கொந்தளிப்புகளைப் பகிர்ந்துகொள்வதே தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பேயின் நடமாட்டம், பாம்பின் நடமாட்டம் போன்றவை இத்தகைய தமிழ்க் கொந்தளிப்புகளை வழங்கக்கூடியவை. எல்லாப் பண்பாடுகளும், மொழி என்ற எல்லையைக் கடந்து இதுபோன்ற மனக் கிளர்ச்சிகளையே தங்களது இணைப்புப் புள்ளிகளாகக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கொந்தளிப்பான மனநிலையே பண்பாட்டின் சாராம்சமாகவும் செயல்படுகிறது. ‘சமூகவயமாதல்’ என்ற பெயரில் பண்பாட்டின் ஒவ்வொரு அங்கத்தினரும் இத்தகைய கொந்தளிப்புகளையே பழகிக்கொள்கிறார்கள்; பகிர்ந்துகொள்கிறார்கள். இத்தகைய கொந்தளிப்புகள் எந்தவொரு ஸ்தூலமான பொருளிலிருந்தும் பெறப்படுவது இல்லை. அதாவது, பாம்போ அல்லது பேயோ இந்தக் கொந்தளிப்புகளை உருவாக்குவது இல்லை. அவற்றின் ‘நடமாட்டமே’ கொந்தளிப்பின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.

பாம்பும் பேயும் உலகப் பொதுவான விஷயங்கள். ஆனால், அவற்றை ‘நடமாட்டம்’ என்று விளக்குவது தமிழ்த்தன்மை. பாம்பையும் பேயையும் நடமாட்டம் என்று சொல்லச் சொல்வதுபோலவே, அதனதன் பெயர் சொல்லி அழைப்பதை நாட்டுப்புறப் பேச்சு விலக்கி வைத்திருக்கிறது. அதனால் பூச்சி என்று பாம்பை அழைப்பதையும், கருப்பு என்று பேயை அழைப்பதையும் நீங்கள் கவனித்திருக்க முடியும். பூச்சி நமக்குப் பொட்டு, காத்து ஒரு கருப்பு!

- டி.தருமராஜ், காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்,
‘நான் ஏன் தலித்தும் அல்ல?’
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.தொடர்புக்கு: dharmarajant@yahoo.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தமிழரவம்புதுமைப்பித்தன்தமிழ்க் குரங்குதமிழ் அரவம்பச்ச மண்ணுவெந்த மண்ணுகாலிக் குறிப்பான்கள்வண்ணதாசன்முகநூல் பதிவுபூர்வ ஜென்ம பந்தம்இணைக்கும் கண்ணிபரிச்சய உணர்வு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author