Published : 05 Nov 2019 08:13 am

Updated : 05 Nov 2019 08:13 am

 

Published : 05 Nov 2019 08:13 AM
Last Updated : 05 Nov 2019 08:13 AM

கனிகிறதா தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை?

devendra-kula-vellalar

கே.கே.மகேஷ்

நாங்குநேரியில் ஒரு அரசியல் திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். “பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தார், வாதிரியார், கடையர் ஆகிய ஏழு சமூகங்களையும் ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி, நாங்குநேரி தொகுதியில் இந்தச் சமூகங்களைச் சேர்ந்த கணிசமானோர் கையில் எடுத்த தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம், இந்த விவகாரத்தை இனியும் கண்டும் காணாது கடக்க முடியாது என்ற சூழலைத் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடையே உருவாக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் அரசியல் முகங்களாக இதுநாள் வரை பொதுச் சமூகத்தில் அறியப்பட்டுவரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கோ, தமிழக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனுக்கோ மேற்கண்ட போராட்டத்தில் பெரிய பங்கு ஏதும் இல்லை என்பதும், புதிய சூழல், புதிய தலைமை ஒன்றுக்கு இந்தப் போராட்டம் வித்திட்டிருக்கிறது என்பதும் இந்த விவகாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒன்றாகும்.

தேர்தல் அறிவிப்பதற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்பே அங்கு தங்கி, இதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளைத் தலைவர் ம.தங்கராஜ். பாஜக தலைவர் அமித் ஷாவை மதுரைக்கே அழைத்துவந்து, ‘பட்டியலின வெளியேற்றம்’ என்ற மதுரை பிரகடனத்தைத் தீர்மானமாக நிறைவேற்றினாரே அதே தங்கராஜ்!

புறக்கணிப்புகளின் எதிரொலி

தேர்தல் புறக்கணிப்புக்கான மனநிலை ஏற்கெனவே அங்கு உருவாக்கப்பட்டுவிட்ட நிலையில்தான், அதிமுக கூட்டணியில் இருப்பதால், இந்தப் பிரச்சினையில் என்ன முடிவெடுப்பது என்று இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்றோரும் கடைசியில் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டார்கள். ஏழு அமைச்சர்கள் வீடு தேடிவந்து ஆதரவு கேட்டும், அவர்களால் அந்த முடிவில் இருந்து பின்வாங்க முடியவில்லை.

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட 68 கிராமங்களிடையே இருந்த ‘பருத்திக்கோட்டை நாட்டார் உறவின்முறை’ எனும் பிணைப்பையே ஏனைய கிராமங்களுக்கும் நீடித்து, தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். வாக்கு கேட்டு வந்த திமுக, அதிமுக வேட்பாளர்களை ஊருக்குள் நுழையவிடாமல் தடுப்பது, ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயல்வோரைக் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பது, தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்களிடையே கூட்டங்கள் நடத்துவது என்று நடந்த வேலைகளின் விளைவு, நாங்குநேரி தேர்தல் முடிவில் எதிரொலித்தது.

பணமும் தீவிரப் பிரச்சாரமும் தூண்டில்போடும் இடைத்தேர்தல்கள் தமிழ்நாட்டில் அதிக வாக்குப் பதிவுக்குப் பேர்போனவை என்பதை விவரிக்க வேண்டியதில்லை. அதிர்ச்சிதரும் வகையில் நாங்குநேரி தொகுதியில் 66% மட்டுமே வாக்கு பதிவாகியிருக்கிறது. இடைத்தேர்தல் நடந்த இன்னொரு தொகுதியான விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு 84% என்பதோடு ஒப்பிட்டால், அதைவிட 18% வாக்குப்பதிவு குறைந்திருப்பதற்குப் பின் நடந்த தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். தொகுதியில், கடம்பங்குளம், அரியகுளம், உன்னங்குளம், பெருமாள்நகர், ஆயர்குளம், எடுப்பல் போன்ற பல கிராமங்களில் வெறுமனே இருபது, முப்பது ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகின. அந்த வாக்குச்சாவடிகளைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 97% புறக்கணிப்பு.

வலுப்படும் கோரிக்கை

பட்டியலினத்தவர் என்ற வகைமையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை இன்றைய தேதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் கணிசமானவர்கள் வலியுறுத்துகின்றனர். “பட்டியலினத்தவர் அல்லது தலித்துகள் என்ற அடையாளத்தின் கீழ் வருவதை நாங்கள் விரும்பவில்லை. இதற்காக அந்தப் பிரிவிலான இடஒதுக்கீட்டையும் அதன் பலன்களையும் இழந்தாலும் பரவாயில்லை.

