

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்திருத்தத் தலைவர்களில் ஒருவரும் 1980 முதல் 1989 வரையில் பிரதமராக இருந்தவருமான ஷாவோ சியாங், இறந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தலைநகர் பெய்ஜிங்கில் காவல் துறை மரியாதைகளுடன் இரண்டு வாரங்களுக்கு முன் புதைக்கப்பட்டார். 1989-ல் தியானென்மென் சதுக்கத்தில் கூடிய மாணவர்கள் உள்ளிட்ட ஜனநாயக ஆதரவாளர்களை சீன ராணுவம் டாங்குகளை ஏற்றிக் கொன்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவித்தன.
அந்தச் செயலைக் கண்டித்ததற்காக பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஷாவோ, அவருடைய வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். 2005-ல் அவர் இறந்தார். உடல் பதனம் செய்யப்பட்டு, வீட்டிலேயே வைக்கப்பட்டது. அவர் பிறந்த நூறாவது ஆண்டில் உடலை அடக்கம் செய்துள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான டெங் ஜியோ பிங், இவருடைய துடிப்பான செயல்பாட்டைக் கண்டு பிரதமராக்கினார். சீனப் பொருளாதாரத்தில் தனியாருக்கு அனுமதி வழங்கினார். விலை - சப்ளைகள் மீதிருந்த கட்டுப்பாடுகளை நீக்கினார். அந்நிய முதலீடுகளை வரவேற்றார். மக்களுடைய ஜனநாயகக் கிளர்ச்சியைக் கடைசியில் ஆதரித்ததுதான் அவருக்கு ஆபத்தாய் முடிந்தது.
தேவையா வாஷிங் மெஷின்?
இந்தியாவில் நாளுக்கு நாள் வீடுகளில் துணி துவைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவது அதிகரிக்கிறது. துணிகளைத் துவைப்பதுடன் காயவைத்துத் தரும் இயந்திரங்களும் இருக்கின்றன. ஆனால், இவை சூழலை எவ்வளவு நாசப்படுத்துகின்றன என்பதை யாரும் யோசிப்பதில்லை. கையால் துவைக்கச் செலவாகும் தண்ணீரைக் காட்டிலும் பல மடங்கு கூடுதல் தண்ணீரை உறிஞ்சும் இவை மின்சாரத்தையும் குடிக்கின்றன. கூடுதல் வசதிகள் மேலும் சூழலுக்கு எதிரி ஆக்குகின்றன.
அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். வெப்பக் காற்றின் மூலம் துணிகளைக் காயவைக்கும் இயந்திரங்கள், துணி துவைக்கும்போது எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தைப் போல ஐந்து மடங்கு மின்சாரத்தை எடுத்துக்கொள்வதை இந்த ஆய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கையால் துணி துவைப்பது துணிகளின் ஆயுளையும் கூட்டக்கூடியது என்பது இன்னொரு கூடுதல் பலன்.
7 ஆண்டுகளில் 4 தேசிய விருதுகள்: லிபிகா சிங் தராய் சாதனை
ஒடிஷாவின் ஹோ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த லிபிகா சிங் தராய், கடந்த 7 ஆண்டுகளில் 4 தேதிய திரைப்பட விருதுகளைப் பெற்றிருக்கிறார். இதில் மூன்று இயக்கத்துக்காக. ஒன்று ஆடியோகிராஃபிக்காக. தன்னுடைய கிராமத்தில் தொடக்கநிலைப் பள்ளியில் ஒடியாவில் படித்த லிபிகா, புனே திரைப்படக் கல்லூரியில் படித்தார்.
லிபிகாவின் திரைப்படங்கள் அனைத்தும் இயற்கை வனங்களை, ஆறுகளை, அருவிகளைப் பாதுகாக்க வேண்டியது குறித்து வலியுறுத்துபவை. “படம் எடுப்பது என்பது ஒரு விஷயத்தைச் சொல்வதற்குத்தான். உங்களுக்குச் சொல்ல ஒன்றுமே இல்லை என்றால், ஏன் பார்வையாளர்களைக் கஷ்டப்படுத்துகிறீர்கள்?” என்கிறார். சரிதானே!