Published : 05 Nov 2019 08:27 am

Updated : 05 Nov 2019 08:27 am

 

Published : 05 Nov 2019 08:27 AM
Last Updated : 05 Nov 2019 08:27 AM

அமெரிக்காவை ஊனமாக்கும் அமெரிக்கர்கள்! 

disabled-americans

தாமஸ் எல்.ப்ரீட்மன்

அமெரிக்காவின் மிக மோசமான எதிரிகள் அதன் வலிமையைச் சீர்குலைக்க ஆண்டுக்கணக்காக யோசித்துத் திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். ஆனால், அவர்களால் முடியாத நாசங்களை நம் நாட்டவர்களே அரசியல் லாபத்துக்காகவும் பணத்துக்காகவும் மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்! நம் ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் நியதிகளையே, அரசு - அரசியல் - வணிகத் தளங்களில் செயல்படும் முக்கியப் பிரமுகர்கள் பலர், அவரவர் வழிகளில் நாசப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் எப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டாலும் நம் நாட்டுக்கு ஏதும் ஆகிவிடாது என்ற நினைப்பிலேயே இப்படிச் செயல்படுகின்றனர். அவர்கள் நினைப்பது தவறு. அமெரிக்காவை நம்மால் சிதைத்துவிட முடியும். இப்போதே நாம் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். ரஷ்யாவுடனான பனிப்போர் காலத்திலும், வியட்நாமில் நடந்த போரின்போதும், வாட்டர்கேட் அரசியல் உளவு ஊழலின்போதும் நம் நாட்டுக்கு இப்படியொரு ஆபத்து நேரிட்டதில்லை.

ஆட்டம் காணும் ஜனநாயகம்

குடியரசுக் கட்சியினருக்கு இப்போது தெளிவான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒன்று, சட்டப்படி அதிபரைப் பதவியிலிருந்து விலகக்கோரும் தீர்மான நடைமுறையைத் தொடரலாம் அல்லது நீதித் துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் மோதல் நடைபெற அனுமதிக்கலாம். ஐயகோ, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துவிட்டதைப் போலத் தோன்றுகிறது.

ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் ஊதிப் பெரிதாக்கும். ‘புதிய சதி’ கோட்பாடுகளை ஒப்புக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதை நியாயப்படுத்துகின்றனர். அதிபர் மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதே ஒருதலைப்பட்சமானது என்று மக்களைத் தவறாக நம்பவைக்க முயன்றனர். குடியரசு, ஜனநாயகக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரு தரப்பு வழக்கறிஞர்களும் இணைந்து நடத்திய விசாரணையையே ஒருதலைப்பட்சமானது என்று காட்ட முற்பட்டனர்.

தங்களுடைய தொழிலை நேர்மையாகச் செய்ய வேண்டும் என்ற உந்துதலால், அதிபராக இருந்தாலும் ட்ரம்புக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வந்த அமெரிக்கத் தூதர்கள், உளவுப் பிரிவு அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கிப் பேசுவதன் மூலம், எதுவுமே சட்டப்படியும் நியாயப்படியும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களையும் தாக்குகின்றனர்.

அமெரிக்க அதிகாரிகள் சுயேச்சையாகச் செயல்பட்டு தகவல்களையும் தரவுகளையும் அளித்து உலகின் பிற நாடுகளால் பொறாமைப்படும் நிலைக்கு அமெரிக்காவை உயர்த்தியுள்ளனர். நம் அரசின் மீதான நம்பகத்தன்மையை வளர்த்தவர்கள் அவர்கள். பிற நாடுகளில், தங்களுக்கான சேவைகளைப் பெறவே அரசு அதிகாரிகளுக்கு மக்கள் கையூட்டு தந்தாக வேண்டும்.

இறுதியாக, இதில் வருகிறவர்கள் இணையதள நிறுவன அதிபர்கள்; சமூக ஊடகங்களையே ஆயுதங்களாக்கிய இவர்கள், நீண்ட காலமாக எவருடைய கவனத்தையும் பெறாமல் இருந்தார்கள். இந்த ஊடகங்கள் நம்முடைய சுதந்திரமான பத்திரிகைகளையும் கண்ணாடி அறைகளாகிவிட்டன. செய்தியில் உண்மை எது, கைச்சரக்கு எது என்று தெரியாத வகையில் இரண்டையும் கலந்துவிட்டன சமூக ஊடகங்கள். இதனால் நல்லது எது, தீயது எது என்று தீர்மானிக்கும் ஜனநாயகத்தின் அடிப்படையே ஆட்டம் காண்கிறது.

இதையெல்லாம் வியப்புடன் பார்க்கிறேன். ‘நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? இப்படி நாட்டைப் பலவீனப்படுத்தும் செயல்களைச் செய்துவிட்டு, இரவில் அமெரிக்காவில் உங்கள் வீட்டுக்குத்தான் செல்கிறீர்களா?’ என்று கேட்க விரும்புகிறேன். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்கையே எடுத்துக்கொள்ளுங்கள். “வெளிப்படையாகவே தெரிகிறது பொய் என்று.

அப்படியும் ஏன் அந்தப் பொய்களை உங்களுடைய அமைப்பின் மூலம் தேர்தல் பிரச்சார விளம்பரத்தில் அனுமதிக்கிறீர்கள்?” என்று அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ - கார்டெஸ் சென்ற வாரம் நடந்த விசாரணையின்போது சக்கர்பர்கிடம் கேட்டார். சக்கர்பர்க் அதற்கு நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.