எங்களைப் பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள்” என்பதே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் குரலாக இருக்கிறது. இவ்வளவு காலமாகப் பட்டியலின வெளியேற்றமானது பள்ளர் சமூகத்தில் வசதியானவர்களின் குரலாக மட்டுமே அதிகம் இருந்தது. இந்த இடைத்தேர்தல் முடிவானது, இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அதேநேரத்தில், அந்த மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்ற குரலையும் கேட்க முடிகிறது.

தமிழக மக்கள்தொகையில், குறிப்பாக தென் மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் விளிம்புநிலையில் இருப்பவர்கள். சுதந்திர இந்தியாவின் எழுபதாண்டு ஆட்சிக் காலத்தில் இந்தச் சமூகத்தினருக்கு என்று சொல்லிக்கொள்ளும்படியான அரசியல் அதிகாரமோ, அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களோ கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டின் தலித் அரசியலும் பெருமளவில் பறையர் சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது. முக்கியமாக, இந்தப் பக்கம் பள்ளர் சமூகத்தினரையும் அவர்களால் உள்ளடக்க முடியவில்லை, அந்தப் பக்கம் அருந்ததியினர் சமூகத்தினரையும் அவர்களால் உள்ளடக்க முடியவில்லை. இந்தச் சூழலில்தான் இத்தகு விஷயங்கள் அவர்களிடம் பரப்பப்படுகின்றன. இடஒதுக்கீட்டின் வழி பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும் பலன் என்ன என்பதையே மறைத்து முன்னெடுக்கப்படும் இத்தகு முயற்சிகள் ஏற்கெனவே விளிம்பில் இருக்கும் மக்களை மேலும் விளிம்பில் தள்ளும் என்ற குரல்களும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒலிக்கின்றன.

அரசியல் சதுரங்கம்

நுழையும் மாநிலங்களில் எல்லாம் சாதிகளைக் கணக்கிட்டு, புதிய காய்களை உருவாக்கும் அமித் ஷா கால பாஜக, தமிழ்நாட்டில் தன்னுடைய ஆட்டத்தை இதன் வழியாகவே தொடங்குகிறது என்று சொல்லலாம். தேவேந்திர குல வேளாளர்களின் குரலுக்கு இன்றளவும் வெளிப்படையான ஆதரவு ஒரு பெரிய கட்சித் தலைவரிடமிருந்து வந்திருக்கிறது என்றால், அது பாஜகவிடமிருந்துதான். மோடி இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் என்றே சொல்கிறார்கள் இச்சமூகத் தலைவர்கள்.

திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல் தவிக்க ஒரே காரணம்தான்: உண்மையிலேயே தேவேந்திர குல வேளாளர் என்ற குரல், உள்ளடக்கும் ஏழு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து மக்களும் இக்கோரிக்கையை ஆதரிக்கிறார்களா அல்லது இது மேலோட்டமான குரலா என்பது தெரியாததே அது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இதை எப்படி அணுகுவது என்றே தெரியாத நிலையில் இருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலித் அரசியலைப் பிளக்கும் முயற்சியாக இதைப் பார்ப்பது சரியான அணுகுமுறைதான் என்றாலும், அதைத் தடுக்க அதனிடம் எந்த உத்தியும் இல்லை.

தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவிக்கக்கோரும் 7 சமூகங்களின் வாழ்க்கை முறை, பண்பாடு போன்றவற்றின் ஒற்றுமை குறித்து ஆராய 2017-ல் மானுடவியல் நிபுணர்களின் குழு ஒன்றை அமைத்தார் முதல்வர் பழனிசாமி. ஓராண்டில் அந்த அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதை வெளியிடுவதைத் தொடக்கமாகக் கொண்டு, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து விஷயங்கள் நடக்கும் என்று தோன்றுகிறது.

எப்படியும் மத்தியில் – ஏன் மாநிலத்திலும்தான் – எல்லா அதிகாரங்களோடும் இருக்கும் பாஜக, அதன் ஆட்டத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், ஏனைய கட்சிகள் இனியும் மௌனமாக இருக்கும் என்று யாரும் சொல்லிவிட முடியாது. அந்த வகையில் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’ என்ற தனி அடையாளம் தன் பயணத்தைத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

- கே.கே.மகேஷ்,
தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தேவேந்திர குல வேளாளர்நாங்குநேரிஅரசியல் திருப்பம்வாதிரியார்கடையர்அரசியல் முகங்கள்புறக்கணிப்புகளின் எதிரொலிகோரிக்கைஅரசியல் சதுரங்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author