மழுப்பினார். பிடேன் தொடர்பாக ட்ரம்ப் சார்பில் வெளியான பொய்த் தகவல்கள் அடங்கிய தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே 50 லட்சம் ஃபேஸ்புக்வாசிகள் பார்த்திருக்கிறார்கள். இவையெல்லாம் சக்கர்பர்குக்குப் பணத்தை வாரி வழங்குகின்றன. அவரோ பத்திரிகைச் சுதந்திரத்தைக் காப்பதாகக் கூறுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு விசாரணையின்போதுகூட அவரால் தான் செய்ததை விளக்கவோ நியாயப்படுத்தவோ முடியவில்லை.

சக்கர்பர்கின் முன்னுரிமை

அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்கள் உண்மையிலேயே சொல்வது என்ன என்று சராசரி மக்களால் நீண்டகால அனுபவங்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அதற்கு ஊடகங்கள் துணைபுரிய முடியும். ‘எந்த நாட்டிலும் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கத் துணைபோக மாட்டேன், அரசியல் கட்சிகள் தரும் விளம்பரங்களை அவர்களால் நிறைவேற்ற முடியுமா அல்லது அவர்கள் சொல்வது உண்மைதானா என்று தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படும்வரை அரசியல் விளம்பரங்களையே ஃபேஸ்புக்கில் வெளியிட மாட்டேன்’ என்று மார்க் சக்கர்பர்க் கூற வேண்டும். ஆனால், அவர் அப்படிச் சொல்வார் என்பது சந்தேகம்தான். காரணம், அவருடைய முன்னுரிமை எல்லாம் லாபம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றுக்குத்தான். இவ்விரண்டுக்காக அமெரிக்க ஜனநாயகத்தை ஊனப்படுத்த அவர் தயாராகவே இருக்கிறார்.

வெள்ளை மாளிகை பத்திரிகைத் தொடர்பாளர் ஸ்டெபானி கிரிஷாம் அக்டோபர் 23-ல் வெளியிட்ட அறிக்கையைப் பாருங்கள். அடுத்த அதிபர் தேர்தலில் தனக்கு எதிராகப் போட்டியிடக்கூடிய ஜோ பிடேன் மீது களங்கம் ஏற்படும் வகையில், அவருக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உக்ரைன் அதிபரை ட்ரம்ப் மிரட்டியிருந்தார்.

அதை அவர் மேற்கொள்ள வேண்டும் என்று நெருக்குதல் தர உக்ரைனுக்கான ராணுவ, பொருளாதார உதவிகளைத் தாமதப்படுத்தினார். ஆனால், கிரிஷாமின் அறிக்கை கூறியது என்ன? “அதிபர் ட்ரம்ப் எந்தத் தவறும் செய்யவில்லை! அமெரிக்க அரசின் மீது தாக்குதல் தொடுக்கும் இடதுசாரி சார்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்படாத இடதுசாரி அதிகாரிகளால் ட்ரம்ப் மீது நடத்தப்படும் தாக்குதல் இது” என்றது.

வரலாற்றால் இகழப்படுபவர்கள்

இப்படியொரு தீர்ப்பையே அறிக்கையாக வெளியிட்ட கிரிஷாம் எப்படிப்பட்டவர்? தன்னுடைய எஜமானர்களிடம் விசுவாசத்தையும் அவர்களுக்கு எதிரானவர்களிடம் கடுமையையும் கலந்து காட்டப் பழக்கப்பட்டவர், ஊழலில் திளைத்த அரிசோனா மாநில குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளுக்காகப் பத்திரிகைகளைச் சாடியவர். பில் டெய்லர் யார்? பொது சேவையிலேயே தன் காலத்தைக் கழித்தவர்.

ஜனநாயக, குடியரசுக் கட்சி ஆட்சிகளில் மிக கண்ணியமாகப் பல பதவிகளை வகித்தவர். பல்வேறு அமைச்சரவை முகமைகளில் அதிகாரியாக இருந்தவர். அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றியவர். இவரை இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்தவரே வெளியுறவு அமைச்சரான மைக் பாம்பியோதான். இவரை கிரிஷாம் அறிக்கையில் சாடியிருந்தும் அவருக்கு ஆதரவாக பாம்பியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் எப்படிப்பட்டவர்? சொந்த நாட்டு அதிபரால் ஜனநாயகத்துக்கே ஆபத்து என்றாலும், சிறிய அளவிலான அரசியல் தியாகத்தையும் செய்ய விரும்பாதவர். அதிபர் மாளிகையில் பணியாற்றிய ஊழியருடன் அதிபர் பில் கிளிண்டன் கள்ள உறவு கொண்டபோது, அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று தீவிரமாகக் குரல்கொடுத்தவர் கிரஹாம்.

தன்னுடைய அரசியல் எதிரிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபருக்கு நெருக்குதல்தர மக்களுடைய வரிப் பணத்தைப் பயன்படுத்தியவர், இப்போதைய அதிபர் ட்ரம்ப் என்று தெரிந்தும் அவருக்கு எதிராகச் சுண்டுவிரலைக்கூட நீட்ட அஞ்சுகிறவர். கிரஹாம் மட்டுமல்ல; அவரைப் போன்ற அனைவரும் வரலாற்றால் இகழப்படுவது நிச்சயம்.

நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அமெரிக்காஊனம்Disabled Americansசக்கர்பர்கின் முன்னுரிமைவரலாறுஇகழப்படுபவர்கள்அரசுஅரசியல்வணிகத் தளங்கள்முக்கியப் பிரமுகர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